பக்கம் எண் :

868நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி

பதின்மருரைத்தபதியொருநூற்றெட்டுந்
துதிசெய்யவந்தாதிசொன்னா - னதிக
குணவாளபட்டரிருகோகனகத்தாள்சேர்
மணவாள தாசன்வகுத்து.

(இ - ள்.) அதிகம் குணம் ஆளர் பட்டர் - மிக்க நற்குணங்கள் வாய்ந்த வரான பெரியபட்டரது, இரு கோகனகம் தாள் - தாமரைமலர்போன்ற திரு வடித்தாமரைக ளிரண்டையும், சேர் - (தஞ்சமென்று) பற்றின, மணவாள தாசன் - அழகியமணவாளதாசன், - பதின்மர் உரைத்த - ஆழ்வார்கள் பதின்மரும் மங்களாசாசனஞ்செய்தருளிய, பதி ஒரு நூற்றெட்டும் - திருமாலின் நூற்றெட்டுத் திருப்பதிகளையும், துதி செய்ய - தோத்திரஞ் செய்யுமாறு, வகுத்து - (சோழநாடு முதலியனவாகப்) பகுத்துக்கொண்டு, அந்தாதி சொன்னான் - இந்த அந்தாதிப்பிரபந்தத்தைப் பாடினான்; (எ - று.)

ஆழ்வார் பதின்மரும் மங்களாசாசனஞ் செய்தருளிய நூற்றெட்டுத் திருப்பதிகளையும் யாவரும் உணர்ந்து துதிக்குமாறு சோழநாடு முதலாகப் பிரித்துக்கொண்டு நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியைப் பிள்ளைப்பெருமாளையங்கார் பாடின ரென்பதாம்.

இச்செய்யுளிரண்டும் - நூலாசிரியர் தம்மைத் தானே பிறன்போலும் பாயிரங்கூறியன; பிரயோகவிவேகநூலார் - 'இது, தன்னைப் பிறன்போலும் நாந்தி கூறுகின்றது. வடநூலார் தாமே பதிகமும் உரையும் செய்வார்: இனிச் சம்பந்தர் சடகோபர் முதலாயினாரும் திவாகரரும் பதினெண்கீழ்க்கணக்குச் செய்தாரும் முன்னாகப் பின்னாகப் பதிகங்கூறுவதுங் காண்க' என்றவை கருதத்தக்கன. இது, தற்சிறப்புப்பாயிர மெனப்படும்.

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி முற்றிற்று.