பக்கம் எண் :

சீரங்கநாயகரூசல்899

(இ - ள்.) அரு வரங்கள் தரு - (தன்னையடைந்த அடியார்க்கு) அரிய வரங்களைக் கொடுக்கின்ற, பராங்குசனே ஆதி - நம்மாழ்வார் முதலாகிய, ஆழ்வார்கள் - ஆழ்வார்கட்கு, தம்பிரான் - தலைவரே! ஊசல் ஆடிர் -; இருவர் அங்கம் ஒளிக்கு அகலா - (சூரிய சந்திரர் என்னும்) இருவருடைய மேனியிலிருந்துவீசுகிற (வெயில் நிலவு என்கின்ற) ஒளிக்கும் போகாத, இருள் - அஜ்ஞாந அந்தகாரத்தை, அகற்றும்- நீக்குகின்ற, எதிராசன் - எம்பெருமானார்க்கு, தம்பிரான் - தலைவரே! ஊசல் ஆடிர்-; தரு வரங்கள் நீள் பொழில் - சிறந்தமரங்கள் மிகுதியாக நீண்டுவளரப்பெற்ற சோலைகள்சூழ்ந்த, கூரத்து - திருக்கூரமென்னுந் தலத்தில் அவதரித்த, வேத ஆசாரியனார் - வேதத்தில் தேர்ந்த ஆசிரியராகிய கூரத்தாழ்வானுக்கு, தம்பிரான் - தலைவரே! ஊசல் ஆடிர் -; திருவரங்கத்து - திருவரங்கம் பெரிய கோயிலிலேயுள்ள, அணி அரங்கன் திருமுற்றத்து தெய்வங்கள் - திருவரங்கன்திருமுற்ற மென்னும் இடத்தில் வந்து வணங்குகின்ற தெய்வங்கட்கெல்லாம், தம்பிரான் - தலைவரே! ஊசல் ஆடிர் -; (எ - று.)  

(31)

32.உணராதமதலையிளங்குதலைச்சொல்லை
        யுளமுருகித்தந்தைதாயுவக்குமாபோற்
றணவாமற்கற்பிப்பார்தஞ்சொற்கேட்டுத்
        தத்தையுரைத்தத்தையாதரிக்குமாபோற்
பணவாளராமுடிமேற்படியேழ்போற்றும்
        பட்டர்திருத்தாட்கடிமைப்பட்டகாதன்
மணவாளதாசன்றன்புன்சொற்கொண்ட
        மதிலரங்கமணவாளராடிரூசல்.

(இ - ள்.) உணராத - நன்றாகப்பேசத்தெரியாத, மதலை - சிறுகுழந்தையின், இள குதலை சொல்லை - நிரம்பாத மழலைச்சொல்லை, தந்தை தாய் - (அக்குழந்தையைப்பெற்ற) தாய்தந்தையர், உளம்உருகி - மனங்கரைந்து, உவக்கும் ஆ போல் - சந்தோஷிப்பதுபோலவும், - தணவாமல் - இடைவிடாமல், கற்பிப்பார் - கற்பிப்பவர், தம் சொல் கேட்டு - தாம் சொன்ன சொற்களைக் கேட்டுக்கொண்டு, தத்தை உரைத்தத்தை - கிளி பேசினதை, ஆதரிக்கும் ஆ போல் - விரும்பிமகிழும் விதம்போலவும், - பணம் வாள் அரா முடிமேல் - படமும் ஒளியு முடைய ஆதிசேஷனது முடிமேலுள்ள, படி ஏழ் - ஏழுதீவுகளிலுள்ளாரும், போற்றும் - வணங்கித்துதிக்கின்ற, பட்டர் திருத்தாட்கு - ஸ்ரீபராசரபட்டரது திருவடிகட்கு, அடிமைப்பட்ட - அடிமையாகிய, காதல் - பக்தியையுடைய, மணவாளதாசன்தன் - அழகிய மணவாளதாசனென்னும் அடியேனது, புல் சொல் - இழிவான சொல்லாகிய பிரபந்தங்களையும், கொண்ட - ஏற்றுக்கொண்டருளிய, மதில் அரங்கம் மணவாளர் - ஸப்தப்ராகாரங்கள் சூழ்ந்த திருவரங்கத்தி லெழுந்தருளிய அழகியமணவாளரே! ஊசல் ஆடிர் - ; (எ - று.)