கேட்டு அவர்கள் 'கோயிலில் நம்பெருமாள் திருத்தேருத்ஸவங் கண்டருளு கிறது உமக்கு இங்ஙன் எங்ஙனே தெரிந்தது?' என்று நகைத்து 'ஏதோ இவர்க்கு இவ்வாறு திகைப்பு உண்டாயிருக்கிறது: இது இராஜசேவைக்கு மிக விரோதமாகுமே!' என்று அவர்விஷயத்தில் இரக்கமுற்றவர்களாய், நடந்த செய்தியை அரசனுக்கு அறிவித்தனர். இது நிற்க; கோயிலில் திருத்தேரிலே திருத்திரையிற் பந்தத்தின் சுவாலை தாவியெரியும்போது அருகிற் பெரு மாளைச்சேவித்துநின்ற ஐயங்கார் கைகளால் திரையைத் தேய்த்துத் தீயை அவித்திட்டதாக அர்ச்சகர் முதலிய சந்நிதிகைங்கரியபரர்கள் கண்டு உடனே தோஷபரிகாரஞ்செய்து திருத்தேருத்ஸவத்தை நடத்தினார்கள். பின்பு இவ்வரலாறுகளைச் செவியுற்றறிந்த அரசன் ஆச்சரியபரவசனாய் ஐயங்காரைநோக்கி 'திருத்தேருத்ஸவத்திற்கு எங்ஙனே போயினீர்!' என்ன, ஐயங்கார் 'எனக்கு மாநஸாநுபவமே யல்லது கோயிலுக்குப் போனதில்லை' என, அரசன் 'ரதோத்ஸவத்தினன்றுநீர் அங்குஇருந்ததாகப்பலர்சொல்வது பொய்யோ?' என்ன, அப்போது இவர் இங்கிருந்தபடியே உத்தரீயத்தை 'கிருஷ்ண கிருஷ்ண' என்று தேய்த்தது கண்ட சிலர் 'இவர் அப்பொழுது இங்கேதான் இருந்தனர்' என்று உண்மைகூற, அரசன் 'நன்று!' என்று அத் தெய்விகத் திருவருட்செயலைக்குறித்து ஆச்சரியப்பட்டது மன்றி அன்றை யிரவு நித்திரையில் தான் நம்பெருமாள் சந்நிதிக்குப்போனதாகவும், தென் திருக்காவேரியில் ஐயங்கார் நீராட்டஞ்செய்துநிற்கக்கண்டு அவருடனே சந்நிதிக்குப்போய்ப் பெரியபெருமாளைச் சேவித்து மீளும்போது ஐயங்காரைக் காணாது மயங்கியதாகவுங் கனாக்கண்டு, கண்விழித்து, பொழுதுவிடிந்தவுடனே ஐயங்காரை வருவித்து, 'நீர் மகாநுபாவரும் நம்பெருமாளுக்கு அந்தரங்க பக்தருமாக இருக்கின்றதனால், இனி என்னிடம் உத்தியோகஞ்செய்தற்குச் சிறிதுந்தக்கவரல்லீர்; அடியேன் இதுவரையிலுந் தேவரீர்பெருமையை அறியாதுசெய்த அபராதங்களையெல்லாம் பொறுத்து, அடியேன் செய்யவேண்டும் பணிவிடையை நியமித்தருளவேண்டும்' என்று வேண்ட, ஐயங்கார் 'பெரியகோயிலில் எனக்கு நிரந்தரவாசங்கிடைக்கும்படி செய்யவேண்டும்' என்ன, அரசன் அன்றுதொடங்கிக் கோயிலில் அவர்க்கு ஓர் இருப்பிடம் அமைப்பித்து, தளிகைப்பிரசாதமும் அவர்க்குக் கிடைக்குமாறு செய்து அனுப்பிவிட்டனன். அவரும், அவ்வாறே எழுந்தருளியிருந்து, திருவரங்கத்தந்தாதி, திருவரங்கத்துமாலை, திருவரங்கக்கலம்பகம், ஸ்ரீ ரங்கநாயகரூசல், திருவேங்கடமாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகரந்தாதி, நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி என்னும் *எட்டுநூல்களையும் பரப்பிரஹ்மவிவேகம் முதலிய பல நூல்களையும் அருளிச்செய்து, பலநாள் வாழ்ந்திருந்தனர். இவர் திருவேங்கடமாலை முதலிய நூல்க ளியற்றியதைக் குறித்து ஒருசாரார் வழங்குவதொரு வரலாறு வருமாறு:- இவர் ஸ்ரீரங்கநாதனுக்கே தொண்டராகி அப்பெருமானையன்றிப் பிறிதொருதெய்வத்தை மறந்துந்
* இந்த எட்டுநூல்களும், 'அஷ்டப்பிரபந்தம்' எனவும், 'ஐயங்கார்பிரபந்தம்' எனவும் வழங்கும். |