பக்கம் எண் :


542திருத்தொண்டர் புராணம்

 

கருவார் கச்சி ஏகம்பர் - ஆளுடையபிள்ளையாரது (குறிஞ்சிப்பண் - திருவிருக்குக்குறள் தேவாரம்) "கருவார்க்கச்சித், திருவேகம்பன்" என்ற சொற்பொருளாட்சி போற்றப்பட்டது. கருவார் - அருட்கருவை எல்லாவுயிர்களிடத்தும் வைத்திருக்கும் அம்மையார்க்கிடமாகப் பொருந்திய; "அங்கு மண்ணுல கத்துயிர் தழைப்ப வளவி லின்பத்தி னருட்கரு விருத்தி" (1133) என்ற கருத்து. உலகங்கள் தோன்றி முளைக்கக் காரணமாகிய பிருதுவித் தலமாகிய என்ற குறிப்புமாம். கருவினுள் நிறைந்த என்றுரைப்பினுமமையும்.

சூழ்ந்து வருவார் - வலம் வருவாராகிய வாகீசர்.

செம்பொன்மாலை வல்லி....பெருவாழ்வு - தழுவக் குழைந்த திருவேகம்பர். 1582 பார்க்க.

பேரா - நிலைபெயராத. பேரா அன்பு - மனத்துள் ஊன்றி நிலைத்தெழுந்த அன்பு. பெருகினார் - அன்பின் பெருக்கத்துக் குள்ளானார்.

பெருக்கினார் - என்பதும் பாடம்.

322

1588. (வி-ரை.) கண்ணருவி மேனிப் புறம்பு அலைப்பவும் - அன்பு என்பு உள் அலைப்பவும் - நயனம் திளைப்பவும் என்க.

அலைத்தல் - நிலைகெடச் செய்தல்.

வார்ந்து சொரியும் - மழைபோல இடையறாது மிக்கு வழியும். கண் அருவி - கண்ணீர். அருவிபோல்வதனை அருவி என்றது ஆகுபெயர்.

மயிர்க்கால்தோறும் வரும் புளகம் ஆர்ந்த மேனி - எங்கும் மயிர்க்கால்களில் புளகம் உண்டாகநின்ற திருமேனி. புளகம் - மயிர்கள் நேரே நிற்றல்.

அன்பு கரைந்து - அன்பினால் மனங் கரைந்து. என்பு உள் - எலும்பினுள்ளும். "அமுத மயிர்க்கா றோறுந், தேக்கிடச் செய்தனன்..அமுத தாரைகள் எற்புத்துளை தொறு மேற்றினன் உருகுவ, துள்ளங் கொண்டோ ருருச்செய் தாங்கெனக், கள்ளூறாக்கை யமைத்தனன்" (திருவா - திருவண்டப் பகுதி - 170 - 176); "என தென் பின்புரை யுருக்கி" (மேற்படி உயிருண் - 4).

சேர்ந்த - கிடைத்த. பிறவியிற் சேரப்பெற்ற.

நயனம் - திளைப்ப என்க. கண்கள் தமது பயன் பெற்று. "கண்காள் காண்மின்களோ" (திருவங்கமாலை) என்றபடி கண் பெறுதற்குரிய பயன் இறைவனைக் காண்பதேயாம் என்பது. "கம்பனெம் மானைக் காணக் கண்ணடி யேன்பெற்ற வாறே" (தக்கேசி) என்று ஆளுடையநம்பிகள் இக்கருத்தை இங்கு அனுபவத்திற் காட்டியருளுவதும் நினைவுகூர்க. கண்ணின் பயன் - கண்டு களிகூர்ந்து கண்ணீர் வார்தல் என்பது.

திளைத்தல் - ஆனந்தத்தினுள் அழுந்திநிற்றல். புறம்பும் உள்ளும் அலைப்ப அன்பு கரைந்து திளைத்தல் - மெய்ப்பாடு.

திருவேகம்பர்தமை நேர்ந்த மனத்தில் உறவைத்து நீடும் பதிகம் - இது பதிகக் கருத்தும் குறிப்புமாம். "ஏகம்ப மேயானை யென்மனத்தே வைத்தேனே" என்ற பதிக மகுடம் காண்க.

நேர்ந்த - நேர்மை பெற்ற. உற - நீங்காது பொருந்த. "ஏகம்பன் காணவனென் னெண்ணத் தானே" என்ற கருத்துடைய திருத்தாண்டகப் பதிகங்களிரண்டினும் இவ்வாறு மனத்துள் அழுந்திய அன்பு நீடிய தன்மையால் போற்றப் படுவதும் காண்க. (1592 -1593).