இன்னவையென்பதை, "தந்தி வராகமருப் பிப்பி பூகந் தழைகதலி, நந்து சலஞ்சல மீன்றலை கொக்கு நளின மின்னார், கந்தரஞ் சாலி கழை கன்னலா வின்பல் கட்செவி கார், இந்து வுடும்பு கரா முத்தமீனு மிருபதுமே" என்பதனால் அறிக.) ஆரம் - ஹாரம் என்ற வடசொல்லின் விகாரம். தினை - ஒருவகைத்தானியம். ஏ - இசைநிறை. தினைவித்திக் கதிர்விளைத்தல் - தினைப் பயிரிடுதல். பாண்டிய நாட்டில் தாமிரபர்ணி நதிதீரத்தி லுள்ள திருக்குருகூரிலே வேளாள வருணத்தவரான திருவழுதி வளநாட ரென்பவரது சந்ததியில் காரியென்பவர்க்கு உடைய நங்கையாரது திருவயிற்றிலே அவதரித்தவ ராத லால், நம்மாழ்வார், "காரிமாறன்" எனப்பட்டனர். இவர் பிறந்தபொழுதே தொடங்கி அழுதல் பால்குடித்தல் முதலிய லோகவியாபாரம் ஒன்றுமின்றி உலகநடைக்கு மாறாக இருந்ததனால், இவர்க்கு மாற னென்று திருநாம மாயிற்று. வலிய வினைகளுக்கு மாறாக இருத்தலாலும், பாண்டிய நாட்டில் தலைமையாகத் தோன்றியதனாலும் வந்த பெய ரென்றலும் உண்டு; மாறன்பா - திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய் மொழி என்னும் நான்கு திவ்வியப்பிரபந்தங்கள். காதலித்தார் - காதலென்னும் பெயரினடியாகப் பிறந்த தெரிநிலை வினையாலணையும் பெயர். வாரி - வடசொல்: நீர்; கடலுக்கு இலக்கணை. காரணகாரியத் தொடர்ச்சியாய் எல்லைகாண வொண்ணாது மாறிமாறி வருதலாலும், அச்சந்தருதலாலும், கடத்தற் கரிதாதலாலும், பிறப்பு, கடலெனப்பட்டது. மாறு என்ற வினைத்தொகை, இங்குக் காரியப்பொருளில் வந்தது. (83) | 84. | பாரோடு கான்யாறும் பல்களிறு நந்தவனம் | | வேரோ டலைத்தீர்க்கும் வேங்கடமே - காரோதஞ் | | சுட்டகரு விற்படையார் தொண்டரைமீண் டேழுவகைப் | | பட்டகரு விற்படையார் பற்று. | (இ - ள்.) பார் ஓடு கான் யாறும் - (அம்மலையினின்று) பூமியைநோக்கி ஓடிவருகிற காட்டாறுகளும், நம் தவனம் வேர் ஓடலை தீர்க்கும் - நமது தாகம் நிலைத்திருத்தலை நீக்கப்பெற்ற: பல் களிறும் - பல மதயானைகளும், நந்தவனம் வேரோடு அலைத்து ஈர்க்கும் - பூந்தோட்டத்திலுள்ள மரங்களை வேருடன் அசைத்து இழுக்கப்பெற்ற: வேங்கடமே -,- கார் ஓதம் சுட்ட - கரு நிறமான கடலை வெதும்பச்செய்த, கரு வில் படையார் - பெரிய வில்லாகிய ஆயுதத்தை யுடையவரும், தொண்டரை - (தமது) அடியார்களை, மீண்டு - மறுபடி - ஏழு வகை பட்ட கருவில் படையார் - ஏழுவகைப்பட்ட பிறப்பில் தோன்றச் செய்யாதவரு மான திருமால், பற்று - விரும்பி யெழுந்தருளி யிருக்குமிடம்; (எ - று.) ஓடு - வினைத்தொகை. தவனம் - தபநமென்ற வடசொல்லின் விகாரம். நந்தவனம் - ஆனந்தத்தை விளைக்குஞ் சோலை. காட்டாறுகள், வனம் நந்த - காடுகள் வளர. வேர் ஓடலை தீர்க்கும் - (அருகில் வருவாரது உடம்பில்) வேர் |