அவனுக்கே யிடமாகக்கொண்டு. கள்ளம் - வஞ்சகம்; ஆன்ம உணர்வு. - (6) வஞ்சம் - நினைக்கவொட்டாது தடுத்து இடுக்கண் செய்யும் புலனாசை. "மாறி நின்றெனை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழி" (திருவா). ஐவர் நினைக்குறார் என்று தீமைதீர்க்க வழி கூறியவாறு. அந்த ஐவரின் வஞ்சம் என்க. - (7) குறைந்து உக்கவர் - குறைசொல்லிப் பணிந்து அடைந்தவர். "நாளுமிகும் பணிசெய்து குறைந்தடையு நன்னாளில்" (1310), "பற்பாவும் வாயாரப் பாடி யாடிப் பணிந் தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க; கிற்பானை" (கீழ்வேளூர். தாண் - 2). உக்கவரும், மொழியாரவரும் வணங்க என்று எண்ணும்மை தொக்கன. - (8) வாதை - பிறவிநோய். - (9) உருவகம். ஓட்டை மாடம் - எண்ணிறந்த ஓட்டைகளுள்ள உடல். காட்டில் வேவதன் முன் - சாவு வந்து உடலைச் சுடு காட்டில் எரிப்பதன்முன். இறத்தல் உறுதியாதலின் அதன்முன் என்க. - (10) சீரம் - சிரமம் என்றது சீரம் என வந்தது மரூஉ. "வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர்" (தேவா). தலவிசேடம் :- திருவான்மியூர் - தொண்டைநாட்டின் 25-வது தலம். வான்மீக மகா இருடிக்கு அருள்செய்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. தேவர்கள் கடல் கடைந்து பெற்ற அமுதத்தால் சிவலிங்கந் தாபித்து பூசித்த தலமாதலின் இறைவர் மருந்தீசர் எனவும் வழங்கப்படுவர். மருந்து, நோயும் மயக்கமும் தீர்ப்பது; சாவாமை தருவது; ஆதலின் அமுதம் மருந்தெனப்படும். "வாட்டந் தீர்த்திடும்" - "வாதை தீர்த்திடும்" என்ற அப்பர் சுவாமிகள் பதிகக் குறிப்பும், "சென்றார் தம்மிடர்தீர்" என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரக் குறிப்பும் காண்க. திருமூலத்தான மகாலிங்க மூர்த்தியின் திருவுருவம் பால் நிறமுடையது; சுயம்புலிங்கம்; மேற்கு நோக்கிய சந்நிதி. சுவாமி - மருந்தீசர், பால்வண்ண நாதர்; அம்மை - சொக்கநாயகி; பதிகம் - 3. இது திருமயிலாப்பூரினின்றும் தென் கிழக்கில் கற்சாலை வழி நான்கு நாழிகையளவில் அடையத்தக்கது. மோட்டார் பாஸ் வசதிகள் உண்டு. கடற்கரைத் தலம். சென்னையினின்றும் எட்டு நாழிகை யளவுண்டு. 1597. | வரைவளர்மா மயிலென்ன மாடமிசை மஞ்சாடுந் தரைவளர்சீர்த் திருமயிலைச் சங்கரனார் தாள்வணங்கி, யுரைவளர்மா லைகளணிவித் துழவாரப் படையாளி திரைவளர்வே லைக்கரைபோய்த் திருவொற்றி யூர்சேர்ந்தார். |
332 (இ-ள்.) வரைவளர் மாமயில் என்ன - மலைமேல் வளர்கின்ற பெரிய மயில்போல; மாடம் மிசை மஞ்சு ஆடும் - மாடங்களின்மேல் மேகம் தவழ்கின்ற; தரைவளர்...வணங்கி - உலகில் வளரும் சிறப்பினை உடைய திருமயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள சங்கரனாருடைய பாதங்களை வணங்கி; உரைவளர்...அணிவித்து - உரை பெருகும் தமிழ் மாலைகளைச் சாத்தி; உழவாரப் படையாளி.... சேர்ந்தார் - திரு உழவாரப் படையினை ஏந்திய நாயனார் அலைகள் தவழ்கின்ற கடற்கரையின் வழியே சென்று திருவொற்றியூரினைச் சேர்ந்தருளினார். (வி-ரை.) வரைவளர்...மஞ்சு ஆடும் - மலையின்மேல் ஆடுவதுபோல மாடங்களின் மேல் மேகந் தவழ்கின்றன என்பது உருவும் மெய்யும் தொழிலும் பற்றி வந்த உவமம். வரை - மாடத்துக்கும், மயில் - மஞ்சுக்கும், வளர்தல் ஆடுதக்கும் உவமையாயின. வரை - மாடம் - உருவுமம்; மயில் - மஞ்சு மெய்யுவமம்; வளர்தல் - ஆடுதல் - தொழிலுவமம். அம்பிகை மயிலுருவம் கொண்டு இத்தலத்திற் சிவபெருமானைப் பூசித்தனராதலின் மயிலாப்பூர் எனப் பெயர் வந்ததென்பர். அவ்வரலாற்றுக் குறிப்பும் பெறக் கூறிய வுவமைநயம். கண்டுகொள்க. |