பக்கம் எண் :

பிள்ளையார்பெருமாளையங்கார் வரலாறு5

விடுவதற்கு உங்களுடைய கருத்து ஏது?' என்று கேட்டருள, அவர்கள் 'உம்முடைய வாக்கால் ஜம்புகேசுரச்சிவபெருமானாகிய எங்கள் தெய்வத்தின்மீது ஒருபாடல்பாடித் தருவீரேல், விசுவரூபதரிசனப்பசுவை நாங்கள் விடுவதற்கு யாதோராடங்கமு மில்லை' என்று சொல்லினர். "பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த, நன்மை பயக்கு மெனின்" என்கிற குறளின்படி அவர்கள் சொன்னதற்குஇணங்கினவரைப்போலநடித்து ஐயங்கார் 'நம்பெருமாளுக்கு விசுவரூபதரிசனத்திற்கு மற்றாநாள் பிராதக்காலத்தில் ஆடங்கமாகிறபடியால், அப்பசுவை விடுவீர்களாகில், உடனே யாம் பாடுகிறோம்' என, 'எங்கள் சிவபெருமான்விஷயமாக நீர்பாடுவது யதார்த்தமாகில், அப்பாட்டில் இரண்டொரு சீரையேனும் முன்னே, சொல்லுவீராகில் பசுவை விடுகிறோம்' என்று அவர்கள் சொல்ல, ஐயங்காரும் புன்னகைகொண்டு அவ்வாறே "மங்கை பாகன்" என்று முதலிரண்டு சீரை அருளிச்செய்தமாத்திரத்தில், அப்பசுவை விட்டனர்கள். உடனே ஐயங்காரும் முன் தாம் சொன்ன சீரைத் தொடங்கி,

"மங்கைபாகன் சடையில்வைத்த கங்கை யார்பதத்துநீர்
         வனசமேவு முனிவனுக்கு மைந்தனான தில்லையோ
 செங்கையா லிரந்தவன் கபால மாரகற்றினார்
         செய்யதாளின்மல ரரன்சிரத்தி லான தில்லையோ
 வெங்கண்வேழ மூலமென்ன வந்த துங்கள்தேவனோ
         வீறுவாணனமரி லன்று விறலழிந்த தில்லையோ
 அங்கண்ஞால முண்டபோது வெள்ளிவெற்பகன்றதோ
         ஆதலா லரங்கனன்றி வேறுதெய்வ மில்லையே.

ஆதலால், சீவகோடியிற்சார்ந்தவரேயொழிய உங்கள்தேவதை பரமாத்மா வல்லர்" என்று இச்செய்யுளைச் சொல்லி 'உலகத்துக்குப் பலதெய்வங்கள் உண்டோ? ஒரு தெய்வமேயாம்; அத்தெய்வம் திருவரங்கனேயல்லாமல் வேறில்லை' என, அதுகேட்டு அவ்வாகமவாதியர்கள் 'கிணறுவெட்டப்பூதம் புறப்பட்டாற்போல் இது என்ன விபரீதமாய் முடிந்ததே!' என்று சினங்கொண்டு அந்த ஆகமவாதிகளுக்குட் சிறந்த நிஷ்டாநுபவர்களாகிய சிலவித்வான்கள் வேதவிருத்தமாகிய ஆகமபுராணங்களைக்கொண்டு புலவர் பெருமானாகிய ஐயங்காரோடு வாதுசெய்யத் தொடங்கினர்கள். அவ்வாதி சைவவித்வான்கள் கேட்ட வினாவுக்கு விடை சொல்லியருளிய உத்தரங்களைப் பின்னுள்ளோரும் தெரிந்துகொள்ளும்படி பரமகாருணிகராகிய ஐயங்கார் வெள்ளைப்பாவாற் கூறினார். ஆதிசைவசமயநிஷ்டாநுபவர்களாகிய வித்துவான்கள் சொல்லிக் கொண்டுவந்த பிரச்நைகளுக்கு வடமொழியிலும் தென்மொழியிலும் தெய்வப்புலமையுள்ள வீரவைஷ்ணவசிகாமணியாகிய ஐயங்கார் அருளிச்செய்த விடைகளை மறுத்துச்சொல்ல ஒன்றுந் தோன்றாமல் அவ்வாதியர்கள் 'ஓம்' என்று தங்கள்தங்களிருப்பிடத்துக்குச் சென்றனர்கள்."

'திருநறையூர்நம்பிமேகவிடுதூது' என்றநூலும் இவர்செய்த தென்பர்.

இவர்செய்தனவாகத் தனிப்பாடல்களும் சில வழங்குகின்றன.