பக்கம் எண் :

திருவரங்கக்கலம்பகம்387

ஒருபொருளல்லே னிருவினையுடையே
னுனதுதொண்டெனுந்துறைகுளித்துன்
பெருகுதண்ணளியின் பாசந்தொட்டிழிந்து
பெரியதோர்முத்தியான்பெற்றேன்
றிருவுமாமணியுஞ் சங்கமுமேந்திச்
செய்யதாமரைபலபூத்துக்
கருநிறமுடைத்தாய் நதிபொருதரங்கங்
கலந்ததோர்கருணைவாரிதியே.

(இ - ள்.) திருவும் - ஸ்ரீமகாலக்ஷ்மியையும் (நிதிகளையும்), மா மணியும் - அழகிய கௌஸ்துபரத்தினத்தையும் (பெரிய ரத்தினங்களையும்), சங்கமும் - பாஞ்சசன்னியத்தையும் (சங்குகளையும்), ஏந்தி - தரித்து, செய்ய தாமரை பல பூத்து - சிவந்த பல தாமரைமலர்போன்ற திருவவயவங்கள் விளங்கப்பெற்று (பலசெந்தாமரைமலர் பூக்கப்பெற்று), கருநிறம் உடைத்தாய் - கறுத்தநிறத்தையுடையதாய், தரங்கம் பொரு நதி கலந்தது - அலைமோதுகின்ற காவேரியாற்றினிடஞ் சேர்ந்ததாகிய (அலைமோதுகின்ற நதிகள் சேரப்பெற்றதாகிய), ஓர் - ஒப்பற்ற, கருணை வாரிதியே - அருட்கடலே! - ஒரு பொருள் அல்லேன் - ஒருபொருளாக மதிக்கப்படாதவனும் (செல்வஞ் சிறிதுமில்லாதவனும்), இருவினை உடையேன் - (நல்வினை தீவினையென்னும்) இரண்டுவினைகளையு முடையவனும் (மிக்க முயற்சியையுடையேனும்) ஆகிய, யான் -, உனது -, தொண்டு எனும் - கைங்கரியமாகிய, துறை - வழியில் (இறங்குமிடத்தில்), குளித்து - பிரவேசித்து (மூழ்கி), உன் - உனது, பெருகு தண் அளியின் - மிக்க குளிர்ந்த திருவருளாகிய, பாசம் - கயிற்றை, தொட்டு - பிடித்துக்கொண்டு, இழிந்து - இறங்கி, பெரியது ஓர் முத்தி - பெரியதொரு பரமபதத்தை (பெரியதோர் முத்து - சிறந்ததொரு முத்தை), பெற்றேன் -; (எ - று.)

ஒன்றுக்கும் பற்றாதவனாய் இருவினைகளையுமுடைய யான் உனக்கு அடிமை பூண்டு உனது தண்ணளியையே பற்றாசாகக்கொண்டு முத்தியைப் பெற்றே னென்பதாம். இதில், நிதிகளையும் இரத்தினங்களையும் சங்கத்தையுமுடையதாய்ப் பலதாமரைமலர்கள் மலரப்பெற்றுநதிகள் வந்துசேர்தற்கு இடமாகிய கடலிலே, வறியவனாகிய யான்பெருமுயற்சியோடு பெருங்கயிற்றைப் பற்றிக்கொண்டு முத்துக்குளிக்குந் துறையில் இறங்கிக் குளித்து முத்துக்களைப் பெற்றே னென்ற ஒருபொருளும் தொனிக்கின்றது. சருங்கச்சொல்லலணி; இதற்கு உருவகவணி அங்கமாய் நின்றது.

இருவினையுடையேனென்பதற்கு - பிறத்தலு மிறத்தலுமாகிய இரண்டு தொழில்களையு முடையே னென்றுமாம். முத்தி - முத்தென ஈறுதிரிந்தது; பக்தி - பத்து, ஸந்தி - சந்து என்றாற்போல, வாரிதி - நீர்தங்குமிடம். நீர் நிரம்பிய கடல்போலக் கிருபை நிறைந்தவ ரென்றற்குக் கருணைவாரிதியே யென்றார். பெற்றேன் என இறந்தகாலத்தாற் கூறியது, துணிவுபற்றிய காலவழுவமைதி.

இதற்குச் செய்யுளிலக்கணம், 38 - ஆங் கவியிற் கூறப்பட்டது.

(97)