பாடுவது; இங்ஙனம் பாடும் நூலினது ஈற்றுச்செய்யுளின் அந்தமே முதற் செய்யுளின் ஆதியாக அமையவைத்தல், மண்டலித்த லெனப்படும். இது, தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்றாம். பதிற்றந்தாதி, நூற்றந்தாதி என்ற வகைகளில் இந்நூல், நூற்றந்தாதியாம்; அதாவது - நூறு வெண்பாவினாலேனும், நூறுகட்டளைக்கலித்துறையினாலேனும் அந்தாதித் தொடையாற் கூறுவது. "முதனூல் கருத்தன் அளவு மிகுதி, பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும், இடுகுறியானும் நூற்கு எய்தும் பெயரே" என்று கூறப்படுகின்ற நூற்பெயர்வகைகளுள் நுதலிய பொருளினாலும் தன்மையினாலும் பெயர்பெற்றது இந்நூலென அறிக; (நுதலியபொருள் - நூலிற், கூறப்பட்ட விஷயம், தன்மை - நூலின் இயல்பு.) இங்கு 'அரங்கம்' என்பது - அத்திருப்பதியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானைக் குறித்தது; இலக்கணை. இனி, "திருவாளன் திருப்பதிமேல் திருவரங்கத் தமிழ்மாலை விட்டுசித்தன் விரித்தன" என்று பெரியாழ்வார் திருமொழியிற் கூறியபடி திருவரங்கத்தின் விஷயமான தமிழ்த்தொடை யாதல்பற்றி 'திருவரங்கத்தந்தாதி' எனவும் தகும்; (மேற்காட்டிய அருளிச் செயலின் வியாக்கியானத்தில் 'தேஸ்யரான பெருமாளைச் சொன்னதெல்லாம் உபஸர்ஜநகோடியிலேயாய், அத்தேசமேயாய்த்து இத்திருமொழிக்கு விஷயம்' என்றது காண்க.) எனவே, திருவரங்கத்தைப்பற்றிப் பாடியதொரு பிரபந்தமென்பது பொருளும், திருவரங்கத்திலெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானைக் குறித்துப் பாடியதொரு நூலென்பது கருத்து மாகலாம். 'கோயிலந்தாதி' என்பதற்கும் இங்ஙனமே கொள்க. ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலில் "விருந்தே தானும், புதுவது கிளந்த யாப்பின் மேற்றே" என்பதனால், 'விருந்துதானும், பழங்கதை மேலதன்றிப் புதிதாகத் தாம்வேண்டியவாற்றால் தொடுக்கப்படுந் தொடர் நிலைமேலது' என்று கூறினமையின், இந்நூல் அங்ஙனங்கூறிய விருந்தா மென்று உணர்க. அச்சூத்திரவுரையில் அந்தாதியும் கலம்பகமும் முதலாயின உதாரணங்காட்டப்பட்டுள்ளவாறுங் காண்க. இனி, இதனைச் சிறுகாப்பியத்துள் அடக்குவர் பிற்காலத்தார். இப்பிரபந்தம், தோத்திரரூபமானது. இந்நூலிலுள்ள கலித்துறைகள் யாவும் யமக மென்னுஞ் சொல்லணி யையுடையன வாதலால், இந்நூல் யமகவந்தாதியாம். யமகமாவது - பலஅடிகளிலாயினும் ஓரடியிற்பலவிடங்களிலாயினும் வந்தஎழுத்துத் தொடர்களே மீண்டும்வந்து பொருள்வேறுபடுவது; இது, தமிழில் மடக்கு என்னப்படும். இந்நூற்செய்யுள்களிலெல்லாம் நான்கடிகளிலும் முதலெழுத்துக்கள் சில ஒன்றிநின்று வெவ்வேறு பொருள்விளைத்தல், இடையிட்டுவந்த முதல் முற்று மடக்கு எனப்படும். இந்நூல் - நூற்புறமாக முதலிற்கூறப்பட்ட காப்புச்செய்யுள் ஐந்தும், நூலினிறுதியிற் கூறப்பட்ட தற்சிறப்புப்பாயிரச்செய்யுள் ஒன்றும் தவிர, அந்தாதித்தொடையாலமைந்த நூறு கட்டளைக்கலித்துறைகளை யுடையது. சொற்றொடர்நிலைச்செய்யுள் பொருட்டொடர்நிலைச்செய்யுள் என்ற வகை |