பக்கம் எண் :

736அழகரந்தாதி

ஆயிரம்பேர்படிக்கும் - "மொழிபலபிதற்றல்" என்னும் மன்மதாவத்தையின் பாற்படும். ("முகில்வண்ணன்பேர் கிளரிக்கிளரிப்பிதற்றும்" என்பது, திருவிருத்தத்தில் தாயார்வார்த்தை.)

இரண்டாமடியில், படிக்கு என்பது - படியில் என்ற பொருளில் வந்ததனால், உருபுமயக்கம். மனிதரினும் தேவர் அறிவிற்சிறத்தலால், 'செழுந்தேவர்' என்றார். அவர்களும் வாமநமூர்த்தியின் சொரூபத்தை உள்ளபடி உணரமாட்டாமற்போயின ரென, அதன் விசித்திரங் கூறியவாறு. உம்மை - உயர்வுசிறப்பு. படி - பூமி; இங்குச் சிறப்புப்பெயர் பொதுப்பொருளதாய், உலகங்களென்றமாத்திரமாய் நின்றது. "உயிர்க்கும் படிக்கும் உன் ஆயிரம் பேர்" என்றது - தன்னைப் படர்க்கையாக் கூறியது.

தியானநிலையில் நின்ற ஐயங்காரது அகக்கண்ணுக்கு எம்பெருமான் புலனாகி மறைந்தவளவிலே அப்பெருமானது ஸதாஸாந்நித்யத்தை அபேக்ஷித்து அது உடனே கிடையாமையால் ஆற்றாமைமிக்குப் பெருமூச்சுவிட்டுக்கொண்டும் எம்பெருமான் திருநாமங்களை வாய்மாறாமல் எடுத்துக்கூறிக்கொண்டும் வருந்துகின்ற அவரது துயரத்தை நோக்கிப் பரிவர்கள் 'பொறுமைபூணாது இங்ஙனமும் ஓர் ஆற்றாமையுண்டோ?' என்று குறைகூற, அதுகேட்டு மிகத்துயருற்ற ஐயங்கார், அங்ஙனம் தமக்குஉண்டான தடுமாற்றத்தை அப்பெருமானைக்குறித்து விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறைபொருள். விவரம் நோக்கிக்கொள்க.

(93)

94.பணிபதிவாடநின்றாடின நூற்றுவர்பாற்சென்றன
பணிபதினாலுபுவனமுந்தாயின பாப்பதின்மர்
பணிபதியெங்குமுவந்தன பங்கயப்பாவையுடன்
பணிபதிமார்பனலங்காரன்பொற்றிருப்பாதங்களே.

(இ - ள்.) பங்கயம் பாவையுடன் - செந்தாமரைமலரில் வீற்றிருக்கின்ற சித்திரப்பாவைபோ லழகியவளான திருமகளுடனே, பணி - (கௌஸ்துபமென்னும்) ஆபரணமும், பதி - நீங்காதுபொருந்தப்பெற்ற, மார்பன் - திருமார்பையுடையவனான, அலங்காரன் - அழகப்பிரானுடைய, பொன் திரு பாதங்கள் - பொன்மயமான ஆபரணங்களை யணிந்த திருவடிகள், - பணி பதி வாட நின்று ஆடின - ஸர்ப்பசிரேஷ்டனான காளியன் வலிமை தளரும்படி (அவன்முடிகளின்மேல்) நின்று நர்த்தநஞ்செய்தன; நூற்றுவர் பால் சென்றன - துரியோதனாதியரிடத்துச் சென்றன; பணி பதினாலு புவனமும் தாயின - (இயல்பிலே தமக்குக்) கீழ்ப்படிந்தனவான பதினான்கு உலகங்களையும் தாவியளந்தன; பதின்மர் பா பணி - பத்து ஆழ்வார்களாலும் பாசுரம்பாடித் துதிக்கப்பெற்ற, பதி எங்கும் - (திவ்விய) தேசங்களிலெல்லாம், உவந்தன - விரும்பிஎழுந்தருளியிருந்தன; (எ - று.)

இது, இந்நூலின் 26 - ஆஞ் செய்யுள்போன்ற பாதவகுப்பு. எம்பெருமான் திருவடிகளினிடத்துத் தமக்குஉள்ள ஆராதஅன்பினால் மீண்டும் இது கூறினார். திருவேங்கடத்தந்தாதியிலும் பாதவகுப்புச் செய்யுள்கள் இரண்டு வந்துள்ளன.