அமுது ஆற்றில் படிந்து - அம்ருதமயமான விரஜாநதியில் நீராடி, ஆங்கு ஆர் அ(ம்)மான் அடி காண்பேன் - அவ்விடத்தில் (பரமபதத்தில்) எழுந்தருளி யிருக்கின்ற ஸ்வாமியினுடைய திருவடியைத் தரிசிப்பேன்; (எ - று.) திருவரங்கனுக்குத் தொண்டனான நான் அவனருளாற் பரமபதத்திற் சென்று அவனைத் தரிசிப்பே னென்பதாம். எம்பெருமானது நீலமேனிக்குக் காளமேகமும் அதிலுறையுந் திருமகளுக்குக் காளமேகத்தில்விளங்கும் மின்னலும் உவமை யென்பது தோன்ற, "ஆங்காரமாமின்னைத்தோய்மார் பரங்கன்" என்றார். அளையினையுண்டாங்கு ஆர மாநிலமுண்டான் - எம் பெருமான் விரும்பியுண்ணும் உணவாதலில் வெண்ணெயோடு உலகோடு வாசியில்லை யென்பது குறிப்பு. ஆங்கு - உவமவுருபு. பதினான்குலோகங்க ளும் அடங்கிய அண்டகடாஹம் முறையே ஒன்றுக்குஒன்று பதிற்றுமடங் கான ஜலம் அக்நி வாயு ஆகாசம் அகங்காரம் மஹாந் ப்ரக்ருதி என்ற ஏழு ஆவரணங்களாலுஞ் சூழப்பட்டுள்ள தென்பதையும், இப்படிப்பட்ட அநந்த கோடி பிரமாண்டங்க ளடங்கிய மூலப்பிரகிருதிக்கு அப்புறத்தே விரஜாநதிக்கு அப்பால் ஸ்ரீமந்நாராயணன் எழுந்தருளியிருக்கும் பரமபதம் உள்ள தென்பதையும் தத்துவநூல்களால் விளங்க உணர்க. முதலடியில், "ஆம் கார் அம் மா மின் ஐ" என்ற பதப்பிரிவில், "ஐ" என்னும் இரண்டனுருபை "மா" என்றதனோடு கூட்டிப் பொருள்காண்க. அஹங்காரம், மஹாந், ப்ரக்ருதி என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. அம்மான் என்பது, "அமான்" எனத் தொக்கது. "அவன்ற னருள் சிந்தித்தே" - அவனருள் சிந்தித்தலல்லது, வீடுபேற்றுக்கு வேறுஉபாய மில்லை யென்றபடி. (98) 99. | சிந்தாகுலமுய்யக்குன்றெடுத்தாய்தென்னரங்கசுற்றுஞ் | | சிந்தாகுலகம்படைத்தளித்தாய்நிலஞ்சென்றிரந்த | | சிந்தாகுலவுசெல்வந்தந்தைதாய்குருதெய்வமுநீ | | சிந்தாகுலமடைந்தேனடியேன்சென்மந்தீர்த்தருளே. | (இ - ள்.) சிந்து - (இந்திரனேவிய மேகங்கள் விடாப்பெருமழை) பொழிதலால் வருந்திச் சிதறிய, ஆ குலம் - பசுக்கூட்டம், உய்ய - உயிர்பிழைக்கும்படி, குன்று எடுத்தாய் - கோவர்த்தனமலையை யெடுத்துக் குடையாகப் பிடித்தவனே! தென் அரங்க - அழகிய திருவரங்கத்தை யுடையவனே! சுற்றும் சிந்து ஆகு - சுற்றிலும் கடல் அமையப்பெற்ற, உலகம் - உலகத்தை, படைத்து - சிருஷ்டித்து, அளித்தாய் - ரக்ஷித்தவனே! சென்று - (மகா பலிசக்கரவர்த்தியினிடத்துப்) போய், நிலம் இரந்த - மூன்றடிநிலத்தை யாசித்த, சிந்தா - வாமனமூர்த்தியே! - குலவு - சிறப்புற்று விளங்குகின்ற, செல்வம் - செல்வமும், தந்தை - தந்தையும், தாய் - தாயும், குரு - ஆசாரியனும், தெய்வமும் - கடவுளும், (ஆகிய எல்லாம்), நீ - (எனக்கு) நீயே; சிந்தா ஆகுலம் அடைந்தேன் அடியேன் சென்மம் தீர்த்தருள் - (பிறப்புத்துன்பத்தைக்குறித்து) மனக்கலக்க மடைந்துள்ளவனான அடியேனுடைய பிறப்பை யொழித்துக் கருணைசெய்வாய்; (எ - று.) |