பக்கம் எண் :


அப்பூதியடிக ணாயனார் புராணம்1019

 

12. தமக்கு ஒரு நல்ல பேறு கிடைத்தபோது இது சிவனருளால் வந்த தென்று மகிழ்வது பெரியோரியல்பு. (1804)

13. தமது பெற்றோரும் பெரியோரும் தம்மை ஒரு காரியத்தில் ஏவிய போது அதனை மகிழ்ந்தன்புடன் ஏற்றுச் செய்வதும், "நல்ல தாய் தந்தை யேவ நானிது செயப் பெற்றேன்" என்று திருந்திய கருத்துடன் அதனுட் புகுவதும் மக்களியல்பு. (1806)

14. திருநாவுக்கரசர் அமுது செய்தற்குப் பரிகலக்குருத்தை அரியும் போது அல்லலுற்று அழுங்கிச் சோரக் கையினில் அரவந் தீண்டப்பெற்ற பிள்ளையாகிய மூத்த திருநாவுக்கரசு, "அரவின் வேகத்தால் யான் வீழா முன்னம் வேகத்தாற் சென்று இக்குருத்தைக் கொடுப்பன்; பெரியவர் அமுது செய்யத் தாழ்க்கும்படி இதனை யாரிடமும் சொல்லேன்" என்று ஓடிச்சென்று குருத்தைத் தாயார்பால் வைத்து மயங்கி வீழ்ந்தான். இதுவே சிவனன்பின் றிறத்துத் திருந்திய அம் மகனது சிறப்பு. இளைஞர்கள் இவ்வாறு சிவன்பால் அன்பு திருந்திய அம் மகனது சிந்தையும் செயலும் பொருந்தப் பழகி ஒழுகுதல் உயிர்க்கு ஊதியம் தருவதாம். சைவ வுலகம் இதனைக் கண்டு திருந்த ஒழுகுவது நலம். (1808)

15. மயங்கி வீழ்ந்த மகனது உடலில் உதிரஞ்சோர்வடுவும், மேனியும், பல்லும் கண்ணும் கருகிய நிலையும் கண்டு விடத்தினால் வீந்தான் என்று துணிந்த அப்பூதியாரும் மனைவியாரும் அதனாற் சிறிதும் துளங்காது திருத்தொண்டர் அமுது செய்யும் வகைகளைச் சூழ்ந்து செய்யலாயினர்; இது சிவனன்பின்றிறம், "மெய்ம்மையாம் பொருள் விவேகமும் வேறுபாடாய, பொய்ம்மையாம் பொருள் விவேகமும் புந்தியுட்டோன்ற"த் தெளிந்து இம்மை மறுமையிரண்டின் ஆசையும் நீத்துச் சிவனடியாகிய வீடுபோற்றின் விருப்பமிக்கவரே இத்தன்மை செய்யவல்லவர். உலகர்க்கு இதன் உண்மை விளங்குதல் அரிது. (1810)

16. நீறு சாத்த உமது மூத்த பிள்ளையையும் காட்டும் என்று வாகீசர் சொன்னபோது அப்பூதியார் அவன் "இப்போது இங்கு உதவான்" என்றனர். அது கேட்டலும் அப்பரது செவ்விய திருவுள்ளத்து ஒர் தடுமாற்றம் சேர்ந்தது உண்மை விளங்கச் செய்தது. இவ்வாறு திருவருள் தமது உள்ளத்தினின்று உண்மையுணர்த்த உணர்குவர் பெரியோர். (1815)

17. திருநாவுக்கரசர் சிவபெருமானைப் பாட, மகன் விடம் நீங்கி உயிர்பெற் றெழுந்தனன், அது கண்ட பெற்றோர்கள் மகிழாது, பெரியவர் அமுது செய்ய இவன் சிறிது இடையூறு செய்தனன் என்று சிந்தை நொந்தனர். இது உலக உள்ளபடி தெளிந்த உண்மை யன்பின் திறம். (1819)

18. தாமும் அடியார்களும் அமுது செய்யும்போது அப்பூதியாரையும் மக்களையும் தம் உடனிருந்து அமுது செய்யும்படி ஏவினர் திருநாவுக்கரசர்; அவர்களும் அவ்வாறே செய்தனர். இஃது சிவனன்பின் றிறத்தால் உலகிய லுணர்வு தூர்ந்து சிவபோதம் வெளிப்படலால் நிகழ்ந்த செயல். சாதிநிலை மரபுகள் சமய நிலைகள் வேறு; சமயங் கடந்த சிவபோத நிலைவேறு. இந்நிகழ்ச்சியினின்று சாதி நிலை மரபுகள் இல்லை என்றாவது, அவை வேண்டப்படா என்றாவது கொள்ளும் முடிவுகள் போதரா. சாதி, சமய, மரபொழுக்கங்களை மனத்தினுங் கடத்தலாகாதென்பது தற்போதமுடையார்க்கு விதித்த இறைவன் கட்டளை (1822-1823)

19. அப்பூதியாரது திருத்தொண்டினைச் சிறப்பித்துச் சிவபிரானைத் துதிக்கும் திருப்பதிகத்துட் பாடியாருளினர் திருநாவுக்கரசர். பெருமானது திருப்பாட்டினுள் வைத்துச் சிறப்பிக்கப்படுதல் அன்பின் மேன்மையாம். (1825)

20. அப்பூதியார் திருநாவுக்கரசரது திருநாமத்தைத் துதித்த வழியினாலே சிவன் கழல் நண்ணினார். இது அடியார் பெருமை. (1826)