பக்கம் எண் :

476திருவேங்கடமாலை

புல்காமம் ஏவார் - தமது அடியார்களை இழிந்த சிற்றின்ப வழியிற் செல்ல விடாமல் உயர்ந்த பேரின்பநெறியிற் செலுத்துபவ ரென்க. மேவார் எனப் பதம் பிரித்து உரைத்தல் மோனைத்தொடைக்குப் பொருந்தாது. "மலர் மிசையேகினான்" என்றபடி அன்பால் நினைவாரது உள்ளக்கமலத்திற் கடவுள் அவர் நினைந்த வடிவத்தோடு சென்று வீற்றிருத்தலால், 'கழலா ரென துளத்தில்' என்றார். 'பூவார்கழல்' என்பது - திருவேங்கட முடையானது திருவடிக்குச் சிறப்பாக வழங்கும். கழலார் என்பது - மூன்றாமடியில் கழல் என்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த எதிர்மறைத் தெரிநிலை வினையா லணையும் பெயரும், நான்காமடியில் கழல் என்ற பெயரின்மேற் பிறந்த உடன்பாட்டுக் குறிப்பு வினையாலணையும் பெயருமாம்.

(85)

86.பாம்புங் குளிர்சந்தின் பக்கத்தி னிற்கின்ற
வேம்பு மருத்துவக்கும் வேங்கடமே - காம்புகர
மானவரை நன்குடையா ராளாய்த் தொழுதேத்து
மானவரை நன்குடையார் வாழ்வு.

(இ - ள்.) பாம்பும் - பாம்புகளும், மருத்து உவக்கும் - காற்றை விரும்பி உணவாகக் கொள்ளப்பெற்ற: குளிர்சந்தின் பக்கத்தில் நிற்கின்ற வேம்பும் - குளிர்ந்த சந்தனமரங்களின் அருகிலே நிற்கின்ற வேப்பமரங்களும், மரு துவக்கும்- (அவற்றின் சேர்க்கையால்) நறுமணம் வீசத்தொடங் கப்பெற்ற: வேங்கடமே -,-கரம் காம்பு ஆன - தமது கையையே காம்பாகக் கொண்ட, வரை நல் குடையார் - கோவர்த்தந கிரியாகிய நல்ல குடை யையுடையவரும், ஆள் ஆய் தொழுது ஏத்தும் மானவரை நன்கு உடையார் - (தமக்குத்) தொண்டராய் வணங்கித் துதிக்கின்ற மனிதர்களை மிகுதி யாகவுடையவருமான திருமால், வாழ்வு - வாழுமிடம்; (எ - று.)

பாம்பு வாதாசந மாதலால், 'மருத்துஉவக்கும்' என்றார்; அது இம்மலையி னின்று வீசுகின்ற நறுமணமுள்ள குளிர்ந்தகாற்றை நல்லுணவாக விரும்பி யேற்று உட்கொள்ளு மென்க. சந்தின்பக்கத்தில் நிற்கின்ற வேம்பும் மருத்துவக்கும் - "சந்தனத்தைச் சார் தருவும் தக்கமணங் கமழு" மென்க. துவக்கும், துவக்கு - பகுதி; துவக்குதல் - தொடங்குதல்.

'காம்புகரமான வரை நன்குடையார்' - "செப்பாடுடைய திருமாலவன் தன்செந்தாமரைக்கைவிர லைந்தினையுங், கப்பாகமடுத்து மணிநெடுந்தோள் காம்பாகக்கொடுத்துக் கவித்த மலை,...... கோவர்த்தனமென்னுங் கொற்றக் குடையே" என்ற பெரியாழ்வார்திருமொழியை அறிக. நன்குடை - எத்தனை மழைக்குஞ் சலியாத குடை; மிகப்பல ஆயர்களையும் ஆக்களையும் வருந்தாத படி பாதுகாத்த குடை; பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் எட்டிமேயலாம் படி புல்முதலிய உணவுகளைக் கொடுத்த குடை. மாநவர் - காசியபமுனிவனது மனைவியருள் மநுவென்பவளது மரபில் தோன்றியவர்; வடமொழித் தத்திதாந்தநாமம்.

(86)