பக்கம் எண் :

திருவரங்கத்தந்தாதி121

முக்தராவார் - இவ்வுலகங்களிற் கருமவசத்தராயிருந்து பின்பு கடவுளருளாற் பிறப்பையொழித்து முத்திபெற்றவர். "ஏறாளுமிறையோனுந் திசை முகனுந் திருமகளுங் கூறாளுந் தனியுடம்பன்" என்ற அருளிச்செயலின் பொரு ளமைய, "அத்தரங்க" என்றார். அபயமென்றது - அஞ்சாதேயென்று என்னைப் பாதுகாத்தற்கு உரியவன் நீ யென்றும், அஞ்சாதேயென்று உன் னாற்பாதுகாக்கப்படுதற்கு உரியன் யானென்றும் கருத்துப்படும். "அத்தரங்க அபயமென்று ஆர்க்கும் திரைப்பொன்னி" என்றது - தற்குறிப்பேற்றவணி.

பவம், தீரம் - வடசொற்கள். தேவரொடும் என்ற வும்மை, தீரத்தார் என்பதனோடும் எடுத்துக்கூட்டப்பட்டது. பணி - பணிவிடை, செயலென்பது என்றவிடத்து, 'என்பது' - பகுதிப்பொருள்விகுதி, ஒர்தீர் - ஏவற்பன்மை முற்று; ஈர - விகுதி.

(100)

பணவாளரவினரங்கேசர்தாளிற்பரிதிவளை
நிணவாளஞ்சார்ங்கங்கதைதோளிற்சாத்தினனீணிலமேற்
குணவாளராம்பட்டர்க்கேழேழ்பிறப்புங்குடியடியான்
மணவாளதாசன்யமகவந்தாதிவனைந்தனனே.

(இ - ள்.) நீள் நிலம்மேல் - நீண்ட நிலவுலகத்திலே, - குணம் ஆளர் ஆம் பட்டர்க்கு - உத்தமகுணங்களையுடையவரான பட்டரென்னும் ஆசாரி யர்க்கு, ஏழ் ஏழ் பிறப்பும் குடி அடியான் - பதினான்கு தலைமுறைகளிலும் (தொன்றுதொட்டுப்) பரம்பரையாக அடியவனான, மணவாளதாசன் - அழகியமணவாளதாசன், - யமகம் அந்தாதி வனைந்தனன் - யமகவந்தாதிப்பாமா லையைத் தொடுத்து, - பரிதி - சக்கரமும், வளை - சங்கமும், நிணம் வாள் (பகைவர்களின்) கொழுப்புத் தோய்ந்த வாளும், அம் சார்ங்கம் - அழகிய சார்ங்க மென்ற வில்லும், கதை - கதையும் ஆகிய பஞ்சாயுதங்களையும் தோளின் - (தமது) திருக்கைகளிற் கொள்பவரான, பணம் வாள் அரவின் அரங்கஈசர் - படத்தையுடைய ஒள்ளிய திருவனந்தாழ்வானைச் சயனமாக வுடைய ஸ்ரீரங்கநாதரது, தாளில் - திருவடியிலே, சாத்தினன் - சமர்ப்பித்தான்; (எ - று.)

செய்யுளுறுப்பு இருபத்தாறனுள் "மாட்டு" என்னும் உறுப்புப்பற்றி, பொருட்பொருத்தத்துக்கு ஏற்பச் சொற்கள் எடுத்துக்கூட்டப்பட்டன; கொண்டுகூட்டுப்பொருள்கோள். தோள் = கை: "தோளுற்றொர்தெய்வந் துணையாய்" என்ற விடத்துப் போல். "பரிதி வளை நிணவா ளஞ்சார்ங்கம் கதை தோளின் அரங்கேசர்" என்றதனை, "தொனிதக்க சங்கந் திருச்சக் கரஞ் சுடர்வாண் முசலங், குனிதக்க சார்ங்கந் தரித்தா ரரங்கர்" என்பத னோடு ஒப்பிடுக.

திருவரங்கத்தந்தாதி முற்றிற்று