(இனியாயினும்), நின் பொன் கழற்கு - உனது அழகிய திருவடிகளுக்கு, ஆள் ஆய் நின்றேனை - அடிமையாய்நின்ற என்னை, கா - ரக்ஷித்தருள்; (எ - று.) எல்லையில்லாத காலமாக உன்னைநினையாமலே பிறந்துபிறந்து இளைத்துப்போனேன்; இது என்மீது பெருங்குற்றமே; நான் நினைக்குமாறு நிர்ஹேதுகமான திருவருளினாற் செய்யவேண்டியவன் நீயே யாதலால், இத்தனை காலமாக அடியேனைப்பற்றித் திருவுள்ளத்துக்கொள்ளாமல் வீணேபொழுதுபோக்கியது உனதுகுற்றமே; இவ்விஷயத்தைக்குறித்து இப்போது தர்க்கித்துக்கொண்டிருத்தலிற் பயனில்லை; உனது திருவருளினால் உன் திருவடித்தொண்டனாய் நிற்கும் அடியேனை இனியாவது கைந்நழுவவிடாமற் பாதுகாக்கவேண்டு மென்பதாம்; "அக்கரை யென்னு மனத்தக்கடலுளழுந்தி யுன்பேரருளால், இக்கரையேறியிளைத்திருந்தேனை யஞ்சே லென்று கைகவியாய்" என்றார் பெரியாரும். காளாய் - காளையென்பதன் விளி. காளை - இளவெருது; உவமாகுபெயர்; உவமை - நடைக்கும், காம்பீரியத்துக்கும், வலிமைக்கும். இது, நாளென்னும் வாய்பாட்டான் முடிந்த இருவிகற்பநேரிசை வெண்பா. (99) | காவிரிவாய்ப்பாம்பணைமேற் கருமுகில்போற் கண்வளருங் கருணைவள்ளல், | | பூவிரியுந்துழாயரங்கர்பொன்னடியேதஞ்சமெனப்பொருந்திவாழ்வார், | | யாவரினுமிழிகுலத்தோரானாலு மவர்கண்டீ ரிமையா நாட்டத், | | தேவரினு முனிவரினுஞ் சிவனயனென்றிருவரினுஞ் சீரியோரே. | (இ - ள்.) காவிரிவாய் - உபயகாவேரிமத்தியில், பாம்பு அணைமேல் - சேஷ சயனத்தில், கரு முகில்போல் - காளமேகம்போல, கண்வளரும் - திருக்கண் வளர்ந்தருளுகின்ற, கருணை வள்ளல் - திருவருளையுடைய வரையாது கொடுப்பவராகிய, பூ விரியும் துழாய் அரங்கர் - பொலிவுமிக்க திருத்துழாய்மாலை யையுடைய ரங்கநாதரது, பொன் அடியே - அழகிய திருவடிகளையே, தஞ்சம் என - அடைக்கலமாகக் கொண்டு, பொருந்தி - சரணமடைந்து, வாழ்வார் - வாழ்பவர்கள், - யாவரினும் இழி குலத்தோர் ஆனாலும் - எல்லோரினும் தாழ்ந்த குலத்தில் தோன்றியவராயினும், அவர் கண்டீர் - அவரன்றோ, இமையாநாட்டம் தேவரினும் - இமையாத கண்களையுடைய தேவர்களினும், முனிவரினும் - முனிவர்களினும், சிவன் அயன் என்ற இருவரினும் - சிவனும் பிரமனுமென்கிற இரண்டுபேரினும், சீரியோரே - சிறப்பினையுடையோராவர். எம்பெருமானது திருவடிகளே தஞ்சமென்ற உறுதியையுடைய சாத்துவிகர்கள் அகங்காரமமகாரங்கள் மண்டிநிற்கப்பெற்றதேவர் முதலியோரினும் உயர்ந்தவராவரென்றவாறு. இதற்குச் செய்யுளிலக்கணம், 15 - ஆங் கவியிற் கூறியதே. (100) |