6. | தருக்காவலாவென்றுபுல்லரைப்பாடித்தனவிலைமா | | தருக்காவலாய்மயிலேகுயிலேயென்றுதாமதராய்த் | | தருக்காவலாநெறிக்கேதிரிவீர்கவிசாற்றுமின்பத் | | தருக்காவலாயுதன்பின்றோன்றரங்கர்பொற்றாளிணைக்கே. | (இ - ள்.) தரு காவலா என்று புல்லரை பாடி - கற்பகவிருக்ஷத்துக்குத் தலைவனான இந்திரனே யென்று அற்பமனிதர்களைப் புகழ்ந்துபாடியும், தனம் விலைமாதருக்கு ஆவல் ஆய் மயிலே குயிலே என்று - கொங்கையெழிலையுடைய வேசையர்கள்பக்கல் மோகங்கொண்டு (அவர்களை) மயிலேயென்றும் குயிலேயென்றும் கொண்டாடி விளித்தும், தாமதர்ஆய் - தாமதகுணத்தையுடையவர்களாய், தருக்கா - களிப்புக் கொண்டு, அலா செறிக்கே திரிவீர் - நல்லதல்லாதவழியிலேயே திரிகிற புலவர்களே! - (இனி நீவிர் அங்ஙனஞ்செய்வதை விட்டு), பத்தருக்கு ஆ அலாயுதன் பின் தோன்று அரங்கர் பொன் தாள் இணைக்கே கவி சாற்றுமின் - அடியார்கட்கு அருள்செய்யும் பொருட்டாகப் பலராமனுக்குப் பின்னே (அவன்தம்பியாய்க் கண்ணனாய்த்) திருவவதரித்த நம்பெருமாளுடைய உபயதிருவடிகளின் விஷயமாகவே கவிபாடித் துதியுங்கள்; (எ - று.) - ஈற்றுஏகாரம் - பிரிநிலை. எம்பெருமானைத்துதித்து அவனருள்பெற்று அழிவிலாவீடடைதற்கு ஏற்ற சாதனமான நாவையும் கவனசக்தியையும் அவன்விஷயத்தில் உபயோகியாமல்தருமவிரோதமாக நிலையில்லாதபொருளையும்சிற்றின்பத்தையும் பெறுதற்கு ஆசைப்பட்டு அவற்றிற்காக நரகவனமும் விலைமாதரைநயந்துரைத்தலுஞ் செய்யும் அற்பப்புலவர்களை நோக்கி, 'அங்ஙனஞ் செய்ய வேண்டா: துஷ்டநிக்கிரகசிஷ்டபரிபாலநசீலனும் அடியவர்க்கெளியவனுமான ரங்கநாதன் விஷயமாகக் கவிபாடித் துதித்து உய்யுங்கள்' என உணர்த்தியவாறாம். செல்வஅதிகாரங்களிற் சிறப்பை விளக்குதற்கு இந்திரனே யென்றும், சாயலிலும் குரலிலும் உள்ள இனிமையை விளக்குதற்கு மயிலே குயிலே யென்றும் விளிப்ப ரென்க. பலராமன் - கண்ணனுக்குத் தமையன்; திருமாலின் எட்டாம் அவதாரம்: வசுதேவனுடைய பத்தினிகளுள் தேவகியின் கருப்பத்தில் முதலில் ஆறுமாசந்தங்கிப் பின்பு ரோகிணியின் கர்ப்பத்திற் சென்றுசேர்ந்து ஆறுமாசம் இருந்து பிறந்தவன் இவன். ஹலாயுதன் என்ற இவன் பெயர் - ஹல ஆயுத எனப்பிரிந்து, கலப்பையை ஆயுதமாகவுடையவ னென்று பொருள்படும்; தீர்க்கசந்தி; ஹலம் - கலப்பை. கண்ணன் - திருமாலின் ஒன்பதாம் அவதாரம். காவலன் - காத்தலில் வல்லவன். புல்லர் - புன்மையுடையவர். விலைமாதர் - தமது இன்பத்தை விலைகொடுப்பார்யாவர்க்கும் விற்கும் மகளிர். ஒழுக்க வழு, காமம், நீதிவழு முதலியன தாமசகுணகாரியமாம். தருக்கா - உடன்பாட்டு இறந்தகாலவினையெச்சம். அலாநெறி - துர்மார்க்கம், தீயொழுக்கம். நெறிக்கு - நெறியில்; உருபுமயக்கம். ஏ - பிரிநிலையோடு இழிவுசிறப்பு. திரிவீர் - திரிவார் என்பதன் ஈற்றயல்திரிந்த விளி. சாற்றும் இன் பக்தருக்கு, இன்பத்தர் - இனிமையான அடியார்களென்றலு மொன்று. பத்தர் - பக்தர் |