சகலதேவர்களுமுட்பட யாவும் அழிந்துபோகின்ற யுகாந்தகாலத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு அண்டங்களையெல்லாம் தன்வயிற்றில் வைத்து அடக்கிக் கொண்டு யோகநித்திரை செய்தருளுகின்றன னென்பது, நூற்கொள்கை எல் லாவற்றையும் படைத்துக்காத்து அழிக்கின்ற முழுமுதற்கடவுள் திருமாலே யென்ற ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம், பின்னிரண்டடியில் விளக்கப்பட்டது. கந்தரம் - வடசொல்; தலையைத் தரிப்ப தென்று காரணப்பொருள்படும்; கம் - தலை (13) | 14. | நோவினையு நோயினையு நோய்செய் வினையினையும் | | வீவினையுந் தீர்த்தருளும் வேங்கடமே - மூவினைசெய் | | மூவடிவாய்ப் பச்சென்றான் முன்னா ளகலிகைக்குச் | | சேவடிவாய்ப் பச்சென்றான் சேர்பு. | (இ - ள்.) நோவினையும் - (பிறத்தலாலாகின்ற) துன்பத்தையும், நோயினையும் - (வாழும்நாளில் வருத்தஞ்செய்கிற) வியாதிகளையும், வீவினையும் - மரணவேதனையையும், நோய் செய் வினையினையும் - எல்லாத்துன்பங்களையும் உண்டாக்குகிற காரணமான கருமங்களையும், தீர்த்து அருளும் - (தன்னை யடைந்தவர்க்கு) நீக்கியருளுகின்ற, வேங்கடமே - , - மூ வினை செய் - (படைத்தல் காத்தல் அழித்தல் என்னும்) மூன்று தொழில்களைச் செய்கின்ற, மூ வடிவு ஆய் - (அயன் அரி அரன் என்னும்) திரிமூர்த்திகளின் வடிவமாய், பச்சென்றான் - (அவற்றுள் தானானவடிவத்தில்) பசுமைநிறத்தையுடையவனும், முன் நாள் - முற்காலத்தில், அகலிகைக்கு - அகலிகையென்னும் பெண்ணுக்கு, சே அடி வாய்ப்ப - சிவந்த தனது திருவடி சித்தியளிக்கும்படி, சென்றான் - நடந்தருளியவனுமாகிய திருமால், சேர்பு - சேருமிடம்; (எ - று.) பிறக்குங்காலத்தும் வளர்ந்து உயிர்வாழுங் காலத்தும் இறக்குங்காலத்தும் உண்டாகிற பலவகைத் துன்பங்களும், அவற்றிற்கெல்லாம் காரணமான கருமங்களும் தன்னையடைந்தார்க்கு இனி இல்லையாம்படி தன்மகிமையாற் செய்யுந்தரத்தது திருவேங்கடமென்க. இனி, நோவு - மனோவியாதி; அதாவது - மனக்கிலேசம் என்றும், நோய் - தேகவியாதி யென்றும் உரைத்தலு முண்டு. "நோய்செய்வினை" என்றதில் நோய் என்றது, பசி தாகம் பயம் கோபம் முதுமை துன்பம் முதலிய பலவகை உடற்குற்றங்களையும் பொதுப்பட உணர்த்து மென்க. நோவு, நோய், வீவு - தொழிற்பெயர்கள். அகலிகை - அஹல்யா என்ற வடசொல்லின் திரிபு; அப்பெயர் - அழகில்லாமை யில்லாதவ ளென்று பொருள்படும்: மிக்க அழகுள்ளவ ளென்று கருத்து; ஹல்யம் - அழகின்மை. இவள், கௌதமமுனிவனது மனைவி. அவளது கல்வடிவமான சாபம் இராமபிரானது திருவடித்துகள் பட்டமாத்திரத்தில் தீர்ந்த தன்மை இராமாயணத்திற் பிரசித்தம். (14) |