பக்கம் எண் :

28திருவரங்கத்தந்தாதி

வின்பத்தையும், தன் - கொடுப்பவன். செய்ய என்பது - சிலம்புக்கும் பாதத்துக்கும் அடைமொழியாகத்தக்கது, சிலம்புவது, சிலம்பு எனக் காரணக்குறி; நூபுரம், பாததண்டை.

(2)

3.தனமாதரஞ்சொற்குதலைப்புதல்வர்தரணியில்லந்
தனமாதரஞ்செயும்வாழ்வஞ்சியேதஞ்சநீயெனப்போந்
தனமாதரங்கிக்கவெற்பெடுத்தாய்தண்ணனந்தசிங்கா
தனமாதரங்கமுள்ளாயரங்காமுத்திதந்தருளே.

(இ - ள்.) ஆ - பசுக்கள், தரங்கிக்க - (இந்திரன்பெய்வித்த மழையி னால்) நிலைகலங்க, வெற்பு எடுத்தாய் - (அவற்றைப் பாதுகாத்தற்பொருட்டுக்) கோவர்த்தநகிரியைக் குடையாக எடுத்துப்பிடித்தவனே! தண் அனந்த சிங்காதன - ஆதிசேஷனைமெத்தென்றசிங்காதனமாகவுடையவனே! மாதரங்கம்உள்ளாய் - பெரிய கடலிற் பள்ளிகொண்டுள்ளவனே! அரங்கா - ஸ்ரீரங்கநாதனே! - தனம் மாதர் - கொங்கையெழிலையுடைய மகளிரும், அம்சொல் குதலை புதல்வர் - அழகிய மழலைச்சொற்களையுடைய பிள்ளைகளும், தரணி - விளைநிலமும், இல்லம் - வீடும், தனம் - செல்வமும் ஆகிய இவற்றில், ஆதரம் செயும் - ஆசைகொள்ளுகிற, வாழ்வு - (நிலையற்ற இப்பிரபஞ்ச) வாழ்க்கைக்கு, அஞ்சி - பயந்து, நீயே தஞ்சம் என போந்தனம் - நீயே ரக்ஷகமென்றுகொண்டு (வந்து உன்னைச்) சரணமடைந்தோம்; முத்தி தந்தருள் - (அங்ஙனம்அடைந்த எமக்கு) மோட்சத்தைக் கொடுத்தருள்வாய்; (எ - று.)

பற்றற்று உன்பக்கல் சரணம் புக்கோம்; நீ எமக்கு நற்கதியருளக்கடவை யென்பதாம். உன்னை நம்பி யடுத்துள்ள உயிர்களைச் சிரமம்பாராது துயர்நீக்கிப்பாதுகாத்தருளுந்தன்மையுடையாய் என்னுங்கருத்துத்தோன்ற, 'ஆதரங்கிக்கவெற்பெடுத்தாய்' என விளித்தார்: கருத்துடையடைகொளியணி.

ஆதிசேஷன்திருமாலுக்குப் பலவகைக்கைங்கரியங்கள்புரியும் வகையை "சென்றாற் குடையாம். இருந்தாற் சிங்காதனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும், புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம்புல்கும், அணையாம் திருமாற்கு அரவு" என்றதனால் அறிக. திருப்பாற்கடலிலும் பிரளயப் பெருங்கடலிலும் திருமால் பள்ளிகொள்கின்றன னென்பது, நூற்கொள்கை. குதலை - நிரம்பாமென்சொல். "குழலினிது யாழினி தென்ப தம்மக்கள், மழலைச்சொற் கேளாதவர்," "மக்கள்மெய்தீண்ட லுடற்கின்பம் மற்றவர், சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு" என்றபடி தம் புதல்வருடைய மழலைச்சொல் தந்தைதாயர்க்கு மிக்க இனிமை விளைத்தலால், 'அஞ்சொற்குதலைப் புதல்வர்' என்றார். இல்லம், அம் - சாரியை. இரண்டாமடியில், ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. தரங்கிக்க - அலைய; தரங்கம் என்னும் பெயரின் மேற்பிறந்த செயவெனெச்சம். தரங்கம் - அலை: வடசொல்; கடலுக்குச் சினையாகுபெயர். அநந்தன் என்ற வடமொழிப்பெயர், ந + அந்த என்று பிரிந்து, (பிரளயத்திலும்) அழிவில்லாதவ னென்று பொருள்படும். முக்தி என்ற வடசொல்லுக்கு - பற்றுக்களை விட்டு அடையும் இடமெனக் காரணப்பொருள்.

(3)