பக்கம் எண் :

4பிள்ளையார்பெருமாளையங்கார் வரலாறு

சத்துவ தொண்டக்குல ஸ்ரீவைஷ்ணவசிகாமணியாகிய ஐயங்கார் புன்னகைகொண்டு 'யாம் அரங்கனைப்பாடின வாயினால் மற்றொரு *குருங்கனைப் பாடுவதில்லையே' எனத் திருவாய்மலர்ந்தருள, கேட்டு, 'குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக்கொள்ளுமவரைப்போல நம்முடைய பரமசிவத்தின்மீது பாடல்பெற்றுக்கொள்ள வந்து குரங்கனென்னுஞ் சொல்லைப் பெற்றுக் கொண்டோமே' என்று மனம் பொறாதவர்களாய்ச் சடக்கென எழுந்திருந்து, 'எவ்வகையினாலாவது உம்முடைய வாக்கினால் எங்கள் பரமசிவத்தின் மீது ஒருபாடலாவது பெற்றுக்கொள்ளுகிறோம்' என்று சபதங்கூறித் தங்களிருப்பிடத்திற்குப்போய் அதற்குவகைதேடிக்கொண்டிருந்தனர்கள். இப்படியிருக்கச்செய்தே, கோயிலில் உதயத்தில் திருக்காப்புநீக்கி நம்பெருமாளுக்குச் செய்யுங்கைங்கர்யமாகிய விசுவரூபதரிசநஞ் செய்விக்கப்போகிற சமயத்திற் கொண்டுபோய் அர்ச்சகர் சமர்ப்பிக்கிற பொருள்களில் ஒன்றாகிய கபிலையென்கிற பசுவானது ஒருநாள் ஆனைக்காவைச்சார்ந்த ஒருபுலத்தில் மேய அதை மேற்கூறிய ஆகமவாதிகள் பிடித்து இதனால் தாங்கள் கொண்டகருத்தைஈடேற்றுவித்துக் கொள்ளலாமென நினைத்துக் கட்டியவைத்தனர்கள். அன்று இராத்திரி கோயிலில் அர்ச்சகர்முதலாயினோர் விசுவரூப தரிசநபசுவைக் காணாமல் தேடிக்கொண்டு போகையில், ஆனைக்காவி லிருக்கக் கண்டு ஆகமவாதியர்களைப் பசுவைக்கொடுக்கும்படி கேட்க, அவர்கள் 'உங்களுடைய பிள்ளைப்பெருமாளையங்கார் வந்து கேட்டால் தருகிறோம்' என்றுசொல்ல, அதுகேட்டு, விசுவரூபதரிசநத்துக்குப்ராதக்காலத்தில் வேண்டுமேயென்னும் எண்ணத்தினால் அதை மறுத்து ஒன்றும் பேசாமல் ஒத்துக் கொண்டு, பரபரப்புடன் சென்று ஐயங்காரிடத்தில் விண்ணப்பஞ்செய்ய, "மறந்தும்புறந்தொழாமாந்தர்" என்கிறபடியே அந்தப்பிரபந்நநிஷ்டாநுபவராகிய வைதிகவைஷ்ணவரானவர் அதுகேட்டருளி, 'துஷ்கர்ம காலம்தவிர மற்றைக்காலத்தில் ருத்திரபூமியில் அடிவைப்பது கூடுமோ? அன்றியும், அவ்வாலயத்திற் பிரவேசிப்பது வைதிக வைஷ்ணவனுக்குத் தக்கதன்று: 'ஆனை துரத்திவந்தாலும் ஆனைக்காவில் நுழையாதே என்கிற பழமொழியையேனும் கேட்டதில்லையோ? ஆதலால், அந்த ஆகமவாதியர்களைக் கோயிலிடத்தில் அழைத்துவாருங்கள்' எனச் சொல்லினர். அவ்வாறே அந்த ஸ்ரீவைஷ்ணவர்களும் ஆனைக்காவிற் சென்று அவர்களுக்குச் சொல்ல, எவ்வகையாலாயினும் ஐயங்காரால் ஒருபாடல்பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவர்களும், 'நம்முடைய எண்ணம் நிறைவேறுங் காலம் இதுதான்' என்று அதற்கு ஒத்துக்கொண்டு, அதிகசந்தோஷத்தோடு அக்கபிலையையும் ஓட்டிக்கொண்டு, ஜயவிஜயர்கள் எழுந்தருளியிருக்கும் சந்தநுமகாராஜமண்டபத்தில் வந்து சேர்ந்தனர்கள். ஐயங்காரும் அவ்விடத்தில் எழுந்தருளி, 'கபிலையை


* குரங்கம் - மான்: வடசொல்; அதனை இடக்கையிலேந்தியுள்ளவன், குரங்கன்: எனவே, சிவபிரானாம். அன்றி, குரங்குமுகமுள்ள நந்திகேசுரனை அடிமையாகவுடையனாதல்பற்றியும், அநுமானாக அவதரித்தவ னாதல்பற்றியும், சிவபிரானைக் குரங்க னென்றன ரென்னலாம். கு - குற்சிதமான, ரங்கன் - அம்பலத்தையுடையான் என்றுங் கூறுவர்.