பக்கம் எண் :

412திருவேங்கடமாலை

15.பித்துமல டூமைமுடம் பேய்குருடு கூன்செவிடு
மெய்த்துயர்நோய் தீர்த்தருளும் வேங்கடமே - பத்தருக்கு
வந்ததுக்கங் காப்பான் மலருந் தியினுலகந்
தந்ததுக்கங் காப்பான் றலம்.

(இ - ள்.) பித்து - பைத்தியம்பிடித்தலும், மலடு - பிள்ளைப்பேறில்லாக் குறையும், ஊமை - பேசாமையும், முடம் - கைகால்களின் குறைவும், பேய் - பேய்பிடித்தலும், குருடு - கண்தெரியாமையும், கூன் - உடல்வளைதலும், செவிடு - காதுகேளாமையும் ஆகிய உடற்குற்றங்களையும், மெய் துயர் நோய் - மற்றும் வருத்தத்தைத் தருகின்ற வியாதிகளையும், தீர்த்து அருளும் - (தன்னையடைந்தார்க்கு) நீக்கியருளுகின்ற வேங்கடமே - , - பத்தருக்கு வந்த துக்கம் காப்பான் - தன் அடியார்களுக்கு வந்த துன்பங்களை நீக்கி (அவற்றினின்று அவர்களைப்) பாதுகாப்பவனும், மலர் உந்தியின் (உந்திமலரின்) - தனது நாபித்தாமரைமலரின்று, உலகம் தந்து - உலகத்தை உண்டாக்கி, அதுக்கு - அவ்வுலகத்தையுண்ணும்பொருட்டு, அங்காப்பான் - வாய்திறப்ப வனுமாகிய திருமாலினது, தலம் - இடமாம்; (எ - று.)

திருவேங்கடமலையினது வரப்பிரசாதசக்தி, முன்னிரண்டடியில் விளக்கப்பட்டது. முதலடி - பெயர்ச்செவ்வெண். பக்தர், து:கம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. காத்தல் - தடுத்தல், பரிகரித்தல். உந்தியின் - ஐந்தனுருபு, நீக்கம். உலகம் - சாதியொருமை; ஆனதுபற்றி, "அதுக்கு" என ஒருமையாக் கூறினார். அங்காப்பான், அங்கா - பகுதி. மலருந்தியின் உலகந் தந்து அதுக்கு அங்காப்பான் - உலகத்தைப் படைப்பவனும், அளிப்பவனும், அழிப்பவனும் அவனே யென்றபடி.  

(15)

16.வாடப் பசித்த வரியுழுவை வாலாட்டி
மேடத்தைப் பார்த்துறுக்கும் வேங்கடமே - கூடத்துக்
கம்பவள மாவென்றான் காசினிக்கும் வெண்ணெய்க்குஞ்
செம்பவள மாவென்றான் சேர்வு.

(இ - ள்.) வாட - வாட்டமுண்டாம்படி, பசித்த - பசியடைந்துள்ள, வரி உழுவை - உடற்கோடுகளையுடைய புலிகள், மேடத்தை பார்த்து - (வானத்திற் செல்லுகின்ற ஆட்டின்வடிவமான) மேஷராசியைப் பார்த்து, வால் ஆட்டி உறுக்கும் - (அந்த ஆட்டைக் கொன்று தின்னக் கருதித்) தன்வாலை யசைத்துக் கொண்டு கோபித்து அதனோடுமாறுபடுதற்கு இடமான, வேங்கடமே - , - கூடத்து - யானைச்சாலையில், கம்பம் - தறியிற் கட்டிவைக்கத் தக்க, வளம் மா - மதக் கொழுமையையுடைய (குவலயாபீடமென்ற) யானையை, வென்றான் - கொன்று சயித்தவனும், காசினிக்கும் - (யுகாந்தகாலத்தில்) உலகத்தை உண்ணுதற்காகவும், வெண்ணெய்க்கும் - (கிருஷ்ணாவதாரத்தில்) வெண்ணெயை உண்ணுதற்காகவும், செம் பவளம் ஆ என்றான் - சிவந்த பவழம்போன்ற தனது திருவாய்மலரை ஆவென்று திறந்தவனுமாகிய திருமால், சேர்வு - சேர்ந்திருக்குமிடம்; (எ - று.)