பக்கம் எண் :

திருவேங்கடமாலை473

(அவர்களை), வாதை பட துவைத்தார் - துன்பப்படுமாறு அழித்தவருமான திருமால், வாழ்வு - எழுந்தருளியிருக்குமிடம்; (எ - று.)

"மாதர் காதல்" என்ற தொல்காப்பிய உரியியற் சூத்திரத்தால் மாதர் என்பது - ஆசையென்னும்பொருளை யுணர்த்தும் உரிச்சொல்லாதல் அறிக. மாதரார் - விரும்பப்படும் அழகுடையார். காமர் - காமன்; மன்மதன்: உயர் வுப்பன்மை: அவனுடைய வேதமென்றது, காமசாஸ்திரத்தை. மாதர்கண்கள் காமவேதமார்க்கம் செறிதலாவது - பார்வையழகால் ஆடவரைக் காம வசப்படுத்துதல். மார்க்கம் என்ற வடசொல், சிலேடைநயம்நோக்கி மாற்கம் என விகாரப்பட்டது. தமால் - தம்மால்; தொகுத்தல். கம் - வடசொல்.

பாதமாம் போது - உருவகம். திருவடிக்குத் தாமரையுவமை, செம்மை மென்மை அழகுகளில்.ழுபாதத்தைப்படத்துவைத்தார்" என்றது, காளியன் முடியில் தமதுதிருவடிபதிந்த தழும்பு என்றும்நிலையாக இருக்கும்படி அழுந்த வைத்தவரென்ற பொருளை விளக்கும்; "ஓ சர்ப்பராசனே! நீ கருடனுக்குப் பயப்படவேண்டாம்; உன் சிரசில் என் திருவடி பொறித்த வடு இருத்தலைக் கண்டு உன்னை அவன் ஒன்றும் செய்யமாட்டான்" என்று கண்ணன் காளியனுக்கு வரமளித்தமை காண்க. இந்நூலின் முதற்செய்யுளில் "பையரவின் சூட்டிற் சிரமபதநாட்டினான்" என்றதிலும் இக்கருத்து அமைந்துளது. "போர்" என்றது - பாரதயுத்தம் முதலியவற்றையும், "மாற்றரசர்" என்றது - துரியோதனாதியர் முதலியோரையுங் குறிக்கும். "போர்விளைய" என்ற பாடத்துக்கு - போர் உண்டாக என்க. மாற்றரசர் - மாறுபாட்டையுடைய அரசர். பாதா என்ற வடமொழி, வாதையென விகாரப்பட்டது.

(82)

83.எத்திக்குங் காம்பு மெயினருமா ரத்தினையே
வித்திக் கதிர்விளைக்கும் வேங்கடமே - தித்திக்குங்
காரிமா றன்பாவார் காதலித்தார் தம்பிறவி
வாரிமா றன்பாவார் வாழ்வு.

(இ - ள்.) எ திக்கும் - (அம்மலையின்) எல்லாப்பக்கங்களிலும், - காம்பும் - மூங்கில்களும், ஆரத்தினையே வித்தி கதிர் விளைக்கும் - முத்துக்களையே உண்டாக்கி ஒளியைவீசப்பெற்ற: எயினரும் - வேடர்களும், ஆர தினையே வித்தி கதிர் விளைக்கும் - மிகுதியாகத் தினையையே விதைத்துக் கதிர்களை விளையச்செய்தற் கிடமான: வேங்கடமே -,- தித்திக்கும் - இனிமையான, காரி மாறன் பாவார் - காரியென்பவரது திருக்குமாரரான நம்மாழ்வாருடைய பாசுரத்தைப் பெற்றவரும், காதலித்தார்தம் - (தம்மை) விரும்பின அடியார்களுடைய, பிறவி வாரி - பிறப்பாகிய கடல், மாறு - நீங்குதற்குக் காரணமான, அன்பு ஆவார் - அருளின் மயமாகுபவருமான திருமால், வாழ்வு - எழுந்தருளியிருக்குமிடம்; (எ - று.)

"எத்திக்கும்" என்பதை, சிலேடைப்பொருளிரண்டுக்குங் கூட்டுக. சிறந்த சாதி மூங்கில் முற்றினபொழுது அதன் கணுக்கள் வெடிக்க அவற்றினின்று நல்லமுத்துப் பிறக்குமென்றல், கவிமரபு. (முத்துப்பிறக்கு மிடங்கள்