பக்கம் எண் :

30திருவரங்கத்தந்தாதி

யும், தார் அணி தானம் அயிராவதமும் - கிண்கிணிமாலையை யணிந்ததும் மதங்கொண்டதுமான ஐராவதமென்னுந் தெய்வயானையையும், தருகினும் - (வலியக்) கொடுத்தாலும், பொருந்தார் - (மனமிசைந்து அவற்றைப் பெற) உடன்படார்; (எ - று.)

திருமாலடியார்கள் மீளாவுலகமாய்ப் பேரின்பத்திற்குஉரிய இடமான பரமபதத்திற்குச் செல்ல இணங்குவரேயன்றிச் சிலகாலம் சிற்றின்பங்களை யனுபவித்தற்கே உரிய சுவர்க்கலோகத்து இந்திரபதவியைக் கொடுத்தால் அதனையும் சிறிதும்பொருள்செய்யார் என்பதாம்; "ஆனாதசெல்வத்தரம்பை யர்கடற்சூழ, வானாளுஞ்செல்வமு மண்ணரசும் யான்வேண்டேன்" என்று குலசேகராழ்வார் அருளிச்செய்தமை காண்க; பிரமன்கட்டளையால் இந்திரன் சரபங்கமகாரிஷியைச் சத்தியலோகத்துக்கு அழைத்தபோது, மகா விஷ்ணுபக்தரான அம்முனிவர் அம்மேலுலகையுமுட்பட இகழ்ந்து "அற்பங்கருதேன்" என்றும், "மறுகாநெறி யெய்துவென்" என்றும் உரைத்ததும் உணரத்தக்கது.

தாநவன் - (காசியபமுனிவரது மனைவிகளுள்) தநுவென்பவளது மரபினனென்று பொருள்படும்; வடமொழித் தத்திதாந்தநாமம். ஒன்னார் - ஒன்றார் என்பதன் மரூஉ. அவம்செய்தான் - பயனிலதாக்கியவன். தமர் - தம்மவர்: கிளைப்பெயர். அணிது - அண்ணிது; அதாவது - சமீபத்திலுள்ளது என்றும் உரைக்கலாம். எல்லாவுலகங்களினும் மேலுள்ளதான முத்தி யுலகத்தின்சேய்மையை நோக்குமிடத்து, இந்திரனது நகரமான அமராவதி மிக அருகிலுள்ளதாதல் காண்க. சேணுலகமாகிய முத்தியைப் பெறவல்ல பாகவதர்க்குச் சுவர்க்கலோகம் அரியதொன்றன் றாதலால், எளிதுஎன்னும் பொருளில் 'அணிது' என்றதாகவுங் கொள்ளலாம். சங்கம், அமராவதி, தரு, தாநம், ஐராவதம் - வடசொற்கள். அமராவதீ என்ற பெயர் - தேவர் களையுடையதென்று காரணப்பொருள்படும். சுவர்க்கலோகத்தில் பஞ்சதேவ தருக்களின் நிழல் இந்திரன் அரசுவீற்றிருக்கு மிடமாதலை, "இன்றளிர்க் கற்பகநறுந்தே னிடைதுளிக்கு நிழலிருக்கை" என்றதனாலும் அறிக. அயிராவதம் - முதற்போலி. இது, இந்திரனது வெள்ளையானை; நான்கு தந்தங்களையுடையது. தருகின், கு - சாரியை. உம்மை - உயர்வுசிறப்பு.

கண்ணன் சத்தியபாமைக்காகப் பாரிசாததருவைத் தேவலோகத்தினின்று பெயர்த்துப் பூலோகத்துக் கொணர்கையில் வந்துஎதிர்த்துப் போர்செய்த சகலதேவசைநியங்களையும் தனதுசங்கநாதத்தினாலே பங்கப்படுத்தினமையும், மகாபாரதயுத்தத்தில் கண்ணன் அருச்சுனனுக்குச் சாரதியாய் நிற்கையில் தனது சங்கினொலியாற் பகைவர்களை அஞ்சுவித்து அழித்தமையும், மற்றும்பலபோர்களில் இங்ஙனஞ் செய்தமையும்பற்றி, 'சங்கம்வாய்வைத் தொன்னார்தாரணி தானவஞ்செய்தான்' என்றார். "அருட்கொண்ட லன்னவரங்கர்சங்கோசையிலண்டமெல்லாம், வெருட்கொண்டிடர்படமோ கித்துவீழ்ந்தன வேகமுடன், தருக்கொண்டுபோகப்பொறாதே தொடருஞ் சதமகனும், செருக்கொண்ட முப்பத்துமுக்கோடிதேவருஞ் சேனையுமே," தருணவாள்நிருபர்மயங்கிவீழ்தரவெண்சங்கமுமுழக்கி" என்பன காண்க.