பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்469

 

திறப்பித்தேனுக்குத் தாம் உழை ஒளித்தாலே அல்லால் - என்று கூட்டுக. "பிழை செய்த எனக்கு ஒளிக்கலாமேயன்றி, அவ்வாறு பிழை ஒன்றும் செய்யாது, தழைத்த மொழியினையுமுடைய அவருக்குக் காட்ட மறைத்தல் இயலுமோ?" என்பது நாயனார் கருத்து. இவ்வாறு தமது பிழை கண்டவிடத்தும் மற்றும் திருவருளையே பற்றி நின்று இரங்குதல் பெரியோர் இயல்பு. உழை ஒளித்தல் - பக்கத்திலிருந்து காட்சியளிப்பார்போலக் காட்டி மறைத்தல். உழை - பக்கம். அணிமை.

கதவம் - கதவம் திறப்பித்தேனுக்கு என்றும், கதவம் அடைப்பித்த என்றும் இரு வழியும் கூட்டியுரைக்குமாறு இடையில் வைத்த அழகு காண்க. இடை நிலைத் தீபம். கதவம் ஒன்றே, தான் நிலைபெயராது நின்று திறக்கவும் அடைக்கவுமாக இருவர் செயலுக்கும் பொருளாய் நின்றமையின் இவ்வாறு சொல்லும் பொருளும் ஒத்து இயையும்படி வைத்தது ஆசிரியரது தெய்வக் கவிநலம்.

தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்த தழைத்த மொழியார் உப்பாலார் - தொண்டு உறைக்க - திருத்தொண்டின் உறைப்பு - அழுந்திய நீர்மை - விளங்க என்றபடி. "திருத்தொண்டி னுறைப்பாலே வென்றவர்" என்ற இந்நாயனாரது திறத்தை அப்பூதியார் கூறுவது காண்க. (அப்பூதி - புரா - 13). "செந்தமிழ் திறத்தை உறைப்புப்பாடி அடைப்பித்தார்" என்ற நாயனார் திருவாக்கின் சொல்லும் பொருளும் போற்றப்பட்ட திறமும் காண்க.

தழைத்த மொழி - கருதிய பயனைக் கருதியவாறே உடன்தரும் மொழி. "மறை மொழி" என்ற திருக்குறளுக்கு "அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி" என்று ஆசிரியர் பரிமேலழகர் உரைத்தது இங்கு நினைவு கூர்தற்பாலது. "செந்தமிழ்" என்ற நாயனார் தேவாரத்தை ஆசிரியர் விளக்கம் செய்தபடி.

உப்பாலார் - உகரச்சுட்டுச் சேய்மைக்கும் அணிமைக்கும் இடைப்பட்ட நிலை குறிப்பது. "உந்நின்றார்" என்றது நாயனார் தேவாரம்.

தாம் மறைவது எப்பால் இங்கு மறைவது? - "மறைக்க வல்லரோ தம்மை" என்றது தேவாரம். எப்பால் - எங்கு என்றும், எவ்வண்ணம் - எவ்வாறு - என்றும் உரைக்க நின்றது.

என - என்ற கருத்துடைய திருக்குறுந்தொகைப் பதிகம் பாட. அப்பதிகப் பாடற் கருத்துக்களே இச்சரித நிகழ்ச்சியை அறிவிப்பன என்பது பதிகக் குறிப்புக்களுட் கண்டுகொள்க.

மொழியாரும்பாலார் - மறைப்ப - மறைத்த - என்பனவும் பாடங்கள்.

280

திருவாய்மூர்

திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

எங்கே யென்னை யிருந்திடந் தேடிக்கொண்
டங்கே வந்தடை யாள மருளினார்,
தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்,
"அங்கே வா" வென்று போனார தென்கொலோ?

1

மன்னு மாமறைக் காட்டு மணாளனார்,
உன்னி யுன்னி யுறங்குகின் றேனுக்குத்
தன்னை வாய்முர்த் தலைவனா மாசொல்லி,
யென்னை வாவென்று போனார தென்கொலோ?

2


திருவாய்மூர்-பசுபதீசுவரர் கோயில்