தொழாத மனவுறுதியுடையவராய், அப்பரமன் விஷயமாகவே அந்தாதியும் மாலையும் கலம்பகமும் ஊசலும் பாடியபொழுது, திருவேங்கடமுடையான் இவர்வாயால் தாம் பிரபந்தம் பாடப்பெற விரும்பித் தமது உண்மைவடிவத்துடன் இவரது கனவில் தோன்றி 'வேங்கடத்தின் விஷயமாகச் சிலபிரபந்தம்பாடுக' என்று கட்டளையிட, இவர் அதற்கு இணங்காமல் 'அரங்கனைப் பாடிய வாயாற் *குரங்கனைப் பாடேன்' என்றுகூறி மறுக்க, திருவேங்கடமுடையான் எங்ஙனமாவது இவர்வாயாற் பாடல்பெற அவாக்கொண்டதுமன்றி, எல்லாத்திருப்பதிகளிலும் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் ஒருவனே யென்று இவர்க்குத்தெரிவித்து இவர்கொண்டுள்ள பேதபுத்தியை அகற்றவுங் கருதியதனால், இவர்க்கு உடனே கண்டமாலையென்னுங் கொடியநோய் உண்டாகும்படி செய்ய, அந்த வியாதியால் மிகவருந்திய இவர் அதன்காரணத்தை உணர்ந்துகொண்டு அப்பெருமான்பக்கல் தாம் அபசாரப்பட்ட அபராதம் தீருமாறு உடனே திருவேங்கடமாலை திருவேங்கடத்தந்தாதி என்னும் பிரபந்தங்களை இயற்றி அப்பெருமானைத் துதிக்க, அது பற்றித் திருவுள்ளமுவந்த திருவேங்கடமுடையான் உடனே இவரெதிரில் எழுந்தருளிக் காட்சிதந்து அநுக்கிரகிக்க, அதனால் இவர் அப்பொழுதே அந்நோய் நீங்கப்பெற்றவராகி, பின்பு, அவ்வடமலைக்குஈடான தென்மலையின் விஷயமாக அழகரந்தாதி பாடி, அப்பால் தமது பேதபுத்தி யொழிந்தமை நன்குவிளங்க நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி பாடினர். திருவேங்கடமுடையான் [ஸ்ரீநிவாசன்] ஐயங்கார்க்குச் சேவைசாதித்த இடம் - கோயிலில் சலவைக்கல்மண்டபப்பிராகாரமென்கிற உட்பிரகாரத்தில் தென்கிழக்குப்பக்கத்தில் என்பர். பரமதநிரஸநம்பண்ணி ஸ்வமதஸ்தாபநஞ் செய்தற்பொருட்டு இவர் பாடிய பாடல்களின் தொகுதியே, பரப்பிரஹ்மவிவேக மெனப்படுவது. விசுவரூபதரிசநபசுசம்வாதமென்னும் மறுபெயரையுடைய பரப்ரஹ்ம விவேக மென்னும் நூலின் உரைத்தொடக்கத்தில் அந்நூலின் வரலாற்றைக் குறித்து எழுதியுள்ள விவரத்தை அடியிற்காண்க:- "திருவரங்கத்தமுதனார் திருப்பேரனாராகிய அழகியமணவாளதாச ரென்கிற திவ்வியகவி பிள்ளைப் பெருமாளையங்கார் நம்பெருமாள் முதலிய சில திவ்வியதேசப்பெருமாள் களின் மீது தமிழ்ப்பிரபந்தங்கள் பல செய்தருளுங்காலத்தில், தமிழிலக்கண விலக்கியங்களைக் கற்றுவல்ல சிறந்த புலவர்கள் பலரும் இவருடைய கவிகளிற் சொல்நோக்கு பொருள்நோக்கு முதலியவற்றைக் கண்டுங் கேட்டுங் கொண்டாடுவதை ஆனைக்காவிலிருக்கும்ஆகமவாதிகள் கேள்விப்பட்டு 'இப் படிப்பட்ட வித்துவானால் நம்முடைய ஜம்புகேசுவரச்சிவபெருமான்மீது ஒரு பிரபந்தம் பாடுவித்துக்கொள்ளவேண்டும்' என்னுங் கருத்துடையவர்களாய் ஒருநாள் இவருடைய திருமாளிகையில் வந்து தங்கள்கருத்தை வெளியிட, அதுகேட்டருளி, திரிகரணத்தாலுந் தேவதாந்தரத்தைப்பற்றறவிட்ட சுத்த
* திருவேங்கடமுடையானைக் குரங்கனென்றது, குரங்குகளுடன் மலையில் வாழ்தலால்; "மந்தியாய் வடவேங்கடமாமலை," "வானரமும் வேடுமுடை வேங்கடம்" என்றார் ஆழ்வார்களும். |