பக்கம் எண் :


284திருத்தொண்டர் புராணம்

 

என்ற பொருளில் வந்தது. "ஒட்டிட்ட பண்பின்", "ஒட்டியாட் கொண்டு", "உயிராவணமிகுந்து உற்று நோக்கி" (தேவா). உணர்ந்து - உணர்ச்சியினால் வேறொன்றும் நிகழாது அவனையே உட்கொண்டு. உருகுதல் - மனநெகிழ்தல்; ஊறுதல் - அந்நெகிழ்ச்சி மிகுந்து மேல் ஓங்குதல்; உள்கசிவு - ஊற்றம்பெருகிக் கண்ணீர் முதலியவற்றால் வெளியாதல். நற்றுணையாவர் - தலத்துச் சுவாமி பெயர். - மாட்டாச் சிலந்தி - செய்த சிலந்தி - என்று கூட்டுக. விடியலே மூழ்கிப் பூவுநீருங்கொண்டு வலம்வந்து போற்றிச் சிவாகம விதிப்படி வழிபட இயலாமையால், தன்னாலியன்றவாறு இறைவனது திருமுடிமேல் சருகுகள் உதிராதபடி வாய்நூலாற் பந்தர் செய்தது இச்சிலந்தி என்பது சரிதம். அரையன் - கோச்செங்கட்சோழர். சீர்மைகள் - இவ்வுலகிற் பின்னும் சிவனடி பேணும் உணர்வுடன் பிறந்து; ஆண்டு, சிவனுக்கு எழுபத்தெட்டு மாடக் கோயில்கள் ஆக்கிப், பணிசெய்து, பின்னர் சிவலோகம் புகும் சிறப்புக்கள். அருளவல்லார் - வல்லார் - அருமைப்பாட்டின் மிகுதி குறித்தது. (3) எண்பதும் பத்தும் ஆறும் - 96 என்னும் தத்துவ தாத்துவிகக் கூட்டம். கண்பழக்கு - கண்ணோட்டம் - இரக்கம். அலக்கழிதல் - அலைப்புண்டு வருந்துதல். நண்புசெய் - பொருந்தி வளர்ந்திருத்தலை நண்பு செய்தல் என உபசரித்தார்.- (1) பண்ணும் பாடலும் - பழமும் இரதமும் - கண்ணும் பார்வையும் - கருத்தும் கற்பமும் - எண்ணும் எண்ணமும் என்பன இறைவர் உயிர்களுடன் அத்துவிதமாகக் கலந்து நிற்கும் கலப்பினைக் குறிக்கும் உவமைகள். முதன் மூன்றும் புற இந்திரியக் கலப்புக்கும்' பின் இரண்டும் உள் இந்திரியக் கலப்புக்கும் கொள்க. கருத்தும் கற்பமும் - கற்பிக்கப்படு பொருளும் கற்பிக்கும் பொருளும். கற்பம் - கற்பிப்பது என்ற பொருளில் வந்தது. எண்ணின்ஆர் (பொருந்திய) எண்ணம் எனவும், எண்ணினாரது எண்ணம் எனவும் ஆம். உலகனைத்துமாகி - மாயையினின்றும் தோன்றச் செய்து அதனுள்ளே ஆகி - கலந்து.- (5) நாயனார்க்குச் சமணர் தந்த நஞ்சு கலந்த பாற் சோற்றை அழியாமையைத் தரும் அமுதமாக ஆக்கிய திருவருட் சரித நிகழ்ச்சி குறித்தது. 1369-ம் பாட்டும் ஆண்டுரைத்தவையும் பார்க்க.- (6) அகழ்தல் - நிலங்கீண்டு செல்லுதல். நின்மலன் என்று ஏத்தும் நினைப்பினை அருளி - இறைவர் தம் இயல்பானே மல மற்றவர் என்றதனால் பசுக்களாகிய நாம் மலத்தாற் கட்டுண்டவர் என்றும், மலம் அறுத்தால் இறைவனை யடையலாம் என்றும், அறுத்தல் நின்மலனாகிய அவனால் ஆவதென்றும், அதற்கு அவனை நினைந்து ஏத்தியடைவதே உபாயமென்றும் அறியும் எண்ணம் நின்மலன் என்ற ஒரு சொல்லாலே காண வைத்தார். அருளி - "அவனருளாலே அவன்றான் வணங்ங்கி" (திருவா). அவனை நினைத்தற்கும் அவனே அருளவேண்டும். "கருதுமாகருதே" (திருவிசைப்பா). நம் மலமறுப்பர் - மல நீங்கப் பெறுதல் பயன்.- (7) அரவித்து - ஒலிப்பித்து. அரைவித்து என்பது அரவித்து என நின்றதெனினுமாம். வீடிலா - பற்று விடுதலில்லாத.- (8) புண்ணுளே - ஆக்கை - மனித உடலின் தன்மை.- (10) பத்து - சொற்பின்வருநிலை.

தலவிசேடம் :- திருநனிபள்ளி - மூவர் பாடலும் பெற்ற பெருமையுடையது. இது புஞ்சை என வழங்கப் பெறும். காவிரிக்குத் தென்கரை 43-வது தலம். இது முன்னர்ப் பாலையாய் இருந்ததனை ஆளுடைய பிள்ளையார் நெய்தனிலமாகப் பாடியும், அதனையே பின்னையும் கானகமும் வயலுமாக்கியும் அருளினர். "பாலை நெய்தல் பாடியதும்" (திருக்களிற்றுப்படியார்). "நாத னனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கியஃதே, "போதின் மலிவய லாக்கிய கோன்" (11-ம் திருமுறை - ஆளு - அந்தாதி - 17).

திருச்செம்பொன்பள்ளி செம்பொனார்கோயில் - என்ற இருப்புப்பாதை நிலயத்தினின்றும் வடகிழக்கே மட்சாலையில் ஒரு நாழிகையில் உள்ளது.


திருநனிபள்ளி-சுவாமி கோயில்-விமானம்