| ஆகம்பத் தரவணையா னயனறிதற் கரியானைப் பாகம்பெண் ணாண்பாக மாய்நின்ற பசுபதியை மாகம்ப மறையோது மிறையானை மதிற்கச்சி யேகம்ப மேயானை யென்மனத்தே வைத்தேன. |
9 திருத்தாண்டகம் பதிகக் குறிப்பு :- கரவாடும் வன்னெஞ்சர்க் கரியான், விடையேறும் வித்தகன், சங்கரன், வானோர்க்கு ஏனோர்க்கும் பெருமான், எப்போது மினியான், ஐம்பூதப் பிண்டமாய் உலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகன், ஆயிரம்பேரம்மான், திருமாலால் பூசன்; நில நீர் தீ வளி ஆகாசமாம் ஈசன், வல்லார்கள் மனத்துறையும் மைந்தன், சொல்லார்ந்த பொருளான், துகளேது மில்லான், பதம் சந்திப் பொருளுருவாம் புண்ணியன் என்றிவை முதலிய பெருமைகளா லறியப்படுகின்ற மதிற்கச்சியேகம்ப மேவிய இறைவரை அப்போது மலர்தூவி ஐம்புலனுமகத் தடக்கி என் மனத்தே வைத்தேன். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கரவாடும் வன்னெஞ்சர் - கரவு - கள்ளம். இறைவர்பாலதாக வைக்கத்தக்க மன மொழி மெய்களைப் பிறவற்றிற்காக்குதல் கள்ளமெனப்பட்டது. வன்னெஞ்சமாவது அன்பிற் கிடமாகாமை. விரவரடும் - விரவும். என் மனத்தே வைத்தேனே - இது பதிகக் கருத்து என "நேர்ந்த மனத்தி லுறவைத்து" (1588) என்று ஆசிரியர் அறிவித்தமை காண்க. - (2) தேன் நோக்கும் - பவளம்தான் நோக்கும் - நோக்குதல் - தன்மைபெற அவாவுதல். கிளிமழலை - கிளிச் சொற் போன்ற மழலை; நோக்கும் - போலும் என்ற பொருளில் வந்த உவமவுருபு என்றலு மொன்று. ஏனோர் - ஏனை மக்கள் முதலாயினோர். - (3) கை - கையிற் கொண்ட; அப்போது மலர்தூவி - புதிதலர்ந்த பூக்கொண்டு புறப்பூசை செய்து. ஐம்புலனு மகத்தடக்கி -புலனடக்கி அகப்பூசை. செய்து. தூவியும் - அடக்கியும் - என் மனத்து வைத்தேன் என்று கூட்டுக. இது நாயனார் சிவாகம விதிப்படி ஆன்மார்த்த பூசை செய்தமைக்குச் சான்று. எப்போது மினியான் - சிவன். - (4) ஐம்பூதப் பிண்டமாய் நிற்கு முலகு என்க. பெய்பொருள் - அடையப்படு பொருள். - (5) ஆயிரம்பேர் அம்மான் - "பேராயிரம் பரவி" (தேவா) ஆயிரம் - அனேகம் என்பதுமாம். "எண்ணாயிரங் கோடி பேரார் போலும்" (தேவா) பாறு - கழுகு. நெடுந்தூவி - பெரிய திமில். - (6) பூசன் - பூசிக்கப்படுவன். பூஜ்யன் என்பது பூசன் என வந்தது - மலை...ஈசன் - ஐம்பூதமும் தன் திருமேனியாகக் கொண்ட இறைவன். - (7) வல்லவர்கள் - "பொது நீக்கித் தனை நினைய வல்லார்"; வல்லார் என்றது நினைய வல்லார் என அதன் அருமை குறித்தது - சொல்லான் - பொருளான் - சொல்லும் அதன் பொருளுமாவான். "பதஞ் சந்திப் பொருளுருவாம்" (8) என்பதுமிக்கருத்து. (8) வேதங்கள் புரிந்தான் - வேதஞ் சொன்னவன். பதம் - சந்தி - வேதம் சொல்லு முறை. - (9) ஆகம் பத்து - பத்துப் பிறவியுடைய. மாகம்ப - உரத்த சுரத்தில் ஒதப்பட்ட. மதிற்கச்சி - மதிற் சிறப்பும் அரசர் தலைநகராதலும் குறிப்பு. இதனையே மதில்சூழ் (1582) "மதில்கொண்டணிந்த" (1586), என்றெடுத்தாண்டனர் ஆசிரியர். இப்பதிகத்தினுள் இவ்வொருபாட்டு இத்தலப் பெயர் தாங்கி இது இத்தலப் பதிகமாதலை யறிவிக்கின்றது. - (10) யானை உரித்தான் - பாசுபதம் கொடுத்தான் - புரமெரித்தான் -- கயிலை எடுத்தானைத் தடுத்தான் என்ற நான்கு தன்மைகள் பற்றிப் போற்றப்பட்டது. பாசுபதம் - பசுபதி சம்பந்தமுடையது. புரமெரிய அம்பு தொடுத்தானை என்க. எடுத்தான் - எடுக்க முயன்றவன் - இராவணன். |