தலவிசேடம் :- (1) திங்களூர் - சோழநாட்டில் தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. III பக்கம் 315 - பார்க்க. - 2. திருப்பழனம் - சோழநாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. திருவையாறுள்ளிட்ட ஏழு பெருந்தலங்களுள் ஒன்று. III பக்கம் 331 - பார்க்க. சில குறிப்புக்கள் - அப்பூதியார் சரித நிகழ்ச்சிகள் இப்புராணத்தினுள்ளும், திருநாவுக்கரசு நாயனார் புராணத்தி (1465) முதல் 1476 வரை) னுள்ளும் கூறப்படுகின்றன. இவ்வாறு ஒரே சரிதத்தை இரண்டு முறை கூற நேர்ந்தபோது கூறியது கூறலாகா வண்ணமும், முன்பின் மலையுபடா வண்ணமும் அவ்வவ்விடத்துக்கேற்ற அளவு மட்டில் அமைத்துக் கூறுவது ஆசிரியரது தெய்வக் கவிநலச் சிறப்புக்களுள் ஒன்று, திருநாவுக்கரசர் புராணத்தினுள் இது மிகச் சுருக்கியும், ஈண்டு அச்சுருங்கிய இடங்களை விரித்தும் சொல்லிப்போகும் அழகுகாணத் தக்கது. "செப்பருஞ்சீர் அப்பூதியடிகள்" (1465) என்று முன்கூறிய அப்பூதியாரது சிறப்பை ஈண்டு "தாண்டவம் புரிய வல்ல தம்பிரா னாருக் கன்பர்" (1783); "களவு பொய் காமங் கோப முதலிய குற்றங் காய்ந்தார் (1784)" "வடிவு தான் காணாராயும்" (1785) என்று மூன்று பாட்டுக்களால் விரித்தனர். அவர் அரசுகளது திருநாமத்தாற் செய்த அறங்களை முன்னர் "அந்தணரின் மேம்பட்ட" (1466) என்றதொரு பாட்டாற் கூறியதனை, ஈண்டு (1787முதல்1791 வரை) 5 பாட்டுக்களாற் சிறப்பித்தனர். அரசுகளைத் தமது மனைக்கடைத்தலையில் அப்பூதியார் கண்டு அறிந்து வழிப்பட்டுத் திருவமுது கொள்ள விண்ணப்பித்து அவரிசைவு பெற்றது வரை முன்னர், "மற்றவரு மனமகிழ்ந்தூ" (1467) என்ற ஒரு திருப்பாட்டிற் சுருக்கிக் கூறியருளிய ஆசிரியர். ஈண்டு 1792 முதல் 1803 வரை பன்னிரண்டு திருப்பாட்டுக்களால் விரித்துக்கூறினர். இவ்வாறே, பிள்ளை வாழைக்குருத்தரியப் புக்கபோது அரவந் தீண்ட அவன் அதனைப் பொருட்படுத்தாது மனைக்கு ஓடிவந்து குருத்தை வைத்து வீழ்ந்த நிகழ்ச்சியினை ஈண்டு, (1806 - 1809) நான்கு பாட்டுக்களாலும் புதல்வன் விடத்தினால் வீந்தான் என்றறிந்த அப்பூதியாரும் மனைவியாரும் மனத்திற் றடுமாற்றமில்லாது அவனுடலைப் பாயினுள் மறைத்து அரசுகள் திருஅமுது செய்வதற்குச் சூழ்ந்த செயல்களை 1812 முதல் 1816 வரை 5 திருப்பாட்டுக்களாலும் அரசுகளைத் திருவமுது சேய்வத்த சிறப்பை 1818 முதல் 1824 7 திருப்பாட்டுக்களாலும் ஈண்டு விரித் தருளினர்; இப்பகுதிகள் முன்னர் ஒவ்வோர் பாட்ாடிற் கூறப்பட்டன. இவை அப்பூதியாரது தன்மைகளைச் சிறப்பிக்கும் பகுதிகளானமையால் இப்புராணத்தினுள் விரிக்கப்படும் தகுதியுடைமை காண்க. புதல்வனது உடலை மனையிலிருந்து அரசுகள் திருக்கோயிலின்முன் கொணர் வித்து விடம் நீங்க அருளும்படி பாடினார் என்றும், "ஒன்றுகொலாம்" என்ற பதிகம் பாடினர் என்றும் (1473) முன்னர் அரசுகளது புராணத்தினுட் சுறினர். அவை ஈண்டுக் கூறாது குறிப்பிற்பெற வைத்தருளினர். இவை அரசுகளது செயல்களாணமையின் ஆண்டுக் கூறப்படும் தகுதி யுடைமையும் காண்க. இவ்வாறே ஆளுடையபிள்ளையாரும் அரசுகளும் திருப்புகலூரில் ஒன்றுகூடித் திருமறைக்காட்டினின்று பிரியும் வரை சேர்ந்தே யாத்திரை செய்தனர். திருவீழிமிழலையில் அருட்காசு இருவரும் பெற்றனர். திருமறைக்காட்டில் கதவம் திறக்கவும் அடைக்கவுமாக இருவரும் அற்புதச் செயல்கள் நிகழ்த்தினர். இப்பகுதிகள் அவ்விருவர் புராணத்தினுள்ளும் உரைக்கப்படுவன. ஆயின் மேலேகூறிய தகுதி பற்றி அவ்வவரைப்பற்றிய பகுதிகள் அவ்வப் புராணத்தினுட் சிறப்பாகவும்விரிவாகவும் ஏனையவை பொதுவாகவும் சுருக்கமாகவும் பேசப்படும்முறை அவ்விரு புராணங்களின் அவ்வப் பகுதிகளையும் ஊன்றி நோக்குவோர்க்குப் புலப்படும். ஆண்டும் இவ்வாறே ஒப்புநோக்கிக் கண்டுகொள்க. இவ்வாறுவரும் பிறவும் காண்க. _______ |