மாலை யென்பது - பலவகைப் பிரபந்தங்களுள் ஒன்று. அதன் இலக்கணம் - ஒருவிஷயத்தைக்குறித்துப் பலசெய்யுள் கூறுவது. திருவரங்கம் பெரியகோயிலி லெழுந்தருளியிருக்கின்ற திருமாலின் திருவடிகளிலே சூட்டுந் திருமாலை போலுதலால், திருவரங்கத்துமாலை யெனப்பட்டது; "அடிசூட்டலாகு மந்தாமம்," "செய்ய, சுடராழியா னடிக்கே சூட்டினேன் சொன்மாலை," "கற்றினம்மேய்த்த கழலிணைக்கீ, "ற்ற திருமாலை பாடுஞ்சீர்" என்றார் பெரியாரும். "முதனூல் கருத்தன் அளவு மிகுதி, பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும், இடுகுறியானும் நூற்கு எய்தும் பெயரே" என்று கூறப்படுகின்ற நூற்பெயர்வகைகளுள் நுதலிய பொருளினாலும் தன்மையினாலும் பெயர்பெற்றது இந்நூ லென அறிக; (நுதலிய பொருள் - நூலிற் கூறப்பட்ட விஷயம். தன்மை - நூலின் இயல்பு.) இங்கு "அரங்கம்" என்பது - அத்திருப்பதியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானைக் குறித்தது; இலக்கணை, இனி, "திருவாளன் திருப்பதிமேல், திருவரங்கத் தமிழ்மாலை விட்டுசித்தன் விரித்தன" என்று பெரியாழ்வார் திருமொழியிற் கூறியபடி திருவரங்கத்தின் விஷயமான தமிழ்த்தொடையாதல்பற்றி "திருவரங்கத்துமாலை" எனவும் தகும்; (மேற்காட்டிய அருளிச் செயலின் வியாக்கியானத்தில் "தேஸ்யரான பெருமாளைச் சொன்னதெல்லாம் உபஸர்ஜநகோடியிலேயாய், அத்தேசமேயாய்த்து இத்திருமொழிக்கு விஷயம்" என்றது காண்க.) எனவே, திருவரங்கத்தைப்பற்றிப் பாடியதொரு பிரபந்த மென்பது பொருளும், திருவரங்கத்திலெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானைக்குறித்துப் பாடியதொரு நூலென்பது கருத்து மாகலாம். "கோயின்மாலை" என்பதற்கும் இங்ஙனமே கொள்க. ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலில் "விருந்தே தானும், புதுவது கிளந்த யாப்பின் மேற்றே" என்பதனால், "விருந்துதானும், பழங்கதை மேலதன்றிப் புதிதாகத் தாம்வேண்டியவாற்றால் தொடுக்கப்படுந் தொடர் நிலைமேலது" என்று கூறினமையின், இம்மாலை, அங்ஙனங்கூறிய விருந்தா மென்று உணர்க. அச்சூத்திரவுரையில் அந்தாதியும் கலம்பகமும் முதலாயின உதாரணங்காட்டப்பட்டுள்ளவாறுங் காண்க. இனி, இதனைச் சிறுகாப்பியத்துள் அடக்குவர் பிற்காலத்தார். இப்பிரபந்தம், தோத்திரரூபமானது. நூலின் புறமாக முதலிற்கூறிய காப்புச்செய்யு ளொன்றும், நூலின் இறுதியிற்கூறும் "மனிதக்கவிமொழியா மங்கைவாழ்மணவாளவள்ளல், புனிதக்கவிகொண்டுமாலைசெய்தான் புயல்போன்முழங்குந், தொனிதக்கசங்கந் திருச்சக்கரஞ் சுடர்வாண் முசலங், குனிதக்கசார்ங்கந் தரித்தா ரரங்கர் பொற்கோயிலுக்கே" என்னுந் தற்சிறப்புப்பாயிரச்செய்யு ளொன்றும் நீங்கலாக நூற்றுப்பதினொரு செய்யு ளுடையது, இந்நூல், கட்டளைக்கலித்துறை யினால் அமைந்தது. |