ருள்படும்: தலைவராவார்யாவர்க்கும் மேம்பட்ட தலைவனென்க. 'கலங்காப் பெருநகரங்காட்டுவான்' என்ற தொடர், மூன்றாந்திருவந்தாதியில் வந்துள்ளது; ஒருகலக்கமுமில்லாதிருக்கிற பெரிய இராசதானியான பரமபதத்தை "வானவர் நாட்டையும் நீகண்டுகொள்ளென்று வீடுந்தரும் நின்றுநின்றே" என்றபடி அடியார்க்குத் தந்தருள்பவரென்க. கருத்தன்பினால் விளம்பினன் என இயையும். சொல்தொடை - சொற்கள்கொண்டு தொடுத்த பாமாலை. சிறிதுபொழுது கழிந்தவளவிலே வாடுமியல்பினதான பூமாலையினும் பாமாலைக்கு உள்ள சிறப்புத் தோன்ற, அதற்கு 'நலங்காத' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. மற்றும் இந்த அடைமொழியினால், இப்பிரபந்தம், அழகரருளால், சொல்வழு பொருள்வழு இல்லாது "சொன்னோக்கும் பொருணோக்குந் தொடைநோக்கு நடைநோக்குந் துறையினோக்கோடு, எந்நோக்குங் காண இலக்கிய" மாய் அமைந்ததென்று கொண்டாடிக் கூறியதுமாம். பத்மநாபன் என்ற வடமொழி, பற்பநாபனெனச் சிதைந்தது; தாமரை மலரை நாபியிலுடையவ னென்பது, இதன் பொருள். இது, திருமாலின் திருநாமங்களில் ஒன்று. ஸ்ரீரங்கநாதனே திருவருளினாற் கூரத்தாழ்வான் குமாரராய்த் திருவவதரித்தமைபற்றி, அப்புதல்வர்க்கு ஸ்ரீரங்கராஜபட்டரென்றும், திருவரங்கப்பெருமாள்பட்டரென்றும் திருநாமங்கள் வழங்கும்; அப்பெயரின் பரியாயநாமமாக 'பற்பநாபப்பட்டன்' என்றார். "நிழலின் நீங்கான்" என்றபடி ஆசாரியனைவிட்டுப்பிரியாது உடனிருந்து வழிபடுதல் சீடனுக்கு இன்றியமையாத தாதலால், அங்ஙனம் தாம் பட்டரை விட்டு நீங்காதவ ரென்பார், பற்பநாபப்பட்டன் விலங்காத கீர்த்தி மணவாள தாசன்' என்றார்; "ஆசார்யன்செய்த வபகாரமானவது, தூய்தாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் - தேசாந், தரத்தி லிருக்க மனந்தான் பொருந்த மாட்டாது, இருத்தலினி யேதறியோம் யாம்," "தன்னாரியனுக்குத் தானடிமை செய்வத வன், இந்நாடுள்தன்னி லிருக்கும்நாதன் - அந்நே, ரறிந்து மதிலா சையின்றி யாசாரியனைப், பிரிந்திருப்பாரார் மனமே பேசு" என்றார் பெரியாரும். பட்டர் - எம்பாருடைய சிஷ்யர்: பண்டிதர்க்கு வழங்குகின்ற பட்டரென்ற பெயர், இவர்க்குச் சிறப்பாக வழங்கும்; இவர், ஸ்ரீபாஷ்யகாரரால் நாமகரணஞ்செய்தருளப்பெற்றவர். இச்செய்யுள், நூலாசிரியர் தாமே தம்மைப் பிறன்போலும் பாயிரங் கூறியது. (பிரயோகவிவேகநூலார் "இது, தன்னைப் பிறன்போலும் நாந்தி கூறுகின்றது," "வடநூலார் தாமே பதிகமும் உரையுஞ் செய்வார்", "இனிச் சம்பந்தர் சடகோபர் முதலாயினாரும் திவாகரரும் பதிணென் கீழ்க்கணக்குச் செய்தாரும் முன்னாகப் பின்னாகப் பதிகங்கூறுவதுங் காண்க" என்றவை கருதத்தக்கன), இது, தற்சிறப்புப்பாயிர மெனப்படும்.அழகரந்தாதி முற்றிற்று. |