தலைமிசைக் கொள்ளுதல் - பெரிதும் உடன்பட்டு மேற்கொள்ளுதல். தலை - உபசாரம். எழுந்து - கீழ் விழுந்து பணிந்தார் (1633) என்ற நிலையினின்றும் எழுந்து. இறைஞ்சி - முன் பணிந்தமை அருள்பெறும் பொருட்டு; இப்போது இறைஞ்சியது அருள் தந்தமையின் பொருட்டு. வேற்றுமாகி விண்ணாகி நின்றார் மொழி - "வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி" என்றுதொடங்குவதாதியாகத் திருத்தாண்டகப் பதிகங்கள் மூன்றும். விரும்பி - ஏனைய தலங்களிற்போல ஒரு பதிகத்தாற் போற்ற, அதனில் அமையாது மேலும் ஒரு ஒரு பதிகத்தாற் போற்ற, அதனிலும் அமைவுபடாது மேலும் இன்னொரு பதிகத்தாலும் போற்றும்படி மேன்மேலும் விருப்பம் நிகழ்ந்து என்றபடி. "மதுரமிக வாய்ந்தகனி, தனைநுகர்ந்த வினியசுவை யாராமை" (காரைக் - புரா - 24) என்ற கருத்து இதற்கும் பொருந்தும். இவ்வாறு திருக்கயிலாயத்தை மூன்று திருத்தாண்டகங்களாற் றுதித்தமையும், அதுவும் "அர்ச்சனை பாட்டேயாகும்" (216) என்றபடி அருச்சனை யுருவமாகப் போற்றித் திருத்தாண்டகங்களால் துதித்த சிறப்பும் குறிக்க. "விண்மேலு மேலு நிமிர்ந்தாய் போற்றி மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி" (7) என்று துதித்த குறிப்பின்படி ஒருமுறை, இருமுறை, மும்முறையும் விருப்பம் நிகழ்ந்தமையால், மொழி விரும்பி என்றார். பதிகங்களின் குறிப்புப் பார்க்க. இங்ஙனமன்றி "வேற்றுமாகி விண்ணாகி நின்றா" ராகிய சிவபெருமானது மொழி விரும்பி - அசரீரியால் கூறிய ஆணையை மேற்கொண்டு என்றுரைப்பாரு முண்டு. வேற்றுமாகி - விண்ணாகி - விண்ணாகி அதனின் வேறுமாகி என்க. வேற்றும் - வெவ்வேறு பூதங்கள் என்றலுமாம். வேற்றுமாகி - இறைவர் உயிர்களின் வேறாகி நிற்குநிலை. வேற்றுமாகி - முனிவராகி; விண்ணாகி - விண்ணில் மறைந்து என்ற குறிப்பும் காண்க. ஆற்றல் பெற்றவர் - செயலின்றித் தங்கிக் கிடந்த நிலையினின்று இறைவரது திருவருளால் எழுந்து போற்றிச் செயல்புரியும் ஆற்றலைப் பெற்ற நாயனார். ஆற்றல் பெற்ற அவ் - என்பது பாடமாயின் அவ்வண்ணலாருடைய அஞ்செழுத்தின் ஆற்றல் குறிப்பதாகக் கூட்டி உரைக்க. அஞ்செழுத்தின் ஆற்றலாவது அடைந்தாரை ஆழாது காத்துக் கரைசேர்க்கும வலிமை. "அஞ்செழுத்தின் புணை" (திருவா). அஞ்செழுத்தோதி - வடகயிலைச் சாரலில் புனற்றடத்துள் மூழ்கித் திருவையாற்றிற் சிவக்காட்சி காணப்புகும் பெருஞ்செயலிற் புகுகின்றாராதலின் இங்குத் திருவைந்தெழுத்தினை ஓதி மூழ்கினார். "தழைத்த வஞ்செழுத் தோதினா ரேறினார் தட்டில்" (544) என்றபடி அமர்நீதி நாயனார் துலைத்தட்டில் ஏறியபோது இவ்வாறே செய்தமையும், "அஞ்செழுத்தை வாய்ந்த தொண்ட ரெடுத்தோதி மணிநீர் வாவி மூழ்கினார்" (தண்டி - புரா - 19) என்றபடி திருவருள் வழியே தாம் கண் பெறவும் அமணர் கண்ணிழக்கவும் செய்த சூளுறவின் மெய்த்தன்மை காட்டுதற்குத் திருவாரூரில் குளத்தில் மூழ்கப் புகும்போது தண்டியடிகணாயனார் இவ்வாறே திருவைந்தெழுத்தோதி மூழ்கியமையும், "எரிவலங் கொள்வார், அண்டர்பிரான் றிருநாமத் தஞ்செழுத்து மெடுத்தோதி மண்டுதழற் பிழம்பினிடை மகிழ்ந்தருளி யுள்புக்கார்" (புகழ்ச் சோழர் - புரா - 39) என்றபடி சடைமுடைிச்சிரத்தினைப் பொற்கலத்தேந்தித் தீயிடைப் புகும்போது புகழ்ச்சோழ நாயனார் இவ்வாறே புரிந்தமையும், பிறவும் இங்கு நினைவு கூர்தற்பாலன. பால் தடம்புனல் பொய்கையில் - பால் - பான்மை; விதி. இறைவர் தாம் விதித்த நியதி உருவாய் அமைத்து உடன் கொண்டுவந்தமை (1626) குறிப்பு. |