(இ-ள்.) திருவான்மியூர்...தமிழ்பாடி - திருவான்மியூர் மருந்து நாதரைச் சேர்ந்து பணிந்து அன்புடனே பெருவாய்மையுடைய தமிழ்ப் பதிகம் பாடி; அம்மருங்கு - அப்பக்கத்தில்; பிறப்பறுத்துத் தருவார் - பிறவியை அறுத்து முத்தி அருள்வாராகிய இறைவருடைய; கோயில்....இறைஞ்சி - பல தலங்களையும் சார்ந்து வணங்கி; தமிழ் வேந்தர் - தமிழ் அரசராகிய நாயனார்; மருவாரும்....வந்தடைந்தார் - வாசனை நிறைந்த மலர்ச் சோலைகள் சூழ்ந்த திருமயிலாப்பூரினில் வந்து சேர்ந்தனர். (வி-ரை.) மருந்து - திருவான்மியூர்ச் சுவாமியினது மருந்தீசர் என்ற பெயர் போற்றப்பட்டது; "கேட்டூர்க் கொழுந்தே" (தேவா - நம்பி) என்றதுபோல. பெரு வாய்மைத் தமிழ் - பெருவாய்மையாவது, ஞானத்தின் முடிந்தஉண்மை. சிவனை அடைந்து உயிர்கள் பாசம் நீங்கி யின்பம் பெறுதல். இத்தலத்துத் திருக்குறுந் தொகைப் பதிகம் முழுமையும் இக்கருத்தையே வற்புறுத்துகின்றது. பிறப் பறுத்துத் தருவார் என்ற குறிப்புமது. அம்மருங்கு - கோயில் பல - என்று கூட்டுக. இவை நெடுங்குன்றம், குன்றத்தூர், திருநின்றவூர், திருவேற்காடு, நெற்குன்றம், திருவலிதாயம் முதலாயின. இவற்றுக்கு நாயனார் பதிகங்கள் கிடைத்தில! பிறப்பறுத்துத் தருவார் - பிறவி நோய் போக்கி இன்ப வீடு தருவாராகிய சிவபெருமான். தருவார் என்றதற்குப் பேரின்ப முத்தி எனச் செயப்படு பொருள் வருவிக்க. மேல்வரும் பாட்டில் "கருநாமந் தவிர்ப்பார்" என்றும் கருத்துமிது. தமிழ் வேந்தர் - திருநாவுக்கரசர். இத்திருப்பாட்டின் ஈற்றடி முற்றுமோனை. தமிழ்வேந்தர் என்ற இடத்துத் தமிழ் அணிபெற வைத்தது கவிநயம். வரும் பாட்டின் முதலடியும் இவ்வாறே முற்றுமோனையாதலும் குறிக்க. மருங்கெங்கும் - பிறப்பறுத்தல் - என்பனவும் பாடங்கள். 331 திருவான்மியூர் திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர், அண்ட நாயகன் றன்னடி சூழ்மின்கள், பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும், வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே. |
1 | உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலாற், கள்ள முள்ள வழிக்கசி வானலன் வெள்ள மும்மர வும்விர வுஞ்சடை, வள்ள லாகிய வான்மியூ ரீசனே. |
4 | ஒட்டை மாடத்தி லொன்பது வாசலுங், காட்டின் வேவதன் முன்னங் கழலடி நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில், வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே. |
9 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- ஒட்டை மாடத்தில் ஒன்பது வாசலும் காட்டில் வேவதன் முன், விரைந்து, விண்ட நாண்மலர் கொண்டு, பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுச், சிந்தை மயக்கறுத்து, உள்ள முள்கலந்து, பாதி பெண்ணுருவாய பரமன்! ஆதி! எந்தை! ஈசன்! என்று குணங்கள் பரவி, உன்குழைந்து அழுதிரேல் வந்து நின்று வான்மியூ ரீசின் வாட்டந் தீர்த்து மருளறுத்திடும். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) விண்ட - வாய்விண்ட; முகையவிழ்ந்து புதிதின் மலர்ந்த. பண்டுசெய்த பாவம் - பிறவிக்குக் காரணமான பழவினை. - (2) மருளு மாந்தரை...அருளுமாவல்ல ஆதியாய்! - "மயங்குவோரை மயக்கநீக்கியருளம் ஆதியே!" என்பது போற்றும் வகை. மருள் - பொருளல்வற்றைப் பொருள் என்றுணரும் மயக்கம். - (4) உள்ளம் உள்கலந்து - உள்ள முழுமையும |