| என்ன வன்னவைவ ழங்கி நாதனெழி | | லால யம்புகுபு வைகினான் | | அன்ன மத்திரமி றுக்கு நாணகல | | மாரு நூல்சரசு யாகநீர்க் | | கன்னல் கண்மணியின் மாலை தண்டரசு | | கனக வொண்சபைய னைத்துமேல் | | துன்னி வேளடிபெ யர்ந்து போந்துநக | | ருற்ற னன்மறையி னாயகன். |
(இ - ள்.) என்னும் இவைகள் யான் விரும்பும் வரமாம் என்று கூற எம்பெருமான் அவற்றையெல்லாம் வழங்கித் திருக்கோயிலுட் புகுந்து வீற்றிருந்தனன். மேலும், வேதநாயகனாகிய அப்பிரமதேவன், தனது அன்னவூர்தி, படைக்கலன் இறுக்குதற்குரிய கயிறு மார்பிடத்தே பொருந்தும் பூணூல் மானதசரசு, கண்மணிமாலை, யோகதண்டு, அரசு, பொன்னாலியன்ற ஒள்ளிய சபை இன்னோரன்னவெல்லாம் பெற்று முருகன் திருவடியினின்றும் அகன்றுபோய்த் தனது நகரத்தை எய்தினன். (வி - ம்.) நாதன் - முருகன். அகலம் - மார்பு. சரசு - மானதசரசு. மறையினாயகன் - பிரமன். (18) | வாணி தீர்த்தமினி தாடி யங்கண்வளர் | | வாணி நாதனைவ ணங்குவோர் | | பூணு மின்பமுயர் கல்வி செல்வமலி | | போத மின்னவென யார்வலார் | | பேணி மாதவநி ரப்பு மந்தணிர் | | பிறங்கு வேதனருள் பெற்றமை | | காண வோதினம ராவ ணைக்கடவுள் | | காம மார்ந்தபரி சோதுவாம். |
(இ - ள்.) ஈண்டமைந்த நாமகள் தீர்த்தத்தின்கண் இனிதாக ஆடி வளராநின்ற நாமகள் நாதனை ஈண்டு வணங்குமடியார் பெறாநின்ற இன்பம் உயர்ந்த கல்வி செல்வம் மிக்க பேரறிவு முதலிய பேறுகளைப் பிறவிடத்தே பெறுதற்கு யாரே வல்லுநர் ஆவர். பாதுகாத்துப் பெரிய தவத்தினை வளர்க்கும் துறவோரே ஈண்டு விளங்குகின்ற பிரமதேவன் முருகப்பெருமான் திருவருளைப் பெற்ற வரலாற்றினை நீயிர் உணரக் கூறினேம். இனித் திருமால்தான் விரும்பிய பேற்றினைப் பொருந்திய வரலாற்றினையும் கூறுவேம் கேண்மின். (வி - ம்.) வாணி - கலைமகள். வாணிநாதன் - வாணியால் வழிபடப்பட்ட சிவபெருமான். யார் பிறவிடத்துப் பெறவலார் என்க. அராவணைக் கடவுள் - திருமால். (19) பிரம னருள் பெறுபடலம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம் - 2096 |