அணைந்தார் - அணைந்தாராக. பொருட்டொடர்பு நோக்கி முற்றெச்சமாகக் கொண்டுரைக்கப்பட்டது. வினை முற்றாகவே கொள்ளினு மிழுக்கில்லை. வந்துஅணைந்தார் - இச்சரிதப் பகுதிக்குப் பதிகத்துள் அகச்சான்றுகாண்க. 279 1545. (வி-ரை.) "அழைத்துக்கொடு...மறைந்தார்" என அயர்ந்து - இது நாயனார் எண்ணி வருந்தியது. அழைத்துக்கொடு போந்து - நான் துயிலும் இடத்தினின்றும் "தொடர வா" என்று அழைத்துக்கொண்டு போந்து. "என்னை இருந்திடந் தேடிக்கொண்டு அங்கேவந்து", "அங்கேவா வென்று போனார்", "என்னைவா வென்று பானார்" என்ற தேவார அகச்சான்றுகள் காண்க. அணியார்போற் காட்டி மறைந்தார் - "ஒடிப் போந்திங் கொளித்தவா றென்கொலோ" என்பது தேவாரம். என அயர்ந்து - என்று வருந்தி. வருந்துவதற்குக் காரணம் அணியார்போற்காட்டி மறைந்தது. "ஆரமுதம் உண்ண எய்தா வாறே போல்" (1543) என்றதனால் இறைவரை அணிமையிற் கிட்டி அனுபவித்தலையே நாயனார் மிக விரும்பினார் என்பதும், அவ்வாறு கிடைப்பதாகக் காட்டி மறைந்ததனால் வருந்தினர் என்பது பெறப்படும். "பிழைத்துச் செவ்வி...எப்பால் மறைவது" என - இது அவ்வருத்தத்தினால் நாயனார் பலவாறும் எண்ணமிட்டு ஒன்றும் துணிய முடியாது பாடிய பதிகக் கருத்து. பிழைத்துச் செவ்வியறியாதே திறப்பித்தேனுக்கு - இறைவரது செவ்வி யறியாது கடிந்து வலிந்து தாம் திறப்பித்தமையே பிழை என்று நாயனார் கருதினர். இவ்வாறன்றி இது "பிள்ளையாரைத் திறக்கச்செய்யாது தான் திறப்பித்த குற்றமுடைமை விளக்கியது" என்றும். "திருவுள்ளக் கருத்து ஆளுடைய பிள்ளையாரே திறக்கவேண்டுமென்பது. அது காரணத்தானே காட்சி கொடுப்பதுபோல் வெளிப்பட்டு மறைந்து ஆளுடைய பிள்ளையாருக்குக் காட்சி கொடுத்தபிறகு காட்சி கொடுத்தது மென்க" என்றும் இங்கு முன் உரையாசிரியர்கள் விசேடங் காண்பர்? அவை பொருந்தாமை முன் விளக்கப்பட்டது. மேலும், பிள்ளையாரே திறப்பிக்கவேண்டுமென்பது இறைவரது திருவுள்ளமாயின், பிள்ளையார் அரசுகளை நோக்கித் திறக்கப்பாடும் என்று அருளியது நம்பர் திருயுள்ளமறியாத கூற்றாகும்; நம்பர் திருவுள்ளம் பெறப் பெறாத ஒருவரை அச்செயல் செய்யும்படி பிள்ளையார் வேண்டிக்கொண்டதாகவும் முடியும்; பிள்ளையார் அரசுகளை நோக்கித் "திறக்க நீர் பாடும்" என வேண்டிடவும் மறுத்து "இல்லை, இல்லை; நீரே பாடியருளும்" என்று கேட்டிருத்தல்வேண்டும் என்னின், அஃது இருதிறத்தும் வாய்மை பற்றாத புன்மாக்கள் சொல்லும் பொருளற்ற உபசார மொழிகளாய் ஒழிந்து, எந்தம் பெருமக்களது சால்புக்கு இழுக்காய் முடியும்; பிள்ளையார் திறப்பிப்பதே நம்பர் திருவுள்ளமாயின் அதற்கு மாறாக எவ்வாற்றானும் அரசுகள் திறப்பிக்க நேர்ந்த நிகழ்ச்சி நடைபெற்றது நியதிக்கு மாறுபட்டதாய் முடியும்; இவைபோன்ற பலவாற்றானும் மேற்கூறிய நுட்பங்கள் பொருந்தாமை கண்டுகொள்க. செவ்வி - சமயம். திருவுள்ளப் பாங்கு. "செவ்வி அறியாமே திறப்பித்தேன்" என்று நாயனார் துணிந்தமையின் காரணம், தாம் அரிதில் வலிந்து பாடித் திறப்பிக்கவும், பிள்ளையார் எளிதிற் பாடி அடைப்பிக்கவும் நிகழ்ந்த அதுவே என்பது "நம்பர் திருவுள்ள மறியா தயர்ந்தேன்" (1540) என்றவிடத்து உரைக்கப்பட்டது. நாயனார் அரிதிற் பாடித் திறப்பிக்குமாறு இறைவர் அருள் தாழ்த்த காரணம் "பயன் துய்யப்பான் தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்க" (1533) என்றது காண்க. |