(ஆழ்வார்கள் பன்னிருவர்.) 1. | பொய்கை பூதன் பேயார் பொன்மழிசைக்கோன் மாறன் | | செய்யமதுரகவி சேரர்பிரான் - வையகமெண் | | பட்டர்பிரான் கோதை தொண்டர்பாதப்பொடி பாணன் | | கட்டவிழ்தார்வாட்கலியன் காப்பு. | (இ - ள்.) பொய்கை - பொய்கையாழ்வாரும், பூதன் - பூதத்தாழ்வாரும், பேயார் - பேயாழ்வாரும், பொன் மழிசை கோன் - திருமழிசையாழ்வாரும், மாறன் - நம்மாழ்வாரும், செய்ய மதுரகவி - செம்மையையுடைய மதுரகவியாழ்வாரும், சேரர் பிரான் - குலசேகராழவாரும், வையகம் எண் பட்டர்பிரான் - உலகத்தவரால் நன்குமதிக்கப்பெற்ற பெரியாழ்வாரும், கோதை - ஆண்டாளும், தொண்டர் பாதம் பொடி - தொண்டரடிப்பொடி யாழவாரும், பாணன் - திருப்பாணாழ்வாரும், கட்டு அவிழ் தார் வாள் கலியன் - (அரும்புகளின்) முறுக்கு விரிந்த மாலையைத் தரித்த வாட்படையை யேந்திய திருமங்கையாழ்வாரும், காப்பு - (நமக்கு) ரக்ஷகமாவர்; (எ - று.) ஆசீர்வாதம் (வாழ்த்து), நமஸ்காரம் (வணக்கம்), வஸ்துநிர்த்தேசம் (தலைமைப்பொருளுரைத்தல்) என்ற மூன்றுவகை மங்களங்களுள், இது - நமஸ்காரத்தின்பாற்படு மென்க. "பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை, யைய னருண்மாறன் சேரலர்கோன் - துய்யபட்ட, நாத னன் பர்தாள்தூளி நற்பாணன் நன்கலிய, னீதிவர்தோற்றத்தடைவா மிங்கு" என்றபடி திருவவதாரகிரமத்தால், பொய்கையார் பூதத்தார் பேயார் திருமழிசைப்பிரான் மாறன் குலசேகரன் பெரியாழ்வார் தொண்டரடிப்பொடி திருப்பாணர் திருமங்கையாழ்வார் என முறைப்படுத்தி, நம்மாழ்வாரது சிஷ்யரான மதுரகவியை அவரையடுத்தும், பெரியாழ்வாரது திருமகளாரான ஆண்டாளை அவரையடுத்தும் கூறின ரென உணர்க. பொய்கை - குளம்; கச்சித்திருப்பதியிலே திருவெஃகாவென்னுந் திவ் வியதலத்தின் வடபுறத்திலுள்ள பொற்றாமரைப்பொய்கையில் திருவவதரித்த ஆழ்வாரை "பொய்கை' என்றது - இடவாகுபெயர்; இனி, உவமவாகுபெயராய் ஊர்நடுவேயுள்ள குளம்போல எல்லார்க்கும் எளிதிற்பயன்கொடுப்பவ ரென்று உரைத்தல், சம்பிரதாயமன்று. பூதன் - எம்பெருமானையறிதலாலே தமதுஉளனாகையை யுடையவ ராதலால், இவர்க்கு இத்திருநாமம்; 'பூஸத்தாயாம்' என்றபடி ஸத்தையென்னும் பொருள்கொண்ட 'பூ' என்னும் வடமொழிவினையடியினின்று பிறந்த பெய ராதலால், 'பூதன்' என்பதற்கு - ஸத்தை (உள்ளவனாயிருக்கை) பெறுகின்றவ னென்று பொருளாயிற்று: இனி, இத்திருநாமத்துக்கு - (உலகத்தவரோடு சேராமையால்) பூதம் போன்றவ ரென்று பொருளுரைத்தல், சம்பிரதாயமன்று. பேயார் - உலகத்தவராற் பேய்போல எண்ணப்படுபவர்; அல்லது, அவர்களைத் தாம் பேய் போல எண்ணுபவர்; "பேயரே யெனக்கி யாவரும் யானுமோர், பேயனே யெவர்க்குமிதுபேசியென், ஆயனே யரங்கா வென்றழைக்கின்றேன், பேயனாயொழிந்தே னெம்பிரானுக்கே" என்ற கொள்கைப்படி இவர் பகவத்பக்தி |