பக்கம் எண் :

திருவேங்கடமாலை475

வையோடுதலை (த் தனது தண்மையால்) ஒழிக்கப்பெற்ற என்று உரைத்தலும் ஒன்று. வனம் நந்த - காடுகள் அழிய எனினுமாம். நந்தல் - அழிதலும், வளர்தலும். வேர்ஓடலைத்தீர்க்கும் - சிரமஹரமாயிருக்கும் என்றபடி. இனி, காட்டாறுகள் பூந்தோட்டம் வேரூன்றுதலை யொழிக்கு மென்றும், யானைகள் நந்தவனமென்னும் இந்திரனது பூஞ்சோலையை வேருடன் அசைத்து இழுக்கு மென்றும் உரைத்தலுமாம்; இவ்வுரைக்கு, நந்தநவன மென்பது நந்தவனமென விகாரப்பட்ட தென்க.

விற்படை - இருபெய ரொட்டுப் பண்புத்தொகை. இராமனது வில், கோதண்ட மெனப்படும். அடியார்கட்கு மீளவும் பிறப்பில்லாதபடி கருமமொழித்து முத்தியளிப்பவரென்பது கருத்து. கரு - கர்ப்பமென்னும் வட சொல்லின் சிதைவு. எழுவகைப்பிறப்பு - தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பன. படையார் என்பது - மூன்றாமடியில் படையென்னும் பெயரின்மேற் பிறந்த உடன்பாட்டுக் குறிப்புவினையா லணையும்பெயரும், நான்காமடியில் படையென்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த எதிர்மறைத் தெரிநிலை வினையாலணையும் பெயருமாம்.

(84)

85.நன்காமர் வண்டினமு நால்வாய் மதகரியு
மென்கா மரமுழக்கும் வேங்கடமே - புன்காம
மேவார் கழலா ரெனதுளத்தி லென்றலைவை
பூவார் கழலார் பொருப்பு.

(இ - ள்.) காமர் நல் வண்டு இனமும் - அழகிய சிறந்த சாதி வண்டுக ளின் கூட்டமும், மெல் காமரம் முழக்கும் - இனிமையான இசையை வாய் விட்டுப் பாடப்பெற்ற: நால்வாய் மதம் கரியும் - தொங்குகிற வாயையுடைய மதயானைகளும், மெல் கா மரம் உழக்கும் - அழகிய சோலைகளிலுள்ள மரங்களைப் பெயர்த்து அசைக்கப்பெற்ற: வேங்கடமே -,- புல் காமம் ஏவார் - (தமது அடியார்களை) இழிவான காமவழியிற் செல்ல விடாதவரும், எனது உளத்தில் கழலார் - (அடியவனான) என்னுடைய மனத்தினின்று நீங்காத வரும், என் தலை வை பூ ஆர் கழலார் - அடியேனுடைய தலையின்மேல் வைத்த தாமரைமலர் போன்ற திருவடிகளை யுடையவருமான திருமாலினது, பொருப்பு - திருமலை; (எ - று.)

நல்வண்டு - நல்ல மணத்தே செல்லும் வண்டு. மென்மை - செவிக்கு இனிமை. காமரம் - பண். முழக்கும் - முழங்கு மென்பதன் பிறவினை. நால்வாய் - வினைத்தொகை: நான்றவாய், நால்கிற வாய், நாலும் வாய் என விரியும்; நால் - வினைப்பகுதி: நாலுதல் - தொங்குதல். கரம் - கை; இங்கே துதிக்கை: அதனையுடையது கரீ என வடமொழிக் காரணக்குறி. அது, கரியென ஈயீறு இகரமாய் நின்றது. இதற்கு - கருமையுடையதெனத் தமிழ் வகையாற் காரணப்பொருள் கூறலாகாது, வடசொல்லாதலின். மென்மை - கண்ணுக்கு இனிமை; குளிர்ச்சியுமாம். கா - பாதுகாத்தற்கு உரியது. உழக்கும், உழக்கு - பகுதி; உழக்குதல் - கலக்குதல், வருத்தல்; இதனை உழ என்னும் தன்வினைப்பகுதி "கு" என்னும் விகுதி பெற்ற பிறவினை யென்னலாம்.