4. | தந்தமலைக்குமுன்னின்றபிரானெதிர்தாக்கிவெம்போர் | | தந்தமலைக்குமைத்தானரங்கேசன்றண்பூவினிடைத் | | தந்தமலைக்குத்தலைவன்பொற்பாதஞ்சரணென்றுய்யார் | | தந்தமலைக்கும்வினையானைவார்பலர்தாரணிக்கே. | (இ - ள்.) தாரணிக்கு - பூமியில், பலர் - அநேகர், - தந்தம் மலைக்கு முன் நின்ற பிரான் - தந்தங்களையுடையதொரு மலைபோன்ற யானைக்கு (கஜேந்திராழ்வானுக்கு) எதிரில் எழுந்தருளிக் காட்சிதந்த பெருமானும், எதிர் தாக்கி வெம் போர் தந்து ம(ல்)லை குமைத்தான் - எதிர்த்து மோதிக் கொடியபோரைச்செய்த மல்லர்களைச் சிதைத்து அழித்தவனும், தண் பூவின் தந்து இடை அமலைக்கு தலைவன் - குளிர்ச்சியான தாமரைமலரில் வீற்றிருக்கின்றவளும் நூல்போன்ற (மிகமெல்லிய) இடையையுடையவளும் குற்றமற்றவளுமான திருமகளுக்குக் கொழுநனும் ஆகிய, அரங்கேசன் - ஸ்ரீரங்கநாதனுடைய, பொன் பாதம் - அழகிய திருவடிகளை, சரண் என்று - சரணமாக அடைந்து, உய்யார் - உய்வுபெறாராய், அலைக்கும் தம் தம் வினையால் நைவார் - வருத்துகிற தங்கள்தங்கள் பூர்வகர்மங்களினால் வருந்துவார்கள். வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்குஅழுவார் போலே, சரண் புக்கமாத்திரத்தில் அச்சரணாகதருடைய கருமங்களையெல்லாம் ஒழித்து முத்திதருபவையான எம்பெருமானதுதிருவடிகள் இருக்க அவற்றையடைந்து பிறவிப்பெருங்கடல்கடந்து வாழாது உலகத்திற் பேதையர்பலர் கரும வசப்பட்டு வருந்துவது என்னேயென்று உலகைநோக்கி இரங்கியபடியாம். 'தந்தமலை' எனவே, யானையென் றாயிற்று; மலை - உவமையாகுபெயர்: பருமைவலிமைகளால் உவமம். முன் - இடமுன். இரண்டாமடியில், மலை என்பது - தொகுத்தல். மல் - ஆயுதமின்றி உடல்வலிமைகொண்டு செய்யும் போர்; இங்கு அப்போருடையார்க்கு ஆகுபெயர். இடைத்தந்து - முன்பின் னாகத்தொக்க உவமைத்தொகை; தந்து - வடசொல். அமலை - அமலாஎன்ற வடசொல் ஆவீறு ஐயாயிற்று; இப்பெயர், தூய்மையுடைமையை உணர்த்தும். சரண் - சரணமென்ற வடசொல்லின் விகாரம். தாரணிக்கு - உருபு மயக்கம். தரணி என்ற வடசொல் விகாரப்பட்டது. (4) 5. | தாரணிதானவன்பாலிரந்தான்சங்கம்வாய்வைத்தொன்னார் | | தாரணிதானவஞ்செய்தானரங்கன்றமர்கள்பொருந | | தாரணிதானவமராவதியுந்தருநிழலுந் | | தாரணிதானவயிராவதமுந்தருகினுமே. | (இ - ள்.) தானவன்பால் - அசுரனான மகாபலியினிடத்து, தாரணி இரந்தான் - (மூன்றுஅடி) நிலத்தை யாசித்தவனும், சங்கம் வாய் வைத்து - (தான் தனது) திவ்வியசங்கத்தை வாயில்வைத்து ஊதியமாத்திரத்தாலே, ஒன்னார் தார் அணி அவம் செய்தான் - பகைவர்களுடைய படைவகுப்பி னொழுங்கைப் பழுதுபடுத்தியவனும் ஆன, அரங்கன் - ரங்கநாதனுடைய, தமர்கள் - அடியார்கள், - அணிது ஆன அமராவதியும் - அழகியதாகிய சுவர்க்கலோகத்தையும், தரு நிழலும் - (அங்குள்ள) கற்பகவிருக்ஷங்களின் நிழலை |