பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்283

 

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கொடுங்கண் - தோண்டப்பட்ட கண்ணையுடைய. "கண்டொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை" (முருகு). படுங்கண் - படும் இடுக்கண்.- (3) சுண்ணப் போர்வை - போர்வை போர்த்ததுபோல் மேலெல்லாம் நீறுகொண்டு விளங்குதல்.- (5) இப்பாட்டு அகத்துறை. தாய் அல்லது செவிலி கூற்று.- (7) கருங்களிறின்றி - ஏறுடை - "கடகரியும் பரிமாவுந் தேருமுகந் தேறாதே, இடபமுகந் தேறியவாறு" (திருவாசகம்).- (9) அஞ்சியாகிலு மன்புபட்டாகிலும் நெஞ்சம்! நீநினை - அச்சம் அன்பு என்ற இரண்டினிலொன்றே அன்பு செய்தற்குக் காரணமாவன. "அஞ்சி லன்பதி லொன்றறியாதவன்." என்றது கம்பர் பாட்டு.- (10) அளி - அன்பு. அல்கும் - குறையும்.

தலவிசேடம் :- திருநின்றியூர் - மூவர் தேவாரங்களும் பெற்ற பெருமையுடையது. இலக்குமி பூசித்த தலமென்பது வரலாறு. நியமமாய்த் தரிசித்து வந்த ஒரு சோழ அரசன் கொணர்ந்த திரி (தீவர்த்தி) நின்றபோது (அவிந்து விட்டபோது) இறைவரது இலிங்கத் திருமேனியினின்றும் சோதி தோன்றிய ஊர் என்பதும் ஒரு வரலாறு. திருநாவுக்கரசு நாயனார் நாற்பத்தொன்பதினாயிரம் பதிகங்கள் பாடியதனை ஆளுடையநம்பிகள் இத்தலத்துத் தேவாரத்துள் வைத்துப் போற்றியருளினார். தக்கேசிப்பண்ணில் அமைந்த அவரது அந்தத் திருப்பதிகம் பலசரித அருமைகளைப் போற்றுவது. சுவாமி - மகாலட்சுமி நாதர். அம்மை - உலகநாயகி. பதிகம் 4.

இது ஆனைதாண்டவபுரம் நிலையத்தினின்றும் வடகிழக்கே மட்சாலை வழி இரண்டு நாழிகையளவில் அடையத்தக்கது.

திருநனிபள்ளி

திருச்சிற்றம்பலம்

திருநேரிசை

முற்றுனை யாயி னானை மூவர்க்கு முதல்வன் றன்னைச்
சொற்றுணை யாயி னானைச் சோதியை யாத ரித்து
உற்றுணர்ந் துருகி யூறி யுள்கசி வுடைய வர்க்கு
நற்றுணை யாவர் போலு நனிபள்ளி யடிக ளாரே.

1

அரவத்தால் வரையைச் சுற்றி யமரரோ டசுரர் கூடி
யரவித்துக் கடையத் தோன்று மாலநஞ் சமுதா வுண்டார்
விரவித்தம் மடிய ராகி வீடிலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ வொட்டர் நனிபள்ளி யடிக ளாரே.

7

திருச்சிற்றம்பலம்

பதிகக்குறிப்பு :- ?நனிபள்ளி அடிகளாரே" என்ற மகுடம் முதல் ஏழுபாட்டுக்களில் உள்ளது. எட்டாவது பாட்டில் பின்னிரண்டடிகளும் ஒன்பதாவது பாட்டும் சிதலரித்தொழிந்தன! பத்தாவது பாட்டு நனிபள்ளிப்பாமனாரே என்ற மகுடமுமுள்ளது. நனிபள்ளி யிறைவர் கசிவுடைய அடியவர்க்கு நற்றுணையாவர்; நண்ணினார் வினைகள் தீர்ப்பர்; நினைப்பினை யருளி நாளும் நம்மல மறுப்பர்; தொண்டர் தம்மை நரகத்தில் வீழ வொட்டார்; சிலந்திக்கும் இராவணனுக்கும் அருள்கொடுத்தார்; அலக்கழிந்த எனக்குச் சமணர்; தந்த தஞ்சழ தாக்குவித்தார். காலை மாலை தொடர்ச்சியை மறவாதே அஞ்செழுத்தோதினால் அறனடிக்கன்பு வளரும்.

பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) முற்றுணை - முன் துணை - முதன்மையாகிய துணை. மூவர் - அயன், அரி, அரன்; சொற்றுணை - நமச்சிவாயப்பதிகத் தொடக்கக் குறிப்பு. உற்று - உணர்ந்து - உருகி - ஊறி - உள்கசிவுடைய - இவை தனித்தனி அன்பு உறுதலும் வளர்தலும் பெறும் மன நிலைகளைக் குறித்தன. உற்று - ஒட்டி


திருநின்றியூர்