பக்கம் எண் :

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி751

யாற் பரவசப்பட்டு நெஞ்சழிதல் கண்சுழலுதல் அழுதல் சிரித்தல் தொழுதல் மகிழ்தல் ஆடுதல் பாடுதல் அலறுதல் முதலிய செய்கைகளையே எப்பொழுதுங் கொண்டு காண்பவர் பேய்பிடித்தவரென்னும்படி யிருந்ததனால், பேயாழ்வாரென்று பெயர்பெற்றனர். பொன்மழிசைக்கோன் - திருமழிசை யென்று வழங்குகின்ற மஹீஸாரக்ஷேத்ரத்தில் திருவவதரித்த பெரியோன்; இத்தலம், தொண்டைநாட்டிலுள்ளது. நம்மாழ்வார்க்கு அநேகந்திருநாமங்கள் இருப்பினும், அவற்றில் 'மாறன்' என்பது, முதலில் தந்தையார் இட்ட குழந்தைப்பெய ராதலால், அதில் ஈடுபட்டு அப்பெயரினாற் குறித்தார். பிறந்த பொழுதே தொடங்கி அழுதல் பாலுண்ணுதல் முதலியன செய்யாமல் உலக நடைக்கு மாறாயிருந்ததனால், இவர்க்கு 'மாறன்' என்ற இத்திருநாமம் இடப்பட்டதுபோலும்; வலியவினைகட்கு மாறாக இருத்தலாலும், அந்நியமத ஸ்தர்களை அடக்கி அவர்கட்குச் சத்துருவாயிருத்தலாலும், பாண்டியநாட்டில் தலைமையாகத் தோன்றியதனாலும் வந்த பெய ரென்றலும் உண்டு. மதுரகவி - இனிமையானபாடல் பாடுபவர். மதுரகவிக்குச் செம்மை - மற்றை யாழ்வார்கள்போல எம்பெருமானுக்கு அடிமைப்படாமல் அப்பெருமானது அடியவரான நம்மாழ்வார்க்கு அடிமைபூணுதல்; பகவத்பக்தியினும் பாகவத பிரதிபத்தி விசேஷமென்பது, ஸ்ரீவைஷ்ணவசித்தாந்தம். சேரர்பிரான் - சேரநாட்டிலுள்ளார்க்கு அரசர். பட்டர்பிரான் - வித்துவான்களுக்கெல்லாந் தலைவர். வல்லபதேவனென்னும் பாண்டியராஜன் வேதாந்தசித்தாந்தமான பரதத்துவத்தை நிர்ணயம்பண்ணவேண்டுமென்று ஏற்படுத்திய வித்யாசுல்க மாகிய பொற்கிழியை, இவர் அங்குத்திரண்டுவந்த வித்துவான்களையெல்லாம் வாதத்தில்வென்று அறுத்துக் கொண்டது கண்ட அவ்வரசன் அக்காலத்தில் பண்டிதர்கட்கெல்லாந் தலைவராய் விளங்கிய தகுதிக் கேற்ப, இவர்க்கு இத்திருநாமத்தைச் சாற்றின னென்க. இவர் மற்றையாழ்வார்கள்போலத் தமதுநன்மையை நாடாமல் எம்பெருமானது நன்மையை நாடி அவனுக்குப் பல்லாண்டுபாடிய சிறப்புத்தோன்ற 'வையகமெண்பட்டர்பிரான்' என்றார். 'வையகம்' என்பது - இங்கு இடவாகுபெயராய், உலகத்திலுள்ளாரை உணர்த்திற்று. கோதை - மாலை; எம்பெருமானுக்கு மாலைபோல மிக இனியளாயிருப்பவள்: அல்லது, எம்பெருமானுக்குச் சமர்ப்பித்தற்காகத் தனதுதந்தையார் அமைத்துவைத்த பூமாலையை அவரில்லாதசமயத்தில் தான்சூடிக்கொண்டு அழகுபார்த்துப் பின்பு, கொடுத்தவள்; அன்றி, எம்பெருமானுக்குப் பாமாலைசூட்டினவள். தொண்டர்பாதப்பொடி - உள்ளும் புறமும் ஒத்துத் தொண்டுசெய்யும் மெய்யடியாரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவடித்தூளிபோல அவர்கட்குக் கீழ்ப்படிந்து அடிமைபூண்டு ஒழுகுபவராதலால், இவர்க்கு 'தொண்டரடிப்பொடி' என்று திருநாமம். பாணன் - வீணையுங் கையுமாய்ப் பெரியபெருமாள் திருவடிக்கீழே நிரந்தரசேவைபண் ணிக்கொண்டு பாட்டுப்பாடிப் புகழ்பவர்; பாண் - இசைப்பாட்டு. கலியன் - மிடுக்குடையவர்; சோழராசன் கட்டளைப்படி மங்கைநாட்டார்க்கரசராகிய இவர் குமுதவல்லியென்னுங் கட்டழகியை மணஞ்செய்துகொள்ளுதற்பொருட்டு அவள் சொற்படி நாடோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களைஅமுது