பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்467

 

மொழி. ஆறே - ஏகாரம் தேற்றம்; முன்னே வேடங்காட்டி எழுந்தருளும் அவரைப் பின் தொடர்ந்து கிட்டும்படி எண்ணி நாயனார் விரைந்து சென்றும் அவர் கிடைக்கப்பெறாமல் வருந்தியது இருந்தது இவ்வாறு என்பது.

ஆரா அன்பின் இன் அமுதம் - அடைமொழிகள் நாயனார் அத்திருவேடத்தில் கொண்ட தீவிர தரமான அன்பின் பெருக்கைக் குறித்தன.

உண்ண எய்தாவாறு - கைக்குக் கிட்டியும் என்பது தொக்கு நின்றது.

எழுந்தருள - கிடைக்க ஒட்டாமல் விரைந்து முன்செல்ல. நெடிது பின்பு செல்லும் - நீண்ட தூரம் விரைவாகப் பின்பற்றிச் செல்லும். அவரும் முன் விரைந்து செல்ல, இவரும் விரைந்து பின்பற்ற. "ஒக்கவே ஒட்டந்தேன்" (தேவாரம்).

பின் செல்லும் அவர் - தொடர்ந்து முன் அணையப் பெறுவார் என்று கூட்டுக. நீண்ட தூரம் பின்னாலே எசன்ற அவர் கடிது முன் அணைந்து கிட்டுமாறு முயன்றவராயும்.

பேராளர் - பெருமையுடையோர். எண்ணிலாத பேர் உடையார் என்றலுமாம். முதற்கடவுள் என்னும் பெயருடையவர் என்பாருமுண்டு.

எய்தப் பெறுதல் - கிடைக்கப் பெறுதல். தொடர்ந்து எட்டுதல். பெற்றிலர் - "அன்ன வண்ணம்" என்று மேலே தொடர்ந்து செல்லும் பொருட்டொடர்பு நோக்கிப் பெற்றிலராக என்று எச்சமாகப் பொருள் கொள்ளப்பட்டது.

278

1544. (வி-ரை.) அன்ன வண்ணம் எழுந்தருளி - மேற்சொன்னவாறு முன்சென்ற தம்மை நாயனார் கிட்டமுடியாதபடியாக இறைவர் விரைந்து எழுந்தருளி. எழுந்தருளி - என்பது போய் என்ற பொருளில் வந்தது; மரபு வழக்கு.

அணித்தே காட்சி கொடுப்பார் போல் - தம்மை அணிமையில் காணத் தருபவர் போலக் காட்டி.

கொடுப்பார் போல் - புக்கருள - என்று கூட்டுக. அணிமையில் காணக்கிடைப்பவர்போலத் தோன்றினார்; ஆனால் அவ்வாறு கிடைக்காது ஒரு பொற்கோயிலைக் காட்டி அதனுட் புகுந்தருளினர் என்க.

புக்கருள - மறைய என்ற பொருளில் வந்தது.

பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி - பொன்மயமான. அழகிய என்றலுமாம். இக்கோயில் இறைவர் நாயனாருக்குத் தோன்றும்படி செய்தது. கோயிலுட் சென்று அவர் மறைந்தனர்; பின்னர்க் கோயிலும் மறைந்தது என்பதும், இது திருவாய்மூருக்கு அணிமையில் உள்ள ஒரு இடம் என்பதும் கருதப்படும்.

துன்னும் - கிடைக்கப் பெறுதற்காக விரைந்து நெருங்கும்.

அம்மருங்கு விரைந்து தொடர - அக்கோயிலின் பக்கத்து, உட்புகுந்தருளிய வரைக் கிட்டும்படி பின்னும் விரைந்து தொடர்ந்து செல்ல. திருவெண்ணெய்நல்லூரில் வேதியர்களையும் திருநாவலூரையும், தமது மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுவதாக அழைத்துக்கொண்டு, கிழவேதியர் வேடத்தால் வந்த இறைவர், திருவருட்டுறைக் கோயிலினுள் புகுந்து மறைந்த வரலாறு இங்கு நினைவுகூர்தற்பாலது.

போந்தபடி - கேட்டு - என்று கூட்டுக. போந்தபடி - மேற்சொல்லியவாறு நாயனார் திருமறைக்காட்டினின்றும் எழுந்து திருவாய்மூர் வழி போந்த படியினை. படி - படியை - நிலையை. இரண்டனுருபு தொக்கது.

வள்ளலார் - வாகீசர் சென்ற நிலை கேட்டு அப்போதே தொடர்ந்து வந்த பெருந்தகைமை வள்ளன்மை எனப்பட்டது.