பக்கம் எண் :

854நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி

எம்பெருமானுக்கே அடிமைப்பட்டதனால், எனக்குப் பிறவித்துன்பங்களை இதுகாறும் விளைத்து என்னை வருத்தி வந்த பாவங்களெல்லாம் இனி என்னையணுகாது அஞ்சியோடு மென்பதாம். "அகஞ்சிவந்த கண்ணினராய் வல்வினையராவார், முகஞ்சிதைவராமன்றேமுக்கி - மிகுந்திருமால், சீர்க்கடலையுள் பொதிந்த சிந்தனையேன்றன்னை, யார்க்கடலாஞ் செவ்வேயடர்த்து," "வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ, கானோ வொருங்கிற்றுக் கண்டிலமால் - ஆனீன்ற, கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம், வன்றுயரையாவா மருங்கு" என்பன நம்மாழ்வார்பாசுரம். செறலினால், 'கொடுவினையார்' என அஃறிணையை உயர்திணையாக் கூறினார்; திணைவழுவமைதி.

இத்தலத்தி லெழுந்தருளிய வராகப்பெருமாள் தமதுதேவியை இடப்பக்கத்திற் கொண்டிருத்தலால், இத்தலத்திற்குத் திருவிடவெந்தையென்று திருநாமமாயிற்று.

(92)

20. திருக்கடன்மல்லை.

செறிந்தபணைபறித்துத்திண்களிற்றைச்சாடி
முறிந்துவிழப்பாகனையுமோதி - யெறிந்து
தருக்கடன்மல்லைக்குமைத்தான்றஞ்சமென்றுநெஞ்சே
திருக்கடன்மல்லைக்குட்டிரி.

(இ - ள்.) நெஞ்சே - (எனது) மனமே! - செறிந்த - நெருங்கியுள்ள. பணை - தந்தங்களை, பறித்து - பிடுங்கி, (அவற்றைக்கொண்டே), திண் களிற்றை - வலிய (குவலயாபீடமென்னும்) மதயானையை, சாடி - அடித்துக்கொன்று, - பாகனையும் - (அவ்யானையை நடத்துபவனான) பாகனையும், முறிந்து விழ - இறந்து கீழ்விழும்படி, மோதி எறிந்து - அடித்துத் தள்ளி, - தருக்கு அடல் மல்லை - செருக்கையும் தேகவலிமையையுமுடைய மல்லர்களை, குமைத்தான் - பொருது கொன்றவனாகிய திருமாலே, தஞ்சம் என்று - ரக்ஷகமென்று (அறுதியிட்டு), திருக்கடன்மல்லைக்குள் திரி - திருக்கடன்மல்லையென்னுந் திவ்வியதலத்திற் சென்று திரிவாயாக; (எ - று.)எம்பெருமானையே ரக்ஷகமாக நினைத்துத் திருக்கடன்மல்லையிற் சென்று வசித்தால் அப்பெருமான் விரோதிகளையெல்லாம் போக்கி நற்கதியளிப்ப னென்பதாம். இது, பூதத்தாழ்வார் திருவவதாரஸ்தலம்.

(93)

21. திருவல்லிக்கேணி.

திரிந்துழலுஞ்சிந்தைதனைச்செவ்வேநிறுத்திப்
புரிந்துபுகன்மின்புகன்றான் - மருந்தாங்
கருவல்லிக் கேணியாமாக்கதிக்குக் கண்ணன்
றிருவல்லிக்கேணியான்சீர்.

(இ - ள்.) திரிந்து உழலும் - (ஐம்புலவாசைகளிற்) சென்று அலைகின்ற, சிந்தைதனை - உங்கள் மனத்தை, செவ்வே நிறுத்தி - (அவ்வாறு செல்லவொட்