பக்கம் எண் :

120திருவரங்கத்தந்தாதி

சிந்துஆ, ஆகுஉலகம் - வினைத்தொகைகள். யமகத்தின்பொருட்டு, "ஆக்குலம்" என வலிமிகவில்லை. இரண்டாமடியில், சிந்து - ஹிந்து என்ற வட சொல்லின் விகாரம். மூன்றாமடியில், சிந்தா - சிந்தன் என்பதன் விளி. சிந்தன் = குறளன்: இரண்டடியுயரமுள்ளவனை "குறளன்" என்றும், மூன்றடி யுயரமுள்ளவனை "சிந்தன்" என்றும் குறிக்கிற சிறிதுவேறுபாட்டை இங்குக் கருதாமல், பரியாயநாமமாகக்கொண்டு கூறினார்; அன்றியும், வாமனமூர்த் தியின் வளருந்தன்மையைக் கருதி "சிந்தன்" என்றா ரெனக் கொள்ளினுமாம். சிந்தாகுலம் - தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர். தெய்வமும் என்ற இறந்தது தழுவியஎச்சவும்மை, பெயர்ச்செவ்வெண்ணினீற்றில் வந்தது.

100.தீரத்தரங்கப்பவநோய்துடைத்தென்னைத்தேவரொடுந்
தீரத்தரங்கப்பணிகாப்பவைத்தசெயலென்பதோர்
தீரத்தரங்கவபயமென்றார்க்குந்திரைப்பொன்னிசூழ்
தீரத்தரங்கன்சிலம்பார்ந்தசெய்யதிருவடியே.

(இ - ள்.) "அத்தர் அங்க - தலைவர்களான பிரமருத்திரர்களைத் (தனது) திருமேனியிற் கொண்டருள்பவனே! அபயம் - அடைக்கலம்", என்று - என்று ஓலமிடுவதுபோன்று, ஆர்க்கும் - ஆரவாரிக்கின்ற, திரை - அலைகளையுடைய, பொன்னி - காவேரியாறு, சூழ் - சூழ்ந்த, தீரத்து - வரம்பையுடைய, அரங்கன் - திருவரங்கத்தையுடையவனான எம்பெருமானது, சிலம்பு ஆர்ந்த செய்ய திரு அடி - சிலம்பென்னும் ஆபரணம் பொருந்திய சிவந்த சீர்பாதம், தரங்கம் பவம் நோய் தீர துடைத்து - அலைபோல மாறிமாறிவந்து வருத்துகின்ற (எனது) பிறப்புத்துன்பத்தை யொழியுமாறு நீக்கி, என்னை - அடியேனை, தேவரொடும் - நித்தியசூரிகளோடும், தீரத்தர் (ஒடும்) - ஞானிகளாய் வீடுபெற்றவர்களான முக்தர்களோடும், அங்கு - அவ்விடத்தில் (பரம பதத்தில்), அ பணி - (எம்பெருமானுக்குச் செய்யும்) அந்தக் கைங்கரியங்களை, காப்ப - காத்திருந்து தவறாமற்செய்யுமாறு, வைத்த -, செயல் என்பது - செய்கையை, ஓர்தீர் - அறியுங்கள்; (எ - று.)

திருவரங்கனுடைய திருவடிகள், என்னைப் பிறப்பொழித்து பரமபதத் தில் நிச்சியமுக்தர்களுடனிருந்து பலவகையான பகவத்கைங்கரியங்களைப் புரியச்செய்தன; ஆதலால், உலகத்தீர்! நீவிரும் அவன் திருவடிகளையடைந்து உய்யுங்க ளென்பதாம். திருவடியடைந்தேன் பரமபதத்துக்குஉரியனானே னென்பது, குறிப்பு. எம்பெருமான் தன்னடியார்க்குத் தவறாது பரமபதந் தந்தருள்வ னென்னும் நம்பிக்கை கொள்ளுதல் ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாய மாதலால், பரமபதம்பெறுவே னென்னாது தெளிவுபற்றிப் பெற்றேனென் பார், "பணிகாப்ப வைத்த செயல்" என்றார்: நம்மாழ்வார் "அவாவற்று வீடுபெற்ற" என்றாற் போல. "அயர்வறு மமரர்கள்" என்ற இடத்தில் "அமரர்கள்" என்றது போல, இங்கு "தேவர்" என்றது - நித்தியசூரிகளைக் குறித்தது. தீரர் என்ற சொல்லுக்கு ஞானிகள் என்ற பொருள், வேதத்திலும் வந்துள்ளது; இங்கு, அப்பெயர், முக்தர்களைக் குறித்தது. நித்யராவார் - பிறப்புஇறப்புஇல்லாமல் எம்பெருமான்போலவே என்றும் ஒரு படிப்படப் பரமபதத்தில்வாழ்கிற அநந்த கருட விஷ்வக்ஸேநர் முதலியோர்.