பக்கம் எண் :

260திருவரங்கத்துமாலை

கல்லினாற்செய்யப்பட்ட பசுவையும், எதிர் என்று சொல்லி - ஒப்பென்று கூறி, அழுக்கு அடைந்த - அசுத்தமாகிய, நாவை - (எனது) நாக்கை, பரிசுத்தம் பண்ணிய - முழுதும் சுத்தமாக்கின; (எ - று.)

ஆவைக் கல்லாவை எதிரென்று சொல்லுதல் - பரதேவதையாகிய ஸ்ரீமந்நாராயணனையும், தேவதாந்தரங்களையும் ஒப்பென்னுதல். பெயர் சொல்லித்துதித்தமாத்திரத்தில் காமதேனுவைப்போல எல்லாப்பயனையும் அளிக்கவல்ல எம்பெருமானைத்துதியாமல் எவ்வளவுகாலம் துதித்து முறையிட்டாலும் சிறிதும்பயன் தருந்திறமையில்லாத கல்லாற்செய்த பசுவையும் மலட்டுப்பசுவையும் போன்ற தேவதாந்தரங்களைத் துதித்தலால், வாய்வலிப்பேயல்லாமல் அபரிசுத்தமும் நேரிடுமென்க. முன்பெல்லாம் தேவதாந்தரங்களைப் போற்றி எனதுவாய். அபரிசுத்தமாயிற்று; இப்போது எம்பெருமானது திருநாமங்களிற் சிலவற்றைச் சொல்லி அதனால் அவ்வெச்சில்வாயைப் பரிசுத்தமாக்கிக்கொண்டே னென்பதாம். இதனால், யான் இனிப் பிறதேவர்க்கு ஒருபோதும் அடிமைப்பட்டு அவரைத்துதியே னென்பது பெறப்படுதல் காண்க. கோ - விருஷபவேஷம் பூண்டுவந்த அரிஷ்டாசுரன். சகடு - பண்டியில் வந்துஆவேசித்த அசுரன் (சகடாசுரன்.)

(111)

112.மனிதக்கவிமொழியாமங்கைவாழ்மணவாளவள்ளல்
புனிதக்கவிகொண்டுமாலைசெய்தான் புயல்போன்முழங்குந்
தொனிதக்கசங்கந்திருச்சக்கரஞ்சுடர்வாண்முசலங்
குனிதக்கசார்ங்கந்தரித்தாரரங்கர்பொற்கோயிலுக்கே.

(இ - ள்.) புயல் போல் முழங்கும் - மேகம்போல முழங்குகின்ற, தொனிதக்க - போரொலி மிக்க, திரு சங்கம் - அழகிய பாஞ்சசந்நியத்தையும், சக்கரம் - சுதரிசனத்தையும், சுடர் வாள் - ஒளியையுடைய நந்தகத்தையும், முசலம் - கௌமோதகியையும், குனி தக்க சார்ங்கம் - வளைவு பொருந்திய சார்ங்கத்தையும், தரித்தார் - தாங்கியருளியவரான, அரங்கர் - திருவரங்கநாதரது, பொன் கோயிலுக்கு - அழகிய கோயிலுக்கு, - மனிதக்கவி மொழியா - நரஸ்துதியாகக் கவிபாடாத, மங்கை வாழ் - திருமங்கையில் வாழ்கின்ற, மணவாளவள்ளல் - அழகியமணவாளதாசன், புனிதம் கவி கொண்டு - பரிசுத்தமாகிய பாக்களால், மாலை செய்தான் - ஒருமாலையைச் செய்தான்; (எ - று.)

தொனி - த்வநி. முசலம் - முஸலம்; இருப்புலக்கை. மனிதக்கவி - நரகவனம். மனிதக்கவிமொழியா மணவாளவள்ளல். "நாக்கொண்டு மானிடம் பாடவந்தகவியேனல்லேன்" என்றது காண்க. இது, தன்னைப்பிறன்போலும் நாந்தி கூறுகின்ற பதிகச்செய்யுள்; சடகோபர் சம்பந்தர் முதலாயினாரும், திவாகரரும், பதினெண்கீழ்க்கணக்குச்செய்தாரும், வடநூலாரும் முன்னாகப் பின்னாகப் பதிகங்கூறுவது காண்க. இது, தற்சிறப்புப்பாயிர மெனப்படும்.

(112)

திருவரங்கத்துமாலை முற்றிற்று.