பக்கம் எண் :

388திருவரங்கக்கலம்பகம்

வாரியரங்கம்வருதிருப்பாவைக்குமண்மகட்குஞ்
சீரியரங்கண்வளர்திருக்கோலமுந்தென்றிருக்கா
வேரியரங்கவிமானமுங்கோயிலுமேவித்தொழார்
பூரியரங்கவர்கண்ணிரண்டாவனபுண்ணிரண்டே.

(இ - ள்.) வாரிஅரங்கம்வரு - திருப்பாற்கடலினிடத்தினின்றுந் தோன்றிய, திருப்பாவைக்கும் - திருமகளுக்கும், (வாரி அரங்கம் வரு) - கடலாற் சூழப்பட்ட - மண்மகட்கும் - நிலமகளுக்கும், சீரியர் - சிறந்த கணவராகிய நம்பெருமாள், அம் கண் வளர் - அழகாகத் திருக்கண்வளர்ந்தருளுகின்ற, திரு கோலமும் - திருக்கோலத்தையும், தென் திரு காவேரி - அழகிய திருக்காவேரியின் மத்தியிலுள்ள, அரங்க விமானமும் - ஸ்ரீரங்கவிமானத்தையும், கோயிலும் - பெரியகோயிலையும், மேவி தொழார் - விரும்பி வணங்காதவர்கள், - பூரியர் - கீழ்மக்களாவர்; அங்கு அவர் கண் இரண்டு ஆவன - அத்தன்மையையுடைய அவர்களது இரண்டுகண்களும், புண் இரண்டே - இரண்டு புண்களேயாகும் (கண்களல்லவாம்); (எ - று.)

உரைமெழுக்கிற் பொன்போல ஆத்துமாக்கள் மூலப்ரக்ருதியிலே ஒட்டிக்கொண்டு இறகொடிந்த பட்சிபோலே கரணகளேபரங்களின்றி நலிவுபடுவதைக் கண்டு எம்பெருமான் ஒருகருணை கொண்டு இவர்கட்குக் கண் கை கால் முதலிய உறுப்புக்களைத் தந்து தன்னையறிந்து கரைமரஞ்சேரும் படி சாஸ்திரங்களையும் அளித்தனனாதலால், அவ்வாறுதந்த பயனைப் பெறாதவர்களது கண்கள் கண்களல்ல, புண்ணாகு மென்பதாம்; "பூணாரமார்பனைப் புள்ளூரும் பொன்மலையைக், காணாதார்கண்ணென்றுங்கண்ணல்லகண்டாமே" என்றார் திருமங்கையாழ்வாரும். கண்ணைக்கூறியது, மற்றைய உறுப்புக்கட்கும் உபலக்ஷணம். இச்செய்யுளில், திரிபு என்னுஞ் சொல்லணி காண்க. கண்படைத்தபயன் பெறாததனால், "கண்ணிரண்டாவன புண்ணிரண்டே" என்றார். இதனை "கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு, புண்ணுடையர் கல்லா தவர்" என்பதனோடு ஒப்பிடுக.

வாரி - நீர்; கடலுக்கு இலக்கணை. 'வாரியரங்கம்வரு' என்பது, இரட்டுறமொழிதலாய்ப் பொருளுரைத்து மண்மகளோடுஞ் சேர்க்கப்பட்டது.

இது, நேரசை யாதியான கட்டளைக்கலித்துறை.

(98)

புண்ணா ருடற்பிறவி போதுமெனக் கும்முனக்கு
மெண்ணா திருந்த தினிப்போதுங் - கண்ணா
குழற்காளாய் தென்னரங்கக் கோயிலாய் நின்பொற்
கழற்காளாய் நின்றேனைக் கா.

(இ - ள்.) கண்ணா - கிருஷ்ணனே! குழல் காளாய் - வேய்ங்குழலையுடைய காளைபோன்றவனே! தென் அரங்கம் கோயிலாய் - தென்திருவரங்கங்கோயிலையுடையவனே! - இனி -, எனக்கும் -, புண் ஆர் உடல் பிறவி - மாமிசம் நிறைந்த உடம்பையெடுத்துப் பிறக்கும் ஜன்மம், போதும் -; உனக்கும் -, எண்ணாது இருந்தது - (என்னை) நினையாமலேயிருந்தது, போதும் -;