பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்229

 

அநுசிதமாயினவும், மாயா காரியமாயினவும், வீதி நடக்கும் அடியார்க்குப் பலவாறும் இடையூறு விளைப்பனவுமாமாதலின் அவற்றை வாரி எறிய வேண்டியதாயிற்று என்க.

பவனன் பணிசெய - வாயுதேவன் காற்றினால் திருவலகுப்பணி செய்து அபபுறப்படுதத, பவனன் - வாயுதேவன். வருணன் புனல் கொடு பணிமாற - வருண தேவன் நீரினால் கழுவித் தூயமையாக்க. பணிமாற - பணிசெய்து முடிக்க. பணிமாறவும் - உம்மை பணிசெய் திருப்பவும் என உயர்வு சிறப்பு.

அவை பழுதாம் என்று - அத்தேவர்கள் அடியார்களை உபசரிக்கவும் பணி செய்யவும் போதிய தகுதியும தவமும் சீலமு முடையரல்லர் என்று கொண்டு. பழுதாவது விதிப்படி செய்யப்படாமை.

எவருந் தொழுதெழும் அடியார் - தேவர்களும் அவ்வவர் திறத்துக்கேற்ப அவரினுந் தாழ்ந்த சிற்சில சிறியோராற் றொழப்படுவாராவர்; அடியார்களோ அத்தேவர் முதலிய யாவராலும் தொழப்படும் தன்மையுடையார்கள். தேவர் செய்யும் பணி பழுதாமென்று எண்ணுதற்குக் காரணம் கூறியபடி. தம்மைத் தொழும் பண்புடைய சிறியோர்களை இச்செய்கை செய்யவிடாது மேம்பட்ட அடியார்கள் தாமே அவற்றைச் செய்தனர் என்பது. "தொழுதபின்னைத், தொழப்படுந் தேவர்தம் மாற்றொழு விக்குந்தன் றொண்டரையே" என்ற திருவாசகக் கருத்துக் காண்க.

திருவலகு இடுவார் குளிர்புனல் விடுவார் - இது அடியார் செய்கையைக் கூறும் மரபு. தேவர் செயதவற்றைக் கூறியதுடன் ஒப்பு நோக்குக.

இவை நாயனார் வரவு நோக்கி அடியார் திருவீதிப் பணிசெய்த சிறப்பு.

போகட்டுப் - என்பதும் பாடம்.

163

1429.

மேலம் பரதல நிறையுங் கொடிகளில்
         விரிவெங் கதிர்நுழை வரிதாகும்
கோலம் பெருகிய திருவீ தியைமுறை
         குலவும் பெருமையர் பணிவுற்றே
ஞாலந் திகழ்திரு மறையின் பெருகொலி
         நலமார் முனிவர்க டுதியோடும்
ஓலம் பெருகிய நிலையேழ் கோபுர
         முறமெய் கொடுதொழு துள்புக்கார்.

164

(இ-ள்.) குலவும் பெருமையர் - விளங்குகின்ற பெருமையையுடைய நாயனார்; மேல் அம்பரதலம்.....திருவீதியை - மேலே ஆகாயததின் வெளியிடங்களெங்கும் நிறையும் கொடிகளினூடு, விரியும் வெவ்விய சூரியனது கதிர்கள் நுழைவதற்கரியதாகிய கோலம் பெருகிய திருவீதியினை; முறை - முறையாக; பணிவுற்றே - பணிந்தே; ஞாலம்....தொழுது உள்புக்கார் - உலகு திகழும் திருமறைகளின் பெருகிய ஒலியானது நன்மை பொருந்திய முனிவர்கள் செய்யும் தோத்திர ஒலியுடனே ஓலம் பெருகிய எழுநிலை மேலைக் கோபுரத்தையும் உடல் நிலம் பொருந்தப் பணிந்துகொண்டு தொழுது உள்ளே புகுந்தனர்.

(வி-ரை.) மேல் அம்பர தலம் - மேலே உள்ள வானவெளி.

வெங்கதிர் நுழைவு அரிதாகும் கோலம் - கொடிகள் செறிவாக உயர்த்து நாட்டப்பட்டிருத்தலின் அவற்றினூடே ஞாயிற்றின் கதிரும் நுழைவதரிதாகும் அமைப்பு. கொடிகளின் செறிவு குறித்தது.