பக்கம் எண் :

390திருவரங்கக்கலம்பகம்

மழைமுகிலெனவேபணாமுகந்திகழ்
வரியரவணையேறிவாழரங்கர்த
மெழில்பெறுமிருதாளிலேகலம்பக
மெனுமொருதமிழ்மாலைதானணிந்தனன்
குழலிசையளிமேவுகூரம்வந்தருள்
குருபரனிருபாதபோதடைந்தவ
னழகியமணவாளதாசனென்பவ
னடியவரடிசூடிவாழுமன்பனே.

(இ - ள்.) பணா முகம் திகழ் - படங்களோடுகூடிய (ஆயிர) முகங்கள் விளங்குகின்ற, வரி அரவு அணை - புள்ளிகளையுடைய திருவனந்தாழ்வானாகிய சயனத்தில், மழை முகில் என - கார்காலத்து மேகம் போல, ஏறி வாழ் - பள்ளிகொண்டருளுகின்ற, அரங்கர்தம் - ரங்கநாதரது, எழில் பெறும் - அழகு பெற்ற, இரு தாளிலே - உபயதிருவடிகளிலே, கலம்பகம் எனும் - கலம்பகமென்கிற, ஒரு தமிழ்மாலை - தமிழாலாகிய தொரு மாலையை (பிரபந்தத்தை), அணிந்தனன் - சூடினான்; (யாரென்னின்), - குழல் இசை அளி மேவு - வேய்ங்குழலினிசைபோலும் பாட்டிசையையுடைய வண்டுகள் விரும்பிமொய்க்கின்ற, கூரம் - கூரமென்னும்பதியில், வந்தருள் - திருவவதரித்த, குரு பரன் - சிறந்த ஆசாரியராகிய ஆழ்வானது, இரு பாத போது - உபயதிருவடித்தாமரைகளை, அடைந்தவன் - அடைந்தவனும், அடியவர் அடி சூடி வாழும் - அடியார்களது திருவடிகளை(த் தலைமேல் வைக்கும் மாலையாகக் கொண்டு) சூடிவாழ்கின்ற, அன்பன் - பக்தனுமாகிய, அழகிய மணவாள தாசன் என்பவன் - அழகிய மணவாளதாச னென்கிற திவ்வியகவி பிள்ளைப்பெருமாளையங்கார்; (எ - று.)

இது, தன்னைப் பிறன்போலும் பதிகங் கூறியது; வடநூலாரும், சடகோபர் சம்பந்தர் முதலாயினாரும், திவாகரரும், பதினெண்கீழ்க்கணக்குச்செய்தாரும் முன்னாகப் பின்னாகத் தாமே பதிகங் கூறுமாறு காண்க.

"குருபரனிருபாதபோதடைந்தவன்" என்பதற்கு - கூரத்தாழ்வானது உபயபாதங்களாகிய பராசரபட்டர் வேதவியாசபட்டர் என்னும் இரண்டு திருக்குமாரர்களை ஆசிரியராக அடைந்தவ னென்றவாறு; குருபரன் - பரமகுரு, தனதுகுருக்களுக்குக் குரு.

இது முதலும் ஐந்தும் கருவிளச்சீர்களும், இரண்டும் ஆறும் புளிமாங்காய்ச்சீர்களும், மூன்றும் ஏழும் தேமாச்சீர்களும், நான்கும் எட்டும் கூவிளச்சீர்களுமாகிய எண்சீராசிரியவண்ணவிருத்தம்.

திருவரங்கக்கலம்பகம் முற்றிற்று.