நாரணனருள்பெறு படலம் | தொள்ளை பூத்தல ருளத்தவர் நீக்கமுந் | | தூய நேயமலி தொண்டர்கள் சேர்வையும் | | கள்ள வைம்பொறியும் வென்றெழு வீரமுங் | | காழி லாதகலை ஞானவு ணர்ச்சியும் | | தெள்ளு பேரொளியின் மூழ்கித் திளைத்தலுஞ் | | சென்று தாக்கும்வினை தீர்த்திடு சூழ்ச்சியும் | | அள்ளி யள்ளிவர மென்னவ ழங்குமா | | லறிவி னூடுவளர் மாதவ நாதனே. |
(இ - ள்.) அறிவிற்கு அறிவாக அறிவினூடே வளராநின்ற மாதவநாதன் என்னுந் திருப்பெயரையுடைய எம்பெருமான் தன்னடியார்க்குப் பேதைமை மிக்கு விரியாநின்ற நெஞ்சத்தையுடையோரை அகலுதலும், தூய அன்புபெருகிய மெய்யடியார் கூட்டரவும், வஞ்சமுடைய ஐந்து பொறிகளையும் வென்றுயரும் ஆண்மையும், குற்றமில்லாத கலையினையறியு முணர்ச்சியும் தெள்ளிய பேரொளியாகிய திருவருளிலே செருக்கின்றி மூழ்கி அதனை நுகர்ந்திருக்கும் செயலும் வந்து வந்து மோதாநின்ற வினைகளை ஒழிக்கும் உபாயமும் வரமாக வேண்டுமளவும் அள்ளி அள்ளி வழங்கா நிற்பன். (வி - ம்.) தொள்ளை - ஈண்டு பேதைமை மேற்று. சேர்வை - கூட்டரவு. காழ் - குற்றம். ஒளி - அருளொளி. ஆல் : அசை. படலத்திற்கேற்பத் திருமால் அறிவினூடு வளர்மாதவன் என்றுமொரு பொருள் கொள்க. (1) | பூத்த தாமரை யிருக்கு மணங்கு | | பொங்கொ ளிக்கழ லடித்துணை யல்குல் | | யாத்த மேகலை வயங்கு மடிக்க | | ணிருத்தி நாளும்வரு டத்துயில் கொள்வோன் | | நீத்த தன்வள நிரப்புதல் வேட்டு | | நீடு வாழ்க்கையின்வை குந்தம்வி டுத்துத் | | தூத்த குந்தணிகை மால்வரை மேல்பாற் | | சூழ லோசனை யரைக்கண டுத்தான். |
(இ - ள்.) மலர்ந்த செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் மிக்க ஒளியையுடைய வீரக்கழலணிந்த திருவடிகளைத் தனது அல்குலிடத்தே கட்டப்பட்ட மேகலையணி விளங்குகின்ற மடியின்கண் இருத்தி நாடோறும் வருடாநிற்ப அறிதுயில் கொள்வோனாகிய திருமால் தான் இழந்துவிட்ட தனது செல்வங்களை மீண்டும் எய்திக் கோடற்கு விரும்பித் தனது நெடிய வாழ்க்கைக்கிடமான வைகுந்தத்தை விடுத்துவந்து தூய்மையுந் தகுதியுமுடைய திருத்தணிகை என்னும் |