பக்கம் எண் :

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி749

லுதற்குத்) தகுதியுடைய மணவாளர் என்று உரைத்தலும் பொருந்தும்; எம்பெருமானைத் துதிப்பதற்கு ஏற்ற ஞானம் முதலிய குணங்களை யுடைமையால், இவரை இவ்வாறு கூறுதல் தகுமென்க. ஒருபெயரின் ஒருபகுதியைக் கொண்டு அப்பெயர் முழுவதையுங் குறிப்பதொரு மரபுபற்றி, அழகியமண வாளதாசரை 'மணவாளர்' என்றார்; (இதனை, வடநூலார் "நாமைகதேஸே நாமக்ரஹணம்' என்பர்.) திருமால் துஷ்டநிக்கிரகசிஷ்டபரிபாலநத்தின் பொருட்டும் தருமத்தை நிலைநிறுத்துதற் பொருட்டும் தனது இச்சையினாலேயே மத்ஸ்ய கூர்மாதிகளான திருவவதாரங்களைச் செய்தபோதிலும், ஜீவாத்மாக்கள் தேவ திர்யங் மநுஷ்ய ஸ்தாவரரூபங்களாய்க் கருமவசத்தினாற் பிறந்தழிவதுபோலப் பிறப்பு இறப்புக்களை யுடையவ னாகாமையால், அவனை "தோற்றக்கேடில்லாத மால்' என்றார். தொல்மால் - எப்போதுமுள்ள புராணபுருஷன். மால் - பெருமை, அடியார்கள்பக்கல் அன்பு, திருமகளிடத்துக்காதல், மாயை, கருநிறம், இவற்றை யுடையவன்.

தோற்றம் - தோன்றுதல்; தொழிற்பெயர். கேடு - "கெடு' என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர். போற்ற, உண்டாக என்னுஞ் செயவெனெச்சங்கள் - காரியப்பொருளனவாய் எதிர்காலங் குறிக்கும். உண்டாக, போற்ற, இசைத்தா ரென்க. உம்மை - முற்றுப்பொருளது. போற்றவும் உண்டாகவும் இசைத்தார் என வினைச்செவ்வெணாக்கி உரைப்பாரு முளர். பதியா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

இக்கவி அபியுக்தரி லொருவர்செய்த தென்பர். இது, வைஷ்ணவ சம்பிரதாயத்தில்'தனியன்' எனப்படும். (நூலினுள் அடங்காது தனியே பாயிர மாய் நிற்றல்பற்றியது, அப்பெயர்; 'அன்' விகுதி - உயர்வுப்பொருளது.)

காப்பு.

காப்பு - காத்தல்: அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்: ஆகவே, கவி தமக்கு நேரிடக்கூடிய இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை முடிக்கவல்ல தலைமைப்பொருளின்விஷயமாகச் செய்யுந் தோத்திர மென்பது, கருத்து. இக்காப்புச்செய்யுள் ஆழ்வார்கள் பன்னிருவரையும் பற்றியது. ஸ்ரீவைஷ்ணவசமயத்தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட இக்காப்புச்செய்யுள் விஷ்ணுபக்தர்களிற் சிறந்த ஆழ்வார்களைக் குறித்ததாதலால், வழிபடுகடவுள்வணக்கமாம். தம் தமது மதத்திற்கு உரிய கடவுளை வணங்குதலேயன்றி, அக்கடவுளது அடியார்களை வணங்குதலும் வழிபடுகடவுளின்வணக்கத்தின்பாற் படுமென அறிக. ஆழ்வார்களால் வெளியிடப்பட்டுள்ள திவ்வியப்பிரபந்தங்களின் சொற்பொருட் கருத்துக்களமையுமாறு அவர்களால் மங்களாசாஸநஞ்செய்யப்பெற்ற நூற்றெட்டுத்திருப்பதிகளின் விஷயமாகவே அம்முதனூல்கட்கு வழிநூல்போல இவராற் செய்யப்படுவது இப்பிரபந்த மென்பதுபற்றி, இந்நூலின் இக்காப்புச்செய்யுளை ஏற்புடைக்கடவுள்வணக்க மென்று கொள்ளவும் அமையும். இப்பன்னிரண்டுஆழ்வார்களும் திருமாலினிடத்துப் பரிவராய் அப்பிரானுக்கு ரக்ஷையாக நிற்கின்ற ஆயுதபரிஜனங்களின் அம்ஸமாவ ராதலால், அவர்களை ரக்ஷையாகக் கொள்ளுதல் ஏற்கு மென்க.