97. | அன்றேயடையவுனக்கேயடிமையென்றாய்ந்துணர்ந்தார் | | அன்றேயடையப்படுவாருனையரங்காவனத்திய் - | | அன்றேயடையையயில்வோருமீதறியாரறிஞர் | | அன்றேயடையைம்புலனாலுநன்கில்லையாங்கவர்க்கே. | (இ - ள்.) அரங்கா - ! - "அடைய - (உயிர்கள்) யாவும், அன்றே - அந்நாளிலேயே (தொன்றுதொட்டே யென்றபடி), உனக்கே அடிமை - உனக்கே அடிமைப்பட்டவை," என்று -, ஆய்ந்து உணர்ந்தார் அன்றே - ஆராய்ந்து அறிந்தவர்களன்றோ, உனை அடைய படுவார் - உன்னைச் சேர்தற்கு உரியர்; வனத்து இயன்றே அடையை அயில்வோரும் - காட்டில் வசித்துக் கொண்டே இலையைப் புசிப்பவர்களான முனிவர்களும், ஈது அறியார் - இந்த உண்மையை யுணரா ராயின், அறிஞர் அன்றே - அறிவுடையார்க ளல்லர்; அவர்க்கு - அவர்கட்கு, ஆங்கு அடை ஐம்புலனாலும் நன்கு இல்லை - அவ்வனத்திலிருந்து அடைக்கப்பட்ட (அடக்கியாளப்பட்ட) பஞ்சேந்திரியங்களாலும் நற்பய னில்லை; (எ - று.) எல்லாச்சேதநாசேதநங்களும் உன்னுடைமையா மென்னும் உண்மை யறிவுள்ளவரே பரமபதத்தில் உன்னைச் சேர்வர்; அஃதில்லாதவர் வனவா சஞ்செய்து இலைமுதலியன புசித்துப் பஞ்சேந்திரியநிக்கிரகஞ்செய்தாலும் பயனில்லை யென்பதாம். முதலடியில், அன்று - காலமுணர்த்துஞ் சுட்டிடைச்சொல். அடைய என்றது - எஞ்சாமைப்பொருளுணர்த்தும். இதற்கு, தாமும் தமதுடைமையு மாகிய எல்லாம் என்று பொருள்கொள்ளுதலு மொன்று. இரண்டாமடியில், அன்றே - தேற்றம். அடையப்படுவார் = அடையத்தகுவார். மூன்றாமடியில், இயன்று ஏய் அடை என்று பிரித்து, ஏய் என்பதற்கு - (அவ்விடத்திற்) பொருந்திய என்று உரைப்பாரு முளர்; வினைத்தொகை. நான்காமடியில், "அன்று" என்ற எதிர்மறைக்குறிப்புமுற்றுப் பலர்பாலுக்கு வந்தது; ஏ - தேற்றம். அடை புலன் - வினைத்தொகை. ஆங்கு அசையுமாம். (97) 98. | ஆங்காரமாமின்னைத்தோய்மார்பரங்கனளையினையுண்டு+ | | ஆங்காரமாநிலமுண்டாற்குத்தொண்டனிவ்வண்டத்தப்பால் | | ஆங்காரமான்பகுதிப்புறம்போயமுதாற்றிற்படிந்து+ | | ஆங்காரமானடிகாண்பேனவன்றனருள்சிந்தித்தே. | (இ - ள்.) கார் - மேகத்தில், ஆம் - உண்டாகின்ற, அம் - அழகிய, மின் - மின்னல்போன்றவளான, மாவை - இலக்குமியை, தோய் - தழுவுகிற, மார்பு - மார்பையுடைய, அரங்கன் - ரங்கநாதனும், அளையிணை உண்டு ஆங்கு - வெண்ணெயை யுண்டாற்போலவே, ஆர - நிரம்ப, மா நிலம் உண்டாற்கு - பெரிய உலகத்தை உட்கொண்டவனுமான திருமாலுக்கு, தொண்டன் - அடியன் (யான்); (ஆதலால்), அவன்தன் அருள் சிந்தித்து - அப்பெருமானுடைய கருணையைத் தியானித்து, - இ அண்டத்து அப்பால் - இந்த அண்டகடாஹத்துக்கு அப்புறத்திலே, ஆங்காரம் மான் பகுதி புறம் போய் - அகங்காரம் மஹாந் ப்ரக்ருதி என்ற ஆவரணங்களைக் கடந்து மேற்சென்று, |