பதிகப் பாட்டுக் குறிப்பு :- இத்திருப்பதிகத்தில் இரண்டு பாட்டுக்களே கிடைத்துள்ளன! - (1) வேல் - ஆயுதப் பொதுமையை உணர்த்திச் சூலம் என்ற பொருள் தந்து நின்றது. முது பிணக் காடு - ஊழி முடிவின் உலகம். கற்பகம் - வேண்டிண எல்லாம் எளிதில் நல்குதலால் இவ்வாறு அருமைப்பாடுபெறக் கூறினார். கண்ணாரக் கண்டேன் - கண்களின் காட்சி அமைவு படும்படி காண என்ற இதுவும் அருமைப்பாடு குறித்தது. மணிவாசகப் பெருமானார் "கணக்கி லாத்திருக் கோல நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே" என்று போற்றியருளியதும் நினைவு கூர்க. - (2) பல்லாடு - பற்கள் வீழ்ந்த. அடு உக்க - வீழ்ந்த. பல் அடு என முதனீண்டு வந்தது செய்யுள் விகாரம். "பல்லடைந்த வெண்டலையில்" (சிரபுரம் - பிள் - தேவா.) சொல்லோடு பொருள் அனைத்தும் - சொல்லும் அதனால் உணர்த்தப்படும் பொருளும் என்ற இருவகையில் அடங்கும் எல்லா வுலகமும், அல்லாத - பகைத்த. நன்கல்லாத. கல்லாடை - காவியுடை தரித்த வரலாற்றுக்குத் தமிழ் மறையிற் ஆதரவு; இது துறவுக் கோலத்துக்குரியது. "காமனை முனிந்து நெடுஞ்சடை தரித்துக் கவின் றகல் லாடைமேற் புனைந்து, யாமெலாம் வழுத்துந் துறவி" (காஞ்சிப் புரா.) கல்லாடையின் செவ்வொளி உள்ளே விளங்கும் ஞானத்தீயின் உருவைக்காட்டுவது என்பர். தலவிசேடம் :- திருக்கழுக்குன்றம் - கழுகுகள் பூசிக்கும் மலை என்பது பொருள். வடநாட்டார் பட்சி தீர்த்தம் என்று தேற்றமாய் வழங்குவர். கழுகுகள் நாளும் வந்து பூசித்து உணவுண்டு செல்லும் அதிசயம் இன்றும் கண்கூடாகக் காணத்தக்கது. சண்டன் பிரசண்டன் என்றும், சம்பாதி சடாயு என்றும், சம்புகுத்தன் மாகுத்தன் என்றும், சம்பு ஆதி என்றும் பெயர்களையுடைய கழுகுகள் முறையே முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது யுகங்களிற் பூசிப்பாராயினர் என்பததும், இவர்கள் சாபத்தாற் கழுகுகளாயினர் என்பதும் வரலாறு. வேதங்கள் மலையுருவெடுத்து இறைவரைத் தாங்குவதால் வேதகிரி எனப்படும். நந்திதேவர், இந்திரன், கோடியுருத்திரர் முதலியோரும் பூசித்துப் பேறு பெற்றனர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிடி விழுந்து இறைவருக்குத் திருமஞ்சனமாட்டும் செய்தியால் இந்திரன் பூசிப்பது இன்றும் அறியவுள்ளது. மலையடிவாரத்தில் உள்ள சங்கு தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரிச் சங்கு தோன்றி வெளிப்படுவதும் கண்கூடு. சங்கு தீர்த்தத்திற்குத் தென்கீழ்த் திசையில் கோடியுருத்திரர் பூசித்த உருத்திரகோடி என்ற தலம் (தேவார வைப்புத்தலம்) உள்ளது. மணிவாசகப் பெருமான் குருதரிசனம் கண்டு திருக்கழுக்குன்றப் பதிகம் பாடியருளினர். சைவசமய பரமாசாரியர்கள் நால்வராலும் பாடப்பெற்ற பெருமையுடையது. நியமமாகத் தீர்த்தத்தில் தோய்ந்து மலையை வலம் வருவோர் எல்லா நோய்களினின்றும் நீங்கி யின்பம் பெறுதல் இன்றும் தேற்றமாக அறியப்படும் உண்மை. மலை, பாடல்பெற்ற தலம். அடிவாரத்தில் உள்ளது வேதபுரி. சுவாமி - வேதகிரீசுவரர்; அம்மை - பெண்ணினலாளம்மை; தீர்த்தம் - சங்க தீர்த்தம்; (அடிவாரத்தில் - சுவாமி - பக்தவத்சலர்; அம்மை - திரிபுரசுந்திரி.) பதிகம் 3. இது செங்கற்பட்டு என்ற இருப்புப்பாதை நிலையத்தினின்றும் தென் கிழக்கில் கற்சாலை வழி 9 நாழிகை யளவில் உள்ளது. 1596. | திருவான்மி யூர்மருந்தைச் சேர்ந்துபணிந் தன்பினொடும் பெருவாய்மைத் தமிழ்பாடி, யம்மருங்கு பிறப்பறுத்துத் தருவார்தங் கோயில்பல சார்ந்திறைஞ்சித் தமிழ்வேந்தர் மருவாரு மலர்ச்சோலை மயிலாப்பூர் வந்தடைந்தார். |
331  திருக்கழுடககுன்றம் - மாலை அடிவாரத்திலிருந்து பார்வை
|  திருக்கழுக்குன்றம் - விமானங்கள்
|
|