(இ-ள்.) வெளிப்படை. மணம் பொருந்திய மலர்களையுடைய புன்னைகளின் மணம் சூழ்ந்த சோலைகளையுடைய உப்பளங்களின் முற்றங்களிலெங்கும் சிறுமியர்கள் முத்துக்களைக் கொழிக்கும் சொழிப்புடைய திருமறைக்காட்டில், பொன்மலையை வில்லாகவுடைய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளிய கோயிலுனுட் புகுந்து வலமாக வந்து, அழகிய சீகாழிக் கிறைவராகிய ஆளுடைய பிள்ளையாரும் அரசுகளும் இறைவரது திருமுன்பு சென்று சேர்ந்தார்கள். (வி-ரை.) மன்றல்விரவு....மறைக்காடு - திருமறைக்காடு கடற்கரையில் உள்ள தலம். நெய்தற்றிணையைச் சார்ந்ததாதலின் அத்திணைக்குரிய நிலமும் கருப்பொருள்களும் செழிக்க உள்ளன. புன்னை - முத்து - நெய்தற் றிணைக்கருப் பொருள்கள். "மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலை", "புன்னைப் பொழிற்புக லூரண்ணல்"."சுரக்கும் புன்னைகள்சூழ்" (தேவா) முதலிய திருவாக்குக்களும், 1113-ம், பிறவும் காண்க. உப்பளம் - உப்பு விளைக்கும் அளம். அந்நில மக்கள் செய்தொழில் உப்பு விளைத்தல் முதலியன. நெய்தற்கு உணா - உப்பு விலை எனப்படுவது காண்க. முத்தங் கொழித்தல் - அந்நிலச் சிறுமியர் விளையாட்டு. கழிக்கானல் சூழ்ந்த நெய்தல் முடைநாற்றமுடைமையாலும், உவர்நீருடைமையாலும், பிறவாற்றாலும் மக்கள் செல்லவும் வாழவும் விரும்பாத தொன்றாம் போலும்? என்பாரை நோக்கி, அற்றன்று; அது புன்னைமலர் நறுமணங் கமழும் சோலையுடையது; உணவுக்குச் சுவை தரும் உப்புத் தருவது; மனதுக்கும் உடற்கும் இனிமைதந்து மக்களின் மனங்களை முத்தி நெறியிற் கைகாட்டி யுதவும் முத்துக்களையுடையது; அங்கு மக்கள் இனிது வாழ்வர் என்று எந்தம் பெரு மக்கள் சேர்ந்தருளும் சமயத்தில் மக்களின் மனங்களை இன்ப மயமாக்கி உடன் ஈர்த்துச் சென்று வழிப்படுத்த அமைந்ததுபோல்வது இவ்வழகிய திருப்பாட்டு, திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்துள் நெய்தலைப்பற்றியும், நெய்தலோடு பிறதிணை மயங்கும் திணைமயக்க ஒழுக்கம் பற்றியும் வரும் பகுதிகளையும், பிறவற்றையும் இங்கு நினைவுகூர்தல் இப்பாட்டினை அறிந்தனுபவிக்க உதவும். உவகை நயப்பும் மனவெழுச்சியும் சேராத உப்பளத்தை ஒரு அழகிய சோலை சூழும் அரண்மனையாக்கி உரைப்பது தெய்வக் கவிநலமாம். மறைக்காட்டுக் - கோயில் என இயைக்க; மறைகளாற் பூசிக்கப்பட்டதாதலின் மறைக்காடெனப்படும். மகிழ்ந்த - விரும்பி வெளிப்பட வீற்றிருக்கும் புகுந்து - வலங்கொண்டு - சென்று - திருமுன்பு - சேர்ந்தார் - திருமுன்பு சேருமுன் செய்யத் தக்க வாழிபாட்டு முறைகள். தென் புகலி - தென் - அழகு குறித்து நின்றது. தென்புகலிக் கோவும் - அரசும் - இப்பெருமக்களையும் அரசு என ஒப்பக் காட்டிய நயம் காண்க. துறவறமேற் கொண்டவராதலின் நாயனாரை ஊரும் நாடும் பற்றாது வாளா அரசு என்றார். 1532-லும் இவ்வாறே தோணிபுரத்தரசர் - நீடுந்திருநாவுக்கரசர் - என்பது காண்க. இங்கு இருவரும் கதவம் திறக்கவும் அடைக்கவுமாக ஒப்பச் செயல்செய்ய நின்ற சரிதக்குறிப்பு. 264 1530. | பரவை யோதக் கழிக்கானற் பாங்கு நெருங்கு மப்பதியில் அரவச் சடையந் தணனைரை யகில மறைக ளருச்சனைசெய் துரவக் கதவந் திருக்காப்புச் செய்த வந்நாள் முதலிந்நாள் வரையு மடைத்தே நிற்கின்ற மணிநீள் வாயில் வணங்குவார். |
265 |